Astrology: தினமும் ராசிபலன் பார்க்கலாமா?.. ஜாதகத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம்!
நம்மில் பலரும் ஒரு விஷயத்தை செய்கிறார்கள் என்றால் அன்றை நாளின் ராசி பலன்கள் பார்ப்பார்கள். ஆனால் அதனை மட்டுமே பார்த்து ஒரு காரியத்தில் நாம் இறங்கக்கூடாது.

ஆன்மிகத்தில் ஆர்வம் இருக்கும் பலருக்கும் ஜாதகம் மீது அளவு கடந்த நம்பிக்கை இருக்கும். அப்படியான நிலையில் 30 வயதுக்கு மேல் திருமணம் செய்கிறார்கள் என்றால் ஜாதகம் பார்க்க வேண்டாம் என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது. ஆனால் ஒருவருக்கு பிறப்பு முதல் இறப்பு வரை நிகழும் அத்தனை விஷயங்களும் ஜாதகத்தை அடிப்படையாக கொண்டது தான் என சாஸ்திரம் சொல்கிறது. ஜாதகம் பார்க்கும்போது கணிக்கப்படுகிற முக்கிய விஷயம் என்பது ஒருவரையொருவர் சகித்துக் கொண்டு வாழ முடியுமா என்பது தான்.
காரணம் எல்லாரிடம் எதிர்மறை குணங்கள் இருக்கும். அதனை எதிரில் இருப்பவர்களால் சமாளிக்க முடியுமா என்பதை எந்த வயதானாலும் பார்க்க வேண்டும் என்பது தான் சொல்லப்படுகிறது. நம்மில் பலரும் ஒரு விஷயத்தை செய்கிறார்கள் என்றால் அன்றை நாளின் ராசி பலன்கள் பார்ப்பார்கள். ஆனால் அதனை மட்டுமே பார்த்து ஒரு காரியத்தில் நாம் இறங்கக்கூடாது. அந்த ராசி பலன்கள் 20 சதவிகிதம் தான் உங்களுக்கு கைக்கொடுக்கும்.
80 சதவிகிதம் ஜாதகத்தில் உள்ள தசாபுத்தி தான் அடிப்படையாக இருக்கும். இது ஒருவரின் வாழ்க்கையில் நல்ல, கெட்ட பலன்களை தீர்மானிக்க உதவுகிறது. ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட காலத்தில் எந்த மாதிரியான கிரகத்தின் ஆதிக்கம் இருக்கும் என்பதை தசாபுத்தி குறிக்கும். ஜாதகத்தில் நாம் முக்கியமாக பார்க்க வேண்டிய லக்னம் தான். அதுதான் உங்கள் தலைவிதி என பொருள் கொள்ளலாம்.
ராசி, நட்சத்திரத்தை விட லக்னம் என்பது தான் ஜாதகத்தில் மிக முக்கியமாகும். நாம் தினமும் ராசிபலன்கள் பார்க்கலாம். அதனை மட்டுமே நம்பக்கூடாது. ஒரு ராசியில் லட்சக்கணக்கானோர் இருப்பார்கள். ஆனால் ஜாதக அமைப்பு என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். சனிப்பெயர்ச்சி, குரு பெயர்ச்சி என்பது வருடாந்திர கோள்கள். அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். சனி ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இரண்டரை ஆண்டுகள் ஆகும். குரு பெயர்ச்சி ஆண்டுக்கு ஒருமுறை இருக்கும். அதனால் மற்ற கோள்கள் பெயர்ச்சியை விட இவை இரண்டையும் பெரிதாக நாம் பார்க்கிறோம்.
பெயர்ச்சியை மட்டும் அடிப்படையாக கொண்டு பரிகாரம் செய்வது அது செட்டாகாது. குரு மற்றும் சனி கிரகங்கள் பெயர்ச்சியடையும்போது நமக்கு பாதகமாக இருந்தால் நம்முடைய ஜாதகத்தில் குரு திசையும், சனி திசையும் நடந்தால் மட்டுமே நாம் பரிகாரம் செய்ய வேண்டும். பொதுவாக திருமணம் செய்யக்கூடிய பெண், ஆணின் ஜாதகத்தை பார்த்து பொருத்தம் காண்பது போல, தனிப்பட்ட முறையில் அவர்களின் ஜாதகம் பார்க்க வேண்டும். அது நிச்சயம் நம்பிக்கைக்குரிய ஒன்றாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
(இவை அனைத்தும் ஆன்மிக ரீதியான நம்பிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களாகும். இதற்கு ஏபிபி நாடு பொறுப்பில்லை)





















