மாற்றி யோசிச்சா வெற்றிதாங்க... காலரை உயர்த்தும் வாழை விவசாயி மதியழகன்
தென்னையில் ஊடு பயிராக வாழையும், அதில் ஊடுபயிராக ஒரு போகத்திற்கு மட்டும் உளுந்தும் சாகுபடி செய்ய முடிவு செய்தேன். அதை மேற்கொண்டதில் நல்ல லாபம் கிடைத்துள்ளது.

தஞ்சாவூர்: மாற்றி யோசிச்சா எப்பவும் வெற்றிதான் என்று தென்னையில் ஊடுபயிராக வாழையும், வாழையில் ஊடு பயிராக உளுந்து சாகுபடி செய்து அறுவடையில் அமோகமான வருமானம் எடுத்து மற்ற விவசாயிகளுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறார் தஞ்சாவூர் மாவட்டம் வடுகக்குடியை சேர்ந்த விவசாயி மதியழகன்.
காவிரி டெல்டா பகுதிகளில் பெருமளவு நெல்தான் பிரதான பயிர். மேலும் பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில் தென்னை சாகுபடி அதிகம் நடந்து வருகிறது. தற்போது திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி பகுதிகளிலும் தென்னை மரங்கள் சாகுபடி அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதில் மாற்றி யோசித்தால் கூடுதல் வருமானம் பெறலாம் என்பதை தானே முன் உதாரணமாக இருந்து செய்து காட்டியுள்ளார் வாழை விவசாயி மதியழகன். தனது வயலில் வாழை இலைகள் அறுவடையில் மும்முரமாக இருந்தவரை சந்தித்தோம். அப்போது அவர் தனது தென்னை சாகுபடியில் வாழை, உளுந்து பயிரை ஊடு பயிராக சாகுபடி செய்து கூடுதல் வருமானம் பார்த்தது எப்படி என்று விளக்கமாக கூறினார்.

எந்த சாகுபடியை மேற்கொண்டாலும் அதில் கூடுதல் வருமானம் பாரக்க என்ன வழி என்பதைதான் விவசாயிகள் பார்க்க வேண்டும். அவ்வாறு மாற்றி யோசித்தால் வருமானத்தை அதிகரித்து கொள்ளலாம். அப்படிதான் 2 ஏக்கர் நிலத்தில் தென்னை சாகுபடி செய்ய முடிவு செய்தேன். தென்னையை மட்டும் சாகுபடி செய்தால் அது நீண்ட கால பயிர் என்பதால் உடன் லாபம் கிடைக்காது. அதனுடன் வேறு என்ன செய்யலாம் என்று யோசித்த போது வாழை சாகுபடி மேற்கொள்ள முடிவு செய்தேன். வாழை 2 ஆண்டு பயிர் அதிலும் உடன் வருவாய் பார்க்க முடியாது.
தென்னையில் ஊடு பயிராக வாழையும், அதில் ஊடுபயிராக ஒரு போகத்திற்கு மட்டும் உளுந்தும் சாகுபடி செய்ய முடிவு செய்தேன். அதை மேற்கொண்டதில் நல்ல லாபம் கிடைத்துள்ளது. தென்னங்கன்று நடவு செய்வதற்கு முன்னர், நிலத்தை நன்கு தயார் செய்ய வேண்டும். மேலும், சரியான தென்னை ரகங்களை தேர்வு செய்ய வேண்டும். தென்னை மரம் வளர, மணல் கலந்த களிமண் அல்லது கரிசல் மண் போன்றவை சிறந்தது.
தென்னை மரங்களுக்கு போதுமான அளவு தண்ணீர் தேவை. பருவமழையின் போது, நீர் சேகரித்து, தேவைப்பட்டால் நீர் பாசனம் செய்ய வேண்டும். தென்னை மரங்களுக்கு தேவையான உரங்களை அளித்து, மண்ணின் சத்துக்களை பராமரிக்க வேண்டும். நான் இயற்கை வழியில் ரசாயன உரங்கள் இன்றி தென்னை, வாழை, உளுந்து சாகுபடி மேற்கொண்டேன். பஞ்சகவ்யா உட்பட இயற்கை உரங்களை மட்டுமே சாகுபடி பயிர்களுக்கு தெளித்தேன்.
