(Source: ECI/ABP News/ABP Majha)
சிறுதானியங்களை சாகுபடி செய்து உலக மக்களுக்கு ஊட்டச்சத்து அளிப்போம் - விவசாயிகளுக்கு வேளாண் துறை ஆலோசனை
அரிசி, கோதுமைக்கு மாற்றாக எதை சாப்பிடலாம் என்ற தேடலில் சர்வதேச அளவில் இன்று முன் நிற்பவை சிறுதானியங்கள்தான்.
தஞ்சாவூர்: உலக சிறுதானிய ஆண்டு 2023. சிறுதானியங்களை சாகுபடி செய்வோம். உலக மக்களுக்கு ஊட்டச்சத்து அளிப்போம் என உழவர்களுக்கு வேளாண் துறை ஆலோசனை வழங்கி உள்ளது.
சிறுதானியங்கள் எல்லா தட்ப வெப்ப சூழ்நிலைகளிலும் மண் வகைகளிலும் வறட்சி, பூச்சி நோய்களைத் தாங்கி வளரக்கூடிய பயிர்களாகும். சோளம், கம்பு ஆகிய பயிர்கள் சிறுதானியப் பயிர்களாகவும், கேழ்வரகு, தினை, சாமை, வரகு பனிவரகு, குதிரை வாலி ஆகிய பயிர்கள் சிறுதானிய பயிர்களாகவும் வகைப்படுத்தப்பட்டு உள்ளது.
இப்பயிர்கள் மண், நீர்வளம், குறைந்த மானாவாரி நிலங்களில் பயிரிடுவதற்கு ஏற்ற பயிர்களாகும். எனவே ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இப்பயிர்களின் முக்கியத்துவம் கருதியே இந்த ஆண்டு உலக சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானியப் பயிர்களை சாகுபடி செய்வோம் என தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் நல்லமுத்து ராஜா தெரிவித்துள்ளார்.
சிறுதானியங்கள் ஏழைகளின் உணவுப்பொருள் என கூறப்படுவதாலும், வளர்ந்து வரும் நகரமயமாக்கலும். நுகர்வோரின் அரிசி சார்ந்த உணவு பொருள்களின் விருப்பமும் சிறுதானியங்கள் விளையும் பரப்பளவு குறைந்து கொண்டு வருகிறது. அரிசி, கோதுமைக்கு மாற்றாக எதை சாப்பிடலாம் என்ற தேடலில் சர்வதேச அளவில் இன்று முன் நிற்பவை சிறுதானியங்கள்தான். இவற்றில் மிகுதியான தாதுப்பொருங்கள், உயிர்ச்சத்து, நார்ச்சத்து, குறைந்த அளவு கொழுப்புச்சத்து அடங்கியிருப்பதால் இவை சிறந்த ஆரோக்கியத்திற்கான உணவாக கருதப்படுகிறது. மேலும் இந்த தானியங்களில் உள்ள உணவு சத்துக்கள், குறிப்பாக கால்சியம், இரும்புச்சத்து பிற உணவு தானியங்களைவிட அதிகமாக உள்ளன. எனவே இவை பெண்கள், வளரும் குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் தன்மையுடையனவாக உள்ளன. அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் இவை சர்க்கரை வியாதி உடையவர்களுக்கு சிறந்த உணவாக கருதப்படுகிறது.
சிறுதானியங்கள் மிகவும் சத்து நிறைந்த குளூட்டன், அமிலத்தன்மையற்ற ஒரு உணவு வகை. அதனால்தான் இவை எளிதில் செரிமானமாகக் கூடிய தன்மை கொண்டதாக உள்ளன . இவற்றிர் அதிக சதவிகிதம் புரதம், அதிக அளவிலான நார்ச்சத்து, வைட்டமின் பி குழுமத்தை சார்ந்த நயாமின், தையமின், ரைபோபிலேவின், லெசிதின், வைட்டமின் ஈ ஆகியவை நிறைந்து காணப்படுகின்றன. இது மட்டுமின்றி இரும்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகிய சத்துகளும் அதிகமாக உள்ளன.
