தானியங்கள் சேமிப்பில் தகுந்த பாதுகாப்பு முறை... தஞ்சை வேளாண் துறை இணை இயக்குனர் அறிவுரை
தானியங்கள் சேமிப்பில் தகுந்த பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும் என்று வேளாண் துறை விவசாயிகளுக்கு அறிவுரைகள் வழங்கி உள்ளது.
மொத்த உணவு உற்பத்தியில் சுமார் 10-40 சதவீதம் வரை சேமிப்பின் போது வீணாகிறது. சரியாக சேமித்தால் மட்டுமே விதையின் முளைப்பு திறன் நன்கு இருக்கும். பாதுகாக்கப்படும் ஒவ்வொரு தானியமும் கூடுதலாக விளைவிக்கப்பட வேண்டிய ஓராயிரம் தானியத்திற்கு சமம் என்பதால் அவற்றை சரியாக பாதுகாக்க வேண்டியது நமது தலையாய கடமை ஆகும் என தஞ்சாவூர் வேளாண் இணை இயக்குனர் ஜஸ்டின் அறிவுறுத்தி உள்ளார்.
தானியங்களை சேமித்து வைத்து தேவையுள்ள போது விற்பனை செய்வதால் அதிக விலை கிடைக்கும். சேமிப்பின் போது புழு, பூச்சிகள், வண்டுகள், எலிகள், இயற்கை மாற்றங்கள் போன்ற காரணிகள் தானியங்களை பாதித்து சத்துக்களை குறைப்பதோடு மட்டுமல்லாமல், அவற்றின் தரத்தையும் இழக்க வைக்கிறது.
பூச்சிகள், பூஞ்சாணம், எலிகள், மாதிரி எடுத்தல் மற்றும் ஆய்வின் போது கையாளும் விதம் ஆகிய உயிர் காரணிகளும், வெப்பநிலை, ஈரப்பதம், சேமிப்பு, சுகாதாரம், வாயு மண்டல சூழ்நிலை, சேமிக்கும் பைகள் ஆகிய உயிரற்ற காரணிகளும் சேமிப்பை பாதிக்கின்றன.
வயல் சேமிப்பு களஞ்சியம் போக்குவரத்து வரை அனைத்து நிலைகளிலும் குறிப்பிடத்தக்க அளவு சேதத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றன. சேமிக்கும் தானியங்களில் ஓட்டை போட்டு ஊட்டச்சத்தினை உண்பதோடு. தானியத்தின் முளைக்கும் தன்மையை பாதிப்படைய செய்கிறது.
வயல்வெளியில் தொடங்கி வீடு வரை எளிதில் தானியங்களை பாழாக்கி கொண்டே இருக்கிறது. சுமார் 5 எலிகள் ஒரு மனிதன் உண்ணும் அளவிற்கு உணவை உட்கொள்கிறது. மேலும் எலிகளின் சிறுநீர், கழிவுகள், முடி முதலியவை தானியத்தில் கலந்து நோய்களை உருவாக்கிறது.
பதப்படுத்தும் முறைகள் தவறாக இருந்தாலும், கவனக்குறைவாக இருந்தாலும் தானியங்களில் சேதம் உண்டாகிறது. இயந்திரங்களை தவறாக கையாளுதல். பழைய உபகரணங்களை பயன்படுத்துதல் போன்றவற்றால் தானியங்கள் நொறுங்கி புழு, பூச்சி, ஈரப்பதம் போன்ற காரணிகள் தாக்க வழி வகுக்கிறது.
காற்றின் ஈரப்பதம், வெப்பம் ஆகியவை சேமிப்பை பாதிக்கும் காரணிகள். வெளிப்புற காற்று தானியத்தின் ஈரப்பதத்தை மாற்றுகிறது. காற்றின் ஈரப்பதம், வெப்பநிலை அதிகரிக்கும் போது பூச்சிகள் பூஞ்சாணங்களில் தாக்குதலும் அதிகரிக்கும். தானியங்கள் கரியமில வாயு, நீராவி, வெப்பம் முதலியவற்றை வெளியிடுகிறது அந்த நீராவி தானியத்தின் மீது படுகிறது. இதனால் தானிய ஈரப்பதம் அதிகமாகின்றது. தானியங்களை சரியான விகிதத்தில். சரியான அளவிற்கு காய வைக்காமல் விட்டுவிட்டால் எளிதில் பூச்சிகள், பூஞ்சாணம் முதலியவை தாக்கி துர்நாற்றம், சத்துக்கள் குறைவு, நச்சுத்தன்மை உண்டாதல் போன்ற விளைவுகளை ஏற்படுத்துகிறது.
தானியங்களை கடும் வெயிலில் உலர்த்தினால் வெப்பம் ஒரே அளவில் தானியத்தில் ஊடுருவாமல் தானியங்கள் உடைய வாய்ப்பு உண்டு. எனவே காலை அல்லது மாலை வெயிலில் மட்டுமே உலர்த்துவது சிறந்தது.
சேமிப்பதற்கான ஈரப்பத அளவுகள்: நெல் 14 சதம், விதை நெல் 13 சதம், அரிசி 14 சதம், கோதுமை 12 சதம், மக்காச்சோளம் 12 சதம், பயறு வகைகள் 8-9 சதம்.
பாதுகாப்பான தானிய சேமிப்பு: தானியங்கள் சேமிக்கும் அறைகள் நன்றாக சுத்தம் செய்து எந்த வித பூச்சிகள், அதன் முட்டைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தானிய சேமிப்பிற்கு பயன்படுத்தப்படும் சாக்குகள் புதியதாகவும், பூச்சி அற்றதாகவும் இருக்க வேண்டும். பழைய சாக்குகளை மாலதியான் அல்லது டைகுளோர்வாஸ் 0.1 சத கரைசலை தெளித்து உலர்த்தி பின் பயன்படுத்தலாம். தரையில் வைக்காமல் கட்டைகள் மீது அடுக்கி வைக்க வேண்டும்.
மூட்டைகளை சுவற்றை ஒட்டி அடுக்காமல் நல்ல இடைவெளி விட்டு காற்றோட்டமாக அடுக்க வேண்டும். மூட்டைகள் மீது மாலதியான் 0.1 சதக்கரைசலை மூட்டை நனையாமல் அளவாக தெளித்து வரலாம். இது தவிர வேப்பங்கொட்டை தூளை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் பயிர் வகை தானியங்களில் கலந்து வைக்கலாம்.
டைகுளோர்வாஸ் 76 இசியுடன் 7 மில்லி லிட்டர் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து 100 சதுர அடி பரப்பில் தெளிக்கலாம். 15 நாட்களுக்கு ஒரு முறை தானியத்தை எடுத்து அதில் பூச்சிகள் உள்ளனவா என்பதை தொடர்ந்து கண்காணித்து, இரண்டு பூச்சிகள் இருந்தால் சேதம் ஆரம்பிக்கவுள்ளது எனவும், இரண்டு பூச்சிகளுக்கு மேல் இருந்தால் அதிக சேதம் எனவும் கணக்கிட்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.