கரும்பு சாகுபடியில் சிக்கன நீர் நிர்வாகம் செய்ய வேளாண்மை துறை வாயிலாக சொட்டுநீர் கருவிகள் மானியத்தில் பெற அழைப்பு
பிரதமரின் நுண்நீர் பாசன திட்டத்தின் மூலம் கரும்பு சாகுபடி செய்துள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு 100% மானியத்திலும், இத பொது விவசாயிகளுக்கு 70 % மானியத்திலும் சொட்டுநீர் பாசன கருவிகள் அமைத்து தரப்படுகிறது.
தஞ்சாவூர்: கரும்பு சாகுபடியில் சிக்கன நீர் நிர்வாகம் செய்ய வேளாண்மை - உழவர் நலத்துறை மூலம் சொட்டுநீர் கருவிகள் மானியத்தில் பெறலாம்.
நீரின்றி அமையாது உலகு என்ற குறளுக்கேற்ப வேளாண்மை வளர்ச்சிக்கு அடிப்படையான இயற்கை வளம் நீர் ஆகும். நீர்வளம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதற்கு காரணம் பெருகி வரும் மக்கள் தொகையால் நீரினை அதிக அளவு உபயோகப்படுத்துவதாகும்.
கரும்பிற்கு 2000 முதல் 2500 மில்லிமீட்டம் நீர் தேவைப்படுகிறது. கரும்பு பயிர் ஒரு லாபகரமான பணப்பயிர். சிக்கன நீர்பாசன முறையை கரும்பில் மேற்ொண்டு நீர் பற்றாக்குறையை சமாளிப்பதுடன் மொத்த விளைச்சலை அதிகரிக்கலாம் என தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் நல்லமுத்து ராஜா தெரிவித்துள்ளார்.
ஆரம்ப காலங்களில் தமிழகத்தின் நீர்வள ஆதாரங்கள் கால்வாய்கள், ஏரிகள், கிணறுகள் ஆகும். முந்தைய காலங்களின் கால்வாய், ஏரிப்பாசன பரப்பு அதிகளவிலும், கிணற்று பாசன பரப்பு குறைந்தும் இருந்தது. சமீபகாலங்களில் கால்வாய் ஏரிப்பாசன பரப்பு குறைந்தும் கிணற்று பாசன பரப்பு 54 சதம் உயர்ந்தும் உள்ளது. இதற்கு காரணம் காடுகளை அழிப்பதாலும், மழையில் சேமிப்பு குறைவதாலும், சீரான மழை பொழிவு குறைந்து நிலத்தடி நீர்வளம் குறைகிறது. நாம் வாழும் இந்த பூமியில் 30 சதம் மட்டுமே நிலப்பரப்பாகும். மீதம் உள்ள 70 சதமும் நீர்பரப்பாகதான் உள்ளது. ஆனால் இந்த 30 சத மக்களுக்குத் தேவையான உணவை அளிக்கும் போதிய வசதியைக் கூட நாம் இழந்து வருகிறோம்.
எவை மழை நீர் சேமிக்கும் முறையை அதிகரித்து நிலத்தடி நீரை பெருக்குவதும், சிக்கன நீர்ப்பாசன முறையை பின்பற்றவதும் அவசியமாகிறது.
நிலத்தடி நீர் பாசனம்: நிலத்தடி நீர்ப்பாசனம் அல்லது அடிப்பரப்பு நீர்ப்பாசனம் என்பது வழக்கத்தில் உள்ள சொட்டு நீர்ப்பாசனம் போல் அல்லாமல் பயிருக்கு மிக துல்லியமான அளவு நீரினை சரியான அளவு உரம், பூச்சிக்கொல்லி மருந்துடன் வேருக்கு நேரடியாக கொடுப்பதாகும்.
முக்கிய நோக்கம்
பக்கவாட்டில் நீர் பரவுதல், மண்ணில் கீழ் நோக்கிய நீர் கசிவைக் குறைத்தல்.
பயிரின் வேரைச்சுற்றி நீர் இருத்தல். வேரின் நான்கு புறமும் வட்ட வடிவில் நீரை பரவச் செய்து மண்ணில் கீழ்நோக்கிய நீர் கசிவு பக்கவாட்டில் நீர் கசிவதைக் குறைப்பதே இதன் முக்கிய குறிக்கோளாகும். மேலும் உரம், பூச்சிக்கொல்லி மருந்தினை நீருடன் கலந்து கொடுப்பதன் மூலம் அதிக தரமான விளைச்சல் கிடைக்கிறது.
