சீர்காழி விவசாயிகள் கண்ணீர்: மழை பாதிப்பால் நெல் மூட்டைகள் சேதம்! அரசு நடவடிக்கை எடுக்குமா?
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமமடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டத்தில் தற்போது குறுவை நெல் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திடீரெனப் பெய்த மழையால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் பெரும் கவலைக்குள்ளாகியுள்ளனர். மழையில் இன்றி நெல்மணிகளை காக்க நாள் ஒன்றுக்குக் குறைந்த அளவு நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதை கைவிட்டு, உடனடியாகக் கூடுதலாக நெல்லைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறுவை சாகுபடியின் நிலவரம்
இந்த ஆண்டு குறுவை சாகுபடிப் பட்டத்தில், சீர்காழி பகுதியில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. மோட்டார் பம்ப் செட்டுகள் மற்றும் மழை நீர் உதவியுடன் விவசாயிகள் சாகுபடிப் பணிகளை மேற்கொண்டனர். தற்போது, பெரும்பாலான பகுதிகளில் குறுவை நெல் அறுவடைப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்வதற்காக, சீர்காழி வட்டத்தில் திறக்கப்பட்டுள்ள 23 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்து மூட்டைகளில் அடுக்கி வைத்துள்ளனர்.

மழையின் பாதிப்பு
இந்நிலையில் கடந்த சில நாட்களாகச் சீர்காழிப் பகுதியில் அவ்வப்போது பெய்துவரும் மழையால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை நனைத்து வீணாகியுள்ளது. இது விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல் நனைந்ததால் அதன் தரம் பாதிக்கப்படுவதுடன், கொள்முதல் செய்யும் போது நிராகரிக்கப்படும் என்பதால், தங்கள் உழைப்பு வீணாகிவிட்டதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வானிலை ஆய்வு மையம், இன்னும் சில நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று அறிவித்திருப்பதால், இந்த நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்று விவசாயிகள் அச்சப்படுகின்றனர். மேலும் மீதம் உள்ள தங்களது நெல்லைப் பாதுகாக்க, விவசாயிகள் தார்பாய்களைக் கொண்டு மூடி வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
குறைவான கொள்முதல் - பெரும் பிரச்சனை
தற்போதைய நிலவரப்படி, ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 800 முதல் 1000 சிப்பங்கள் (மூட்டைகள்) மட்டுமே கொள்முதல் செய்யப்படுகின்றன. இது, விவசாயிகளின் தேவைக்கு போதுமானதாக இல்லை. ஏற்கனவே மழை பயமுறுத்தி வரும் நிலையில், குறைந்த அளவிலான கொள்முதல் காரணமாக நெல் மூட்டைகளை நீண்ட நாள் கொள்முதல் நிலையங்களில் வைத்துப் பாதுகாக்க வேண்டியுள்ளது. இது விவசாயிகளின் சுமையை மேலும் அதிகரித்துள்ளது.

விவசாயிகள் தங்கள் நெல்லைக் கொண்டு வந்தவுடன், அது உடனடியாகக் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மழைக்காலத்தைக் கருத்தில் கொண்டு, நாள் ஒன்றுக்குக் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் அளவை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர்கள் அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.
விவசாயிகளின் எதிர்பார்ப்புகள்
சீர்காழிப் பகுதி விவசாயிகள், தங்கள் கோரிக்கைகள் மீது அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். மழையில் நனைந்த நெல்லைப் பரிசோதித்து, அதன் தரத்தைக் கருத்தில் கொள்ளாமல், ஈரப்பதத்தைப் பொருட்படுத்தாமல் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இது, அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளைக் குறைக்க உதவும். மேலும், கொள்முதல் நிலையங்களில் கூடுதல் பணியாளர்களை நியமித்து, கொள்முதல் செய்யும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலைமை நீடித்தால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கவலை தெரிவித்துள்ளனர். அரசு உரிய நடவடிக்கை எடுத்து, உடனடியாகக் கொள்முதல் அளவை அதிகரித்து, விவசாயிகளின் துயரத்தைப் போக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






















