2023ம் ஆண்டில் வறட்சியில் துவங்கி வெள்ளத்தில் முடிந்த விவசாயம் - விரக்தியில் தூத்துக்குடி விவசாயிகள்
2023 ஆண்டின் தொடக்கத்தில் வறட்சியில் சிக்கி தவித்த விவசாயிகள், முடிவில் வெள்ளத்தில் சிக்கி உள்ளனர். இந்த விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை முற்றிலும் பொய்த்து போனது. அதுபோல இந்த 2023 ஆம் ஆண்டு தென் மேற்கு பருவ மழையும் கைகொடுக்கவில்லை. இதனால் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான வறட்சி ஏற்பட்டது. அணைகளில் போதுமான நீர் இருப்பு இல்லை. குளங்களும் வறண்டுவிட்டன. விவசாயம் கேள்விக் குறியாகிவிட்டது. கால்நடைகள் கூட தண்ணீர் கிடைக்காமல் பரிதவிக்கும் சூழல் ஏற்பட்டது. உடன்குடி, சாத்தான்குளம், திருச்செந்தூர், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக் கணக்கான தென்னை மற்றும் பனை மரங்கள் கருகி வருகின்றன. கடும் வறட்சியை தாங்கி நிற்கக்கூடிய பனைமரங்கள் கூட கருகுவதை பார்த்து விவசாயிகள் கண்ணீர் வடிக்கும் நிலை ஏற்பட்டது. மரங்களை காக்க தங்களால் முடிந்தவற்றை செய்து போராடினர்.
தூத்துக்குடி மாவட்டத்தின் தென்பகுதியில் தாமிரபரணி ஆற்றுப்பாசனத்தில் நெல், வாழை உள்ளிட்ட பயிர்களும், வடபகுதியில் மானாவாரி பயிர்களாக சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி, வெங்காயம், மிளகாய் உள்ளிட்டவை பயிரிடப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை போதிய அளவில் பெய்யாததால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. 2023 ஆண்டின் தொடக்கம் முதலே தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். அதே போன்று தாமிரபரணி ஆறும் வரலாறு காணாத வகையில் வறண்டு காணப்பட்டது. உறைகிணறுகளில் இருந்து தண்ணீரை உறிஞ்ச முடியாத நிலையில் ஆற்றுக்குள் வாய்க்காலை தோண்டும் நிலை இருந்து வந்தது.
அதன்பிறகு வடகிழக்கு பருவமழை விவசாயிகளுக்கு ஓரளவு நம்பிக்கை கொடுத்தது. நவம்பர் மாதத்தில் தொடர்ச்சியாக மிதமான மழை பெய்து வந்தது. இதனால் நவம்பர் மாதம் இறுதியில் 450 மில்லி மீட்டர் மழையை கடந்தது. இதனால் விவசாயிகள் உற்சாகத்துடன் விவசாய பணிகளை தொடங்கினர். மானாவாரி விவசாயிகள் சுமார் 60 ஆயிரம் எக்டேர் வரை சிறுதானிய பயிர்களையும், 75 ஆயிரம் எக்டேர் பாசிப்பயறு, 7 ஆயிரம் எக்டேர் பருத்தி மற்றும் வெங்காயம், மிளகாய் பயிரிடப்பட்டு இருந்தது. இந்த பயிர்களுக்கு தேவையான அளவு மழை பெய்து வந்தது. இதனால் செழித்து வளர்ந்து வந்தன. அதே போன்று நெல் சாகுபடியும் நடந்து வந்தது. சுமார் 8 ஆயிரம் ஏக்கர் வரை நெல் சாகுபடி தொடங்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் கன்னியாகுமரி கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வறட்சியின் பிடியில் இருந்து மீண்ட தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளை வெள்ளத்தின் பிடியில் தள்ளி பெரும் சோகத்தை தந்து சென்று விட்டது. கடந்த 17, 18-ந் தேதிகளில் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் 958.2 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்கள் நிரம்பி அதிகப்படியான தண்ணீரை தாங்க முடியாத குளங்கள் உடைந்தன. இதனால் வெள்ளநீர் குடியிருப்புகள், பயிர்கள் அனைத்தையும் சூறையாடியது. தாமிரபரணி பாசனத்தின் கீழ் பயிரிடப்பட்டு இருந்த நெல், வாழை, வெற்றிலை உள்ளிட்ட அனைத்தும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு விட்டது. அதே நேரத்தில் கனமழையால் மானாவாரி பகுதியில் வயல்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் சேதம் அடைந்து உள்ளன. இதனால் பெரும் இழப்பை விவசாயிகள் சந்தித்து உள்ளனர்.
2022 ஆம் ஆண்டு வறட்சியில் தவித்தோம், 2023 ல் தென்மேற்கு பருவமழையும் கை கொடுக்கவில்லை, வடகிழக்கு பருவமழை ஏமாத்துமோ என ஏங்கி தவித்தோம், நவம்பரில் கொஞ்சோண்டு பெய்து ஓரளவு நம்பிக்கைய கொடுத்திச்சி, சரின்னு விதைப்பை துவக்கினோம், டிசம்பர் 17,18களில் வராது வந்த மாமழையால் விதைச்சதுல்லாம் மூழ்கி போச்சி எப்படி மீளப்போறோம்னு தெரில என்கின்றனர் விவசாயிகள்