அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெல்லில் புகையான் தாக்குதல்... வேங்கராயன்குடிகாடு விவசாயிகள் வேதனை
மழை தொடர்ந்தால் சாய்ந்துள்ள நெற்பயிர்கள் முளைக்க தொடங்கி விடும். இதனால் அறுவடை செய்தாலும் செலவு செய்த தொகை கூட கிடைக்காது. மிகவும் சிரமப்பட்டு கடன்வாங்கி சாகுபடி செய்த எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் வேங்கைராயன்குடிகாட்டில் அறுவடைக்கு தயாராக இருந்த 30 ஏக்கரும் மேல் குறுவை நெல் புகையான் தாக்குதலால் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
நடப்பாண்டு உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரித்தது. இந்நிலையில் அறுவடை 80 சதவீதம் முடிந்துள்ளது. இந்நிலையில் தஞ்சை மாவட்டம் வேங்கைராயன்குடிகாட்டில் விவசாயிகள் கோ-59 ரக நெல்லை சாகுபடி செய்திருந்தனர். பம்ப்செட் பாசனத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த குறுவை சாகுபடி பயிர்கள் நன்கு வளர்ந்து வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்திருந்தனர். தொடர்ந்து விவசாயிகள் பயிர்கள் செழித்து வளர உரம் மற்றும் பூச்சிக் கொல்லிகளை தெளித்தனர். இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நேரத்தில் தஞ்சை மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை விட்டு விட்டு பெய்தது.
இதில் வேங்கைராயன்குடிகாட்டில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 30 ஏக்கர் குறுவை நெல்லில் கடுமையான புகையான் தாக்குதல் ஏற்பட்டது. மேலும் தொடர்ந்து பெய்த மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியது. இதில் பயிர்கள் சாய்ந்து விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் தரப்பில் கூறுகையில், இப்பகுதியில் பம்ப்செட் பாசனம்தான் மேற்கொள்கிறோம். தற்போது கோ 59 ரக நெல்லை சாகுபடி செய்திருந்தோம். பயிர்கள் செழித்து வளர்ந்து வந்த நிலையில் அறுவடைக்கு 15 நாட்களே இருக்கும் தருவாயில் கடுமையான புகையான் தாக்குதலால் பயிர்கள் வெகுவாக சேதமடைந்துள்ளது. ஏக்கருக்கு ரூ.35 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்திருந்த நிலையில் தற்போது புகையான் தாக்குதலால் மகசூல் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தொடர்ந்து பெய்த மழையால் பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி உள்ளது. இதனால் முழுமையான பாதிப்பை சந்தித்துள்ளோம்.
எனவே மழை தொடர்ந்தால் சாய்ந்துள்ள நெற்பயிர்கள் முளைக்க தொடங்கி விடும். இதனால் அறுவடை செய்தாலும் செலவு செய்த தொகை கூட கிடைக்காது. மிகவும் சிரமப்பட்டு கடன்வாங்கி சாகுபடி செய்த எங்களுக்கு மிகவும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் இப்பகுதிகளை மீண்டும் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.






