தென்னை மரங்களை பூச்சிகள் மற்றும் நோய்களிலிருந்து பாதுகாக்க முறையான பராமரிப்பு செய்ய வேண்டும். தென்னை மரங்களுக்கு இடையே, வேறு பயிர்களை பயிர்வது லாபகரமான ஒரு வழி அதை மேற்கொண்டேன். தென்னைக்கு தேரோட.. வாழைக்கு வண்டியோட… கரும்புக்கு ஏரோட…. நெல்லுக்கு நண்டோட… என்று நம் முன்னோர்கள் சொல்லுவாங்க. அப்படின்னா தென்னை மரங்களுக்கு இடையிலான இடைவெளி, வாழை மரங்களுக்கு இடைவெளி. இப்படித்தான் நம் முன்னோர்களின் விவசாய முறை இருந்தது.
அப்படி இடைவெளி இருந்தால் அவற்றின் இலைகள் மற்றும் ஓலைகள் நன்கு பரந்து வளரும். இந்த இடைவெளிகளையும் விட குறைவாக இருந்தால் மரங்கள் காய்க்காமல் நீண்டு ஒல்லியாக வளர்ந்து கொண்டு போகும். இதன்பின் காய்த்தாலும் காய்கள் திரட்சி இல்லாமல். சிறிதாக இருக்கும். தென்னை மரங்களில் பல வகை உண்டு குட்டை, நெட்டை மற்றும் இளநீர் ரகங்கள் என்று. தென்னை நடவு செய்யும்பொழுது விடவேண்டிய இடைவெளி குறைந்தது மரத்திற்கு மரம் இருபது அடி அதிகபட்சம் முப்பது அடி இருக்குமாறு நடவேண்டும்.
இதில் நெட்டை இரகங்கள் என்றால் 25 அடி × 25 அடி, குட்டை இரகங்கள் என்றால் 20 அடி × 20 அடி, வீரிய ஒட்டு இரகங்கள் என்றால் 26 அடி × 26 அடி இடைவெளி விட வேண்டும். அப்படிதான் நான் 25 அடி × 25 அடி இடைவெளியில் தென்னங்கன்றுகளை நட்டேன். இதில் ஊடுபயிராக 8 அடி இடைவெளிக்கு ஒரு கன்று வீதம் வாழைக்கன்றை சாகுபடி செய்தேன். இதில் ஊடு பயிராக உளுந்து பயிரை தெளித்தேன். இப்படி செய்யும் போது ஒரு போகம் மட்டும் உளுந்து சாகுபடி செய்யலாம். அது நமக்கு முதல் வருமானம். வாழை மரங்கள் வளர்ந்து விட்டால் அதில் ஊடு பயிர் சாகுபடி செய்ய முடியாது.
24 அடி இடைவெளி விட்டு நடுவதன் மூலம் ஒரு ஏக்கரில் 76 தென்னை மர கன்றுகள் நட்டேன். குறைந்தது 3 அடி ஆழமும் 3 அடி அகலமும் கொண்ட குழிகளை தோண்ட வேண்டும். அதில் 1 அடி மணல் நிரப்ப வேண்டும், 1 அடி இலை தழையும், மீதமுள்ள 1 அடிக்கு தொழு உரமும் நிரப்பி நீர் பாய்ச்ச வேண்டும். ஒரு மாதம் கழித்த பின்பு அந்த குழியின் ஆழம் 1.5 அடியாக இருக்கும். அதில் தென்னங்கன்றுகளை வைத்து மண் நிரப்பி நீர் பாய்ச்ச வேண்டும். வண்டுகள் வேரை அரிக்காமல் இருக்க வேப்பம் புண்ணாக்கு சேர்க்க வேண்டும். பின்பு பூக்கள் பூக்கும் வரை அதாவது நட்டு 3 ஆண்டுகள் வரை வாரத்திற்கு ஒருநாள் நீர் பாய்ச்சினால் போதுமானது. அதன்பின்பு பூத்து காய் வைக்கும் பொழுது அதிக அளவு தண்ணீர் தேவைப்படும்.