சொட்டு நீர் பாசனம் / நிலத்தடி நீர் பாசனம் வேறுபாடுகள்
சொட்டுநீர் பாசனத்தில் சொட்டுவான் கீழ்நோக்கி இருப்பதால் கீழ்நோக்கிய நீர்க்ககிவு பக்கவாட்டில் பரவுதல் அதிகமாக இருக்கும். ஆனால் நிலத்தடி நீர் பாசனத்தில் சொட்டுவான் மேல் நோக்கி இருக்குமாறு அமைப்பதால் வேரின் நான்கு புறமும் வட்ட வடிவில் நீர்பரவி பயிரின் வேரை எப்பொழுதும் ஈரத்துடன் வைத்துக் கொள்கிறது. இதனால் பயிர் எப்பொழுதும் செழிப்பாக காணப்படும். மேலும் மண்ணில் காற்றோட்டத்தை அதிகரிக்கச் செய்து மண்ணில் நீர் நுண்புழை நீர்பரவும் விதத்தை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் மண்ணில் நுண்ணுயிர் பெருகி மண்வளம் கூடுகிறது.
நீர் பாசனம் அமைக்கும் முறை
25 முதல் 30 செமீ அளவு அதாவது முக்கால் அடி முதல் ஒரு அடிவரை ஆழமும், 40 செ.மீ அகலமும் உள்ள அகழியை நீள வாக்கில் எடுக்க வேண்டும். வரிசைக்கு வரிசை 5 அடி முதல் ஐந்தரை அடி வரை இருக்குமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.
குறைந்த செளவு உள் பக்கவாட்டுக் குழாய்களை அகழியின் நடுவில் 25-30 செமீ ஆழத்தில் வைத்து சொட்டுவான் மேல்நோக்கி இருக்குமாறு அமைக்க வேண்டும். பின் அதன்மேல் 2.5 செ.மீ அளவு மண்ணை போட்டு மறைத்தல் வேண்டும்
இரு பகு கரணையின் பக்கவாட்டு குழாய்களுக்கு இருபுறமும் அடுக்கி பின் கரணை மூடும் அளவிற்கு மண்ணை பரப்பி மூடுதல் வேண்டும்.
மீதம் உள்ள அகழியினை பயிர் நன்கு வளர்ந்த பின் (40 - 45 வது நாள்) மூடி பயிருக்கு மண்ணை அணைக்க வேண்டும்
நன்மைகள்
ஒரே சீராக பயிர் வளர்ச்சி காணப்படும். குறைந்த அளவு கீழ்நோக்கிய நீர் கசிவு பக்கவாட்டில் நீர்பரவுதல் குறைய வாய்ப்புள்ளது. காற்று, சூரிய வெப்பத்தினால் மண்ணின் பேற்பரப்பில் உள்ள ஈரப்பதம் வீணாதல் குறையும். பயிருக்கு தேவையான அளவு நீரினை மிக சரியான அளவு நீருடன் உரம், பூச்சிக்ொல்லி மருந்தினை கொடுப்பதன் மூலம் பயிரின் தரமும், விளைச்சலும் அதிகரிக்கிறது. பூச்சி, ோய் தாக்குதல் குறைகிறது. வரிசைக்கு வரிசை பயிரின் இடையே களை முளைத்தல் குறையும். பரந்த மிக துரிதமாக வேர் வளர்ச்சி அடையும். அனைத்திற்கும் மேலாக நீர் சிக்கனமாக செலவாகும்.
பிரதமரின் நுண்நீர் பாசன திட்டத்தின் மூலம் கரும்பு சாகுபடி செய்துள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சத மானியத்திலும், இத பொது விவசாயிகளுக்கு 70 சத மானியத்திலும் சொட்டுநீர் பாசன கருவிகள் அமைத்து தரப்படுகிறது. மேலும் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சொட்டுநீர் கருவிகள் கூடுதலாக அமைக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மான்யத்தை பெற வட்டாரத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர்கள் அல்லது தங்கள் பகுதியில் உள்ள உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு. பயன்பெறலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.