தண்ணீர் இருக்கிற ஊரணியில் வண்டல் மண் எடுக்க முடியாதே; வேறு இடங்களை சொல்லுங்க ஆபீசர்- விவசாயிகள்
விவசாயிகள் விரும்பும் ஊரணியில் வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளில் இருந்து மண் எடுத்து வரும் பாதை தூர்ந்து போய் உள்ளது.
வண்டல் மண் எடுப்பதற்கு அரசு அனுமதித்துள்ள நீர் நிலைகள் கோடை மழையால் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் வேறு ஊரணிகளில் வண்டல் மண் அள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வட்டார ஊராட்சி பாசனக் கண்மாய் ஆகியவற்றில் இருந்து விவசாய பயன்பாட்டுக்காக வண்டல் மண் எடுப்பதற்கு 875 நீர் நிலைகளில் இருந்து அனுமதி அளித்து அரசிதழில் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில், வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட வட்டத்துக்கு உட்பட்ட வட்டாட்சியருக்கு ஆன்லைன் மூலம் பட்டா, ஆதார், புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் உரிய விசாரணை செய்த பின்னர் ஒரு வாரக்காலத்துககுள் வட்டாட்சியர் அனுமதி உத்தரவு வழங்கப்பட வேண்டுமென ஆட்சியர் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வண்டல் மண் எடுக்கப்படும் ஊருணி, மண் கொண்டு செல்லப்படும் நிலம் ஒரே வட்டத்துக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுளளது. தற்போது கோடை மழை காரணமாக பெரும்பாலான நீர்நிலைகளில் தண்ணீர் உள்ளதால், மண் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வேறு ஊருணிகளில் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கரிசல்பூமி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வரதராஜன் கூறும்போது, "கோடை மழை காரணமாக பெரும்பாலான ஊருணிகளில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள நீர் நிலைகளில், பெரும்பாலானவற்றில் கடந்த 40 நாட்களாக பெய்து வரும் கோடை மழை காரணமாக நீர் வரத்து ஏற்பட்டு தண்ணீர் தேங்கி உள்ளது. மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ள நீர்நிலைகளில் அனுமதி வழங்கப்பட்டுள்ள நாட்களுக்குள் வண்டல் மண் எடுக்க வேண்டும். இல்லையென்றால் அனுமதி மறுக்கப்படும். அதனால் மாற்று ஏற்பாடாக வறண்டு போய் உள்ள ஒரு சில நீர்நிலைகளில் மண் அள்ள அனுமதிக்க வேண்டும்.
எட்டயபுரம், விளாத்திகுளம், கோவில்பட்டி வட்டங்களை பொருத்தவரை ஒவ்வொன்று நிலப்பரப்பையொட்டி அமைந்துள்ளது. ஒருவேளை அருகே உள்ள நீர்நிலைகள் தேடினால், அடுத்த வட்டத்தின் எல்லை வந்துவிடும். எனவே, அடுத்த வட்டம் என தடுக்காமல் வண்டல் மண் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும். மேலும், அரசு அனுமதித்துள்ள நீர்நிலை பட்டியலில் பல கிராமங்களில் உள்ள ஊருணிகள் விடுபட்டுள்ளன. அவற்றுக்கும் சிறப்பு அனுமதி தர வேண்டும். சில ஊராட்சிகளில் ஒரே ஒரு ஊருணியில் இருந்து மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுளளது. ஒரு ஊராட்சிக்கு குறைந்தபட்சம் 2-க்கும் மேற்பட்ட ஊருணிகளில் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்.
அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள வட்டம், ஊராட்சி, குளம் ஆகியவை மாறுபட்டுள்ளன. உதாரணத்துக்கு விளாத்திகுளம் மற்றும் எட்டயபுரம் தாலுகாக்களில் உள்ள குளங்கள் வட்டங்களை மாற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது பிரச்சினை ஏற்படுகிறது. இதனை திருத்தம் செய்ய வேண்டும். வெகு தூரத்தில் இருந்து மண் எடுத்து வருவதற்கு பதிலாக, விவசாயிகள் விரும்பும் ஊருணியில் வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளில் இருந்து மண் எடுத்து வரும் பாதை தூர்ந்து போய் உள்ளது. எனவே, சம்பந்தபட்ட ஊராட்சிகள் பாதை அமைத்து தர வேண்டும்" என்றார்.