Pongal 2024: பொங்கலுக்கு நாங்களும் முக்கியம்... ரெடியாகிட்டோம்: அறுவடைக்கு தயார் நிலையில் கரும்புகள்
சூரியபகவானுக்கு விவசாயிகள் நன்றி தெரிவிக்கும் பாரம்பரியமிக்க பொங்கல் பண்டிகைக்கு முக்கியமான ஒன்றான செங்கரும்புகள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.
தஞ்சாவூர்: சூரியபகவானுக்கு விவசாயிகள் நன்றி தெரிவிக்கும் பாரம்பரியமிக்க பொங்கல் பண்டிகைக்கு முக்கியமான ஒன்றான செங்கரும்புகள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.
தமிழர்களின் முக்கிய பண்டிகைகளுள் பொங்கல் பண்டிகையும் ஒன்று. தை மாதம் முதல் நாள் கொண்டாடப்படும் அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகை அன்று வீடுகளில் கோலமிட்டு, புதுப்பானைகளில் புதுஅரிசியை பொங்கலிட்டு கதிரவனுக்கு படையலிட்டு புத்தாடை அணிந்து மக்கள் கொண்டாடுவார்கள். பொங்கல் பண்டிகைக்காக மண் பானைகள், அடுப்புகள் தயாரிக்கும் பணி தஞ்சை மாவட்டத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பொங்கல் பண்டிகையில் முக்கிய இடத்தை பிடிப்பது கரும்பு, மஞ்சள் கொத்து தான். அதிலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்புவது கரும்பை தான். தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பொங்கல் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. எங்கு கரும்பு சாகுபடி செய்யப்பட்டாலும் காவிரி கரையோரம் சாகுபடி செய்யப் பட்டுள்ள கரும்புகளுக்கு என்று தனிச்சுவை உண்டு.
பொங்கல் கரும்பை பொறுத்த வரையில் சாகுபடி செய்ய 10 மாத காலம் வரை ஆகும். சித்திரை மாதத்தில் பயிரிடப்பட்ட கரும்புகள் ஜனவரி மாதத்தில் தான் அறுவடை செய்யப்படும். ஓராண்டு பயிரான கரும்பின் வேர்கள் நன்றாக வளர்ந்து நீர் மற்றும் ஊட்டச் சத்துகளை மண்ணில் இருந்து பெற வேண்டுமானால் வயலில் குறைந்தது 30 செ.மீ ஆழம் வரை மண் மிருதுவாக இருக்க வேண்டும். டிராக்டர் மூலம் உழவு செய்வதாக இருந்தால், முதல் உழவை சட்டிக் கலப்பை அல்லது இறக்கை கலப்பை மூலமும், 2-வது மற்றும் 3-வது உழவை கொத்துக் கலப்பை மூலம் செய்ய வேண்டும்.
மேடு, பள்ளங்கள் அதிகம் இல்லாத நிலமாக இருந்தால், 3-வது உழவுக்குப் பின் சமன் செய்யும் கருவி கொண்டு நிலத்தை சமன் செய்து, பின்னர் பார் பிடிக்கும் கலப்பை கொண்டு பார்களைப் அமைக்க வேண்டும். நல்ல வளமான மண்ணில் குறைந்த தூர்விடும் ரகமாக இருந்தால் 75 செ.மீ இடைவெளி விட வேண்டும்.
கரும்பு பயிர் நன்கு வேர் ஊன்றி வளரவும், கரும்பு வளர்ந்த பின்னர் சாயாமல் இருக்கவும், பார்களுக்கு இடையே 20 செ.மீ முதல் 30 செ.மீ ஆழத்தில் சால் அமைக்க வேண்டும்.
6 மாதம் வயதுள்ள உயர் விளைச்சல் தரும் ரகங்களிலிருந்து விதை பருக்களை சேகரிக்க வேண்டும். விதைப்பருக்களின் முளைப்பு திறனை தூண்டும் வகையில் 1 கிலோ யூரியா, 50 கிராம் கார்பன்டாசிம், 200 மி.லி மாலத்தியான் ஆகியவைகளை 100 லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும்.
அதில் 5000 விதைப் பருக்களை நன்கு நனையும்படி 15 நிமிடம் ஊறவைத்து பின் நிழலில் உலர வைக்க வேண்டும். உயிரியல் முறையில் விதை நேர்த்தி செய்வதற்கு டிரைக்கோடெர்மா விரிடி 2 கிராம் மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து பின் விதைப் பருக்களை 15 நிமிடம் ஊற வைத்து நிழலில் 15 நிமிடம் உலர வைக்க வேண்டும்.
விதை நேர்த்தி செய்த விதைப் பருக்களை கோணிப்பையில் கற்று புகாவண்ணம் இறுக கட்டி நிழலில் 5 நாட்கள் வைத்திருக்க வேண்டும். இடையில் தண்ணீர் தெளிக்க வேண்டியதில்லை. முதலில் குழி தட்டுகளின் பாதியளவில் தென்னை நார் கொண்டு நிரப்ப வேண்டும். பின்பு விதைப் பருக்களை மேல் நோக்கி இருக்குமாறு சற்று சாய்வாக அடுக்கி மீதி குழிகளை தென்னை நார் கொண்டு நிரப்பிட வேண்டும். தினசரி தண்ணீர் தெளிக்க வேண்டும்.
பயிர்நடவு செய்த 15 முதல் 30 நாட்களில் அல்லது 2 முதல் 3 பக்க சிம்புகள் வந்தபின் மண்ணில் இருந்து ஓர் அங்குல உயரத்தில் கவாத்து செய்யும் கத்தரி கொண்டு வெட்டிவிட வேண்டும். வெட்டுவதற்கு முன் சொட்டு நீர்ப் பாசனமாக இருந்தால் அதன் மூலம் யூரியா அளிக்க வேண்டும். சொட்டுநீர்ப் பாசனம் அமைக்காவிடில் ஒரு தேக்கரண்டி அளவு யூரியா இட வேண்டும். கரும்புக்குத் தேவையான நீரை சிக்கனமாக, பயிருக்கு வேண்டிய அளவு மட்டும் தினமும் அளிக்க வேண்டும்.
இப்படி சாகுபடி செய்யப்பட்ட கரும்புகள் பொங்கலுக்கு முன்னதாக அறுவடை செய்யப்படும். காவிரி பாயும் தஞ்சை மாவட்டத்தில் சூரக்கோட்டை, திருக்காட்டுப்பள்ளி, திருவிடைமருதூர், அம்மாப்பேட்டை, மாரியம்மன்கோவில், குளிச்சப்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொங்கல் பண்டிகையை ஒட்டி விற்பனை செய்வதற்காக ஏராளமான ஏக்கரில் கரும்புகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த கரும்புகள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. இன்னும் சில நாட்களில் அறுவடை பணி தொடங்கும் என எதிர்பார் க்கப்படுகிறது. சென்னை, திருச்சி, திருவாரூர், நாகை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து கரும்பு வாங்கி செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு கரும்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.