பைட்டோ கெமிக்கல்ஸ், பைட்டிக் அமிலம் ஆகியவை தானியங்களில் காணப்படுவதால், உடலில் தேவையற்ற கொழுப்புகள் குறைகின்றன. இதனால் இதயம் சார்ந்த நோய்கள் தடுக்கப்படுகிறது. வதுபோலவே பைபேட் புற்றுநோய் ஏற்படாமல் காக்கிறது. எலும்பு வளர்ச்சி அடைவதிலும், உடல் பருமனை குறைப்பதிலும் இத்தானியங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன அதிகமான நார்ச்சத்து கொண்டுள்ளதால் சிறந்த மலமிழக்கியாகவும் செயல்படுகின்றன.
சிந்தானியங்கள் அனைத்தும் அடிப்படையில் அரிசி போன்றவைதான். மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் சோள ரொட்டியை மக்கள் பெரிதும் விரும்பி சாப்பிடுகின்றனர். ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் கம்பு ரொட்டியை தினமும் உணவில் பயன்படுத்துகின்றனர். கேழ்வரகு களி, கர்நாடக மாநிலத்தின் பிரபலமான உணவாகும். எனவே சிறுதானியங்களை மதிப்புக்கூட்டி விற்பதன் மூலம் உயர்ந்த லாபம் அடையலாம்.
தீவனப் பயிர்கள்
சிறுதானியங்கள் உணவு தானியமாக மட்டும். இல்லாமல் ஒரு சிறந்த தீவன பயிராகவும் விளங்குகிறது. சோளம், கம்பு உணவாக மட்டுமின்றி, மக்காச் சோளத்திற்கு இணையாக முட்டையிடும் கோழிகளுக்கு உணவாகவும், சோள தானியங்களில் தேவையான அளவு லைசின், மெத்தியோனின் போன்ற புரத அமிலங்கள் உள்ளதால் பன்றிகளுக்கு சிறந்த தீவனமாகவும் பயன்படுகிறது. சோளத்தில் டேனின் அளவு குறைவாக உள்ளதால் கால்நடைகளுக்கு சிறந்த தீவனமாக கருதப்படுகிறது.
எதிர் காலத்தில் சிறுதானியங்களின் பங்கு
இனிவரும் காலங்களில் உணவு தேவையை சமாளிப்பதற்கு நாம் அரிசி, கோதுமையை அடிப்படையாக கொண்ட உணவு வகைகளை மட்டும் சார்ந்திருக்க முடியாத சூழ்நிலை உருவாகி வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் மாற்றுப்பயிராக சிறுதானியங்களை பயிரிடுவதுதான் சிறந்தது. சிறுதானிய சாகுபடியை ஒரு லாபகரமான வியாபாரத் தொழில் முறையாக ஆக்கக்கூடிய சாத்தியங்கள் நிறைய உள்ளன. எனவே தமிழக அரசு, வேளாண்மை உழவர் நலத் துறை மூலமாக பல்வேறு மானிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
பல வகைகளில் நம் உடல் ஆரோக்கியத்திற்கு உறுதுணை புரியும் சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை நாமும் உணர்ந்து இதன் பயன்பாட்டிணை அதிகரிக்க பாடுபடுவோம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது போல சீரான ஆ ோக்கியத்திற்கு சிறுதானிய உணவே நல்லது என்றுணர்ந்து அன்றாடம் நம் உணவில் சேர்த்து வந்தால் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழலாம்.
எனவே மாற்றுப் பயிராக சிறுதானியங்களை சாகுபடி செய்து உலகுக்கு உணவு அளிப்பதோடு மட்டும் அல்லாமல் ஊட்டச்சத்தையும் அளித்திடுவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.