விழுப்புரம் விவசாயி புதிய முயற்சி; 30 ஏக்கர் நிலத்தில் பாமாயில் எண்ணெய் செடிகள் நடவு
விழுப்புரம் : 25 முதல் 30 ஆண்டுகளுக்கு நிலையான மாதம் வருமானத்தை தரும் பாமாயில் சாகுபடி.
விழுப்புரத்தில் தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் மற்றும் எண்ணெய் பனைத்திட்டம் 2023-24 ஆண்டு சார்பில் கடந்த 25ம் தேதி தொடங்கிய எண்ணெய் பனை நடவு தொடக்க விழா வரும் 5ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் குறைந்தபட்சம் 2023-2024ம் ஆண்டு காலாண்டிற்கு 60 ஹெக்டர் நிலப்பரப்பில் எண்ணெய் பண்ணை நடவு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள எசாலம் கிராமத்தில், ஆனந்த கிருஷ்ணன் என்கிற விவசாயி தனது விவசாய நிலத்தில் சுமார் 30 ஏக்கர் நிலத்தில் பாமாயில் எண்ணெய் செடிகள் நடவு செய்யும் பணிகளை தொடங்கியுள்ளார். இந்த பாமாயில் குலைகளை கோத்ரேஜ் அக்ரோவெட் லிமிடெட் பாமாயில் பிரிவு நேரடியாக கொள்முதல் செய்து வருகின்றனர்.
NMEO-OP தேசிய சமையல் எண்ணெய்கள், எண்ணெய் பனை திட்டத்தின் மூலம் 2037 ஆம் ஆண்டு வரை பாமாயில் பழ குலைகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான மத்திய மாநில அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையாக ஒரு டன்னுக்கு 13,346 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக, விழுப்புர மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் அன்பழகன் தெரிவித்தார்.
பாமாயில் சாகுபடிக்கு தமிழக அரசின் தோட்டக்கலை துறை வழங்கும் மானிய உதவிகள் குறித்து விவரங்கள் :
அரசின் முழு மானியத்தில் கன்றுகள் விநியோகிக்கப்படுகிறது என்றும், மூன்று வருடங்களுக்கு பராமரிப்பு செய்வதற்காக மானியம் வழங்கப்படுவதாகவும் இதுமட்டுமின்றி மூன்று வருடங்களுக்கு ஊடுபயிர் மானியமும், சொட்டுநீர் பாசனத்திற்கு மானியம் வழங்கப்படுவதாக அன்பழகன் தெரிவித்தார். மானியத்தில் அறுவடை கருவிகளும் முன்னுரிமை அடிப்படையில் மின் மோட்டார் மற்றும் ஆழ்துளை கிணறும் வழங்கப்படுவதாக அன்பழகன் தெரிவித்தார்.
பாமாயில் மர சாகுபடி சிறப்புகள்:
மற்ற பயிர்களை காட்டிலும், குறைவான சாகுபடி செலவு, வேலையாட்கள் தேவைகள் குறைவு, மழை வெள்ளம், களவு சேதம் இல்லை என கூறப்படுகிறது. நீர், உர நிர்வாகத்திற்கு ஏற்ற மகத்தான மகசூல் கிடைக்கும் எனவும் தரமான கன்றுகள் விநியோகம், உயர் தொழில்நுட்ப ஆலோசனைகள், முத்தரப்பு அடிப்படையில் வங்கி கடன், இருதரப்பு ஒப்பந்த அடிப்படையில் உத்தரவாத கொள்முதல், பெரு விவசாயிகளின் பாதுகாப்பான தொழில் முறை, 25 முதல் 30 ஆண்டுகளுக்கு நிலையான மாதம் வருமானத்தை இந்த பாமாயில் மர சாகுபடி தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாமாயில் மர மகசூல்
பாமாயில் மரம் மூன்று முதல் நான்கு வருடத்தில் ஐந்து டன் அளவிலான மகசூல் ஈட்ட முடியும். நான்கு முதல் ஐந்து வருடத்தில் 12 டன்களும், ஐந்து முதல் ஆறு வருடத்தில் 25 டன்களும், 6 முதல் 30 வருடம் வரை 30 டன்களில் மகசூல் ஈட்ட முடியும் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாமாயில் செடிகளில் நடவு செய்வதற்கு ஒரு ஹெக்டருக்கு 143 மரங்கள் தேவைப்படுகிறது. குறைந்தபட்சம் ஒரு மரத்திலிருந்து 12 குலைகள் அறுவடை செய்யமுடியும். ஒரு பழகுலையின் சராசரி எடை 25 கிலோ இருக்க வேண்டும் எனவும், நல்ல பராமரிப்பு இருந்தால் நிச்சயம் பாமாயில் அதிக அளவில் லாபம் பார்க்க முடியும் என தோட்டக்கலை துறை அதிகாரி கூறுகின்றனர். பாமாயில் நல்ல லாபம் தரும் என்ற நம்பிக்கையில் 30 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர் செய்து உள்ளதாகவும் நல்ல மகசூல் ஈட்டி லாபம் பார்க்கலாம் என விவசாயி ஆனந்த கிருஷ்ணன் தெரிவித்தார்.