பின்பு ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் 5 கிலோ தொழு உரம் வைத்து நீர் பாய்ச்சினால் நல்ல பலன் கிடைக்கும். ஆட்டு சாணம் பயன்படுத்தும் பொழுது பூக்கள் நன்கு பூத்து காய் காய்க்கும். பூக்கள் உதிராது. தற்போது நான் சாகுபடி செய்துள்ள தென்னை மரங்களுக்கு இயற்கை உரம் மட்டுமே என்பதால் நன்கு வளர்ந்துள்ளது. நல்ல முறையில் பராமரித்தால் 60 நாட்களுக்கு ஒருமுறை அறுவடை செய்யலாம். தென்னை மரங்கள் நன்கு வளர்ந்த பின் தென்னை மரங்களுக்கு நடுவே ஊடுபயிராக நிலக்கடலை, மஞ்சள்,இஞ்சி போன்ற குறுகிய கால பயிர்களை சாகுபடி செய்யலாம்.
இப்போது இதில் ஊடுபயிராக சாகுபடி செய்த பூவன் ரக வாழை மரங்களும் செழிப்பாக வளர்ந்துள்ளது. இதற்கு எந்த விதமான உழவு முறையும் தேவையில்லை. லேசாக மண்ணைப் பறித்து, அதன் மேல் நேர்த்தி செய்த கன்றுகளை நட்டு மண் அணைக்க வேண்டும். நிலத்தைத் தயார் செய்யும் போது 50 டன் எருவை அடியுரமாக இட்டு, மண்ணுடன் கலக்க வேண்டும். அப்படி செய்வதால் மண் வளம் கூடும். மகசூலும் பெருகும். இப்போது வாழை நன்கு வளர்ந்து செழிப்பாக உள்ளது. இந்த வாழை சாகுபடியின் போதே ஒரு வருமானம் பார்க்க உளுந்து பயிரிட்டு இருந்தேன்.
இது 80 நாட்கள் பயிர்தான். வாழை நன்கு வளர்ந்து விட்டால் உளுந்து பயிரிட முடியாது. அதனால் வாழைக்கன்று நடும் போதே உளுந்தும் தெளித்தேன். நான் எதிர்பார்த்ததை விட கூடுதலாக அறுவடை செய்தேன். இதனால் மிக நீண்ட நாள் பயிரான தென்னை, 2 ஆண்டு பயிரான வாழை இவற்றில் இருந்து வருமானம் பார்ப்பதற்குள் 80 நாட்கள் உளுந்து தெளித்து அதில் வருமானம் பார்த்துவிட்டேன். விவசாயிகள் எப்பொழுதும் மாற்றி யோசித்து சாகுபடி செய்தால் நிச்சயம் நல்ல வருமானம் பார்க்கலாம். இனி வாழையில் தொடர் வருமானமும், அதற்கு பின்னர் தென்னையில் நீண்ட கால வருமானமும் எனக்கு கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இவர் இவ்வாறு தென்னையில் ஊடுபயிராக வாழை, உளுந்து சாகுபடி செய்திருந்ததை அறிந்த வேளாண் கல்லூரி மாணவர்கள் இவரது வயலுக்கு நேரடியாக வந்து சாகுபடி முறைகளையும், சாகுபடி செய்யப்பட்டு இருந்த விதத்தையும் பார்வையிட்டு இவரிடம் பயிற்சியும் பெற்று சென்றுள்ளனர். இதேபோல் மாவட்ட சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஒவ்வொரு மாதமும் 3வது வார ஞாயிற்றுக்கிழமையில் விவசாய சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்து விவசாயிகளை அழைத்து செல்கிறது. அந்த வகையில் இவரை சந்தித்து இந்த ஊடுபயிர்களை மற்ற விவசாயிகள் பார்வையிட்டு சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.





















