தேனி : பிரபலமான வீரபாண்டி அம்மன் கோவிலின் சிறப்புகள் தெரியுமா?
தேனி மாவட்டத்தில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிகவும் பிரபலமான வீரபாண்டி கெளமாரியம்மன் கோவில் திருவிழா மே மாதம் 10-ஆம் தேதி தொடங்கு 17-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.
தேனி மாவட்டத்தில் நடக்கும் திருவிழாக்களிலேயே மிகவும் பெரிய சித்திரை திருவிழா இது தான். தீராத நோய் தீர்க்கும் அற்புதசக்யாகவே அம்மனை பக்தர்கள் வணங்கி வருகின்றனர். இதனால் நோய் கண்டவுடன் அம்மனுக்கு நேர்ந்து கொள்கின்றனர். நோய் குணமாகிய உடன் நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். விழாக்காலங்களில் அம்மன் தினமும் ஒரு பட்டு உடுத்தி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
அம்மன் முத்துப்பல்லக்கிலும், பூ பல்லக்கிலும் பவனி வருவார். கோயில் தீர்த்தமாக கோயில் அருகில் உள்ள கிணற்று நீரையும், கண்ணீஸ்வரமுடையார் தீர்த்தமாக முல்லை ஆற்று நீரையும் பயன்படுத்துகின்றனர்.
இந்த கோயிலானது தேனியில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இப்போது இந்த கோயிலின் வரலாற்றை சுருக்கமாக பார்க்கலாம். ஆதிகாலத்தில் ஒரு அசுரனை வெல்வதற்காக உமாதேவி அம்சம் பெற்ற கௌமாரியம்மன் இன்றைய தலம் இருக்கும் அடர்ந்த வனத்தில் தவமியற்றினார். அசுரன் கௌமாரியை தூக்கிச் செல்ல முயன்றான்.
இதனை அறிந்த கௌமாரி, பக்கத்தில் இருந்த அருகம்புல்லை எடுத்து அசுரன் மீது வீச, அது அசுரனை இரு கூறாக பிரித்து அழித்தார். அப்போது தேவர்கள் மலர்மாறி தூவ கௌமாரி இங்கேயே கன்னித்தெய்வமானார்.
அவர் வழிபட்ட சிவலிங்கத்திற்கு திருக்கண்ணீஸ்வரர் என பெயர் இட்டார். வீரபாண்டிய மன்னன் மதுரையில் ஆட்சி நடத்திய போது, ஊழ்வினையால் இரண்டு கண்களும் ஒளி இழக்க நேரிட்டது. மன்னன் இறைவனை வேண்டினான். இறைவனும் மன்னன் கனவில் தோன்றி, இன்றைய வீரபாண்டி தலங்கள் இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டி, நீ வைகை கரை ஓரமாக சென்று, நிம்பா ஆரணியத்தில் உமாதேவி அம்சம் பெற்ற கௌமாரி தவமியற்றுகிறாள். அங்கு சென்று அவளை வணங்கு. உன் கண்கள் இருள் நீங்கி ஒளி பெரும் என்றார்.
அதேபோல் கௌமாரியை வணங்கிய வீரபாண்டிய மன்னர் ஒரு கண்ணையும், கௌமாரி கட்டளைப்படி திருக்கண்ணீஸ்வரமுடையாரை வணங்கிய மன்னன் மறு கண்ணையும் பெற்றார். பார்வை பெற்ற மன்னன் கண்ணீஸ்வரருக்கு கற்கோயில் அமைத்து வழிபாடு செய்தான். அதுவே வீரபாண்டி என அழைக்கப்பெற்றது. பிற்காலத்தில் வீரபாண்டியை தலைமையிடமாக கொண்டு வீரபாண்டிய மன்னனின் பேரன் ராஜசிங்கன் வீரபாண்டி வட்டத்தை ஆட்சி நடத்தினார்.
அப்போது முதல் கண்நோய் கண்டவர்கள், அம்மை நோய் கண்டவர்கள், தீராத நோய் கண்டவர்கள் என அனைத்து தரப்பினரும் அம்மனை தரிசித்து தீர்த்தமும், அருளும் பெற்று விமோசனம் அடைகின்றனர்.
இந்த கோயில் முன் கருப்பணசாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இதுவே இக்கோயிலுக்கு காவல் தெய்வமாக உள்ளது. காவல் தெய்வத்தை கடந்து முன்மண்டபம், அதனை அடுத்து கம்பந்தடி மண்டபம் அமைந்துள்ளது. இந்த கம்பந்தடி மண்டபத்தில் தான் சித்திரை திருவிழா கம்பம் நடப்படுகிறது. கம்பந்தடி மண்டபத்தை கடந்து மகாமண்டபம் அமைந்துள்ளது.
கடந்து முன் செல்லும் கருவறையில் கௌமாரி கன்னி தெய்வமாக காட்சியளிக்கிறார். கொரோனா வைரஸ் பரவல் மற்றும் பொதுமுடக்கத்தின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவில் திருவிழா கொண்டாடப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் வரும் மே மாதம் 10-ஆம் தேதி தொடங்கு 17-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இதனால் திருவிழா கொண்டாடுவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்