Thanjavur: பாசன வாய்க்கால் தூர்வாரி கொட்டப்படும் மண்ணை அழுத்தி கரையை பலப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்
தஞ்சை மாவட்டம் ஆலக்குடி பாசன வாய்க்காலில் தூர்வாரும் பணியை முறையாக மேற்கொண்டு கரையில் கொட்டப்படும் மண்ணை அழுத்தி கரையை பலப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் ஆலக்குடி பாசன வாய்க்காலில் தூர்வாரும் பணியை முறையாக மேற்கொண்டு கரையில் கொட்டப்படும் மண்ணை அழுத்தி கரையை பலப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் ஆலக்குடியில் ரயில்வே கேட் அருகில் ஓடும் பாசன வாய்க்காலில் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. தூர்வாரும் போது எடுக்கும் மண்ணை கரையிலேயே கொட்டுகின்றனர். இதை சரியான முறையில் இறுக்கமாக அழுத்தினால் கரை பலப்படும். இல்லாவிடில் மழைக்காலத்தில் அந்த மண் மீண்டும் கரைந்து வாய்க்காலியே விழும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆண்டு 12 மாவட்டங்களில் தூர் வாருவதற்காகத் தமிழக அரசு ரூ.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த 12 மாவட்டங்களில் எந்தெந்த வேலையை எடுத்து செய்வது என முன்கூட்டியே அலுவலர்கள் முடிவு செய்துள்ளனர். இதில் அத்தியாவசியமான மற்றும் உடனடியாக செய்ய வேண்டிய பணிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இம்முறை மிக மோசமாக உள்ள வாய்க்கால்கள் தூர் வாருவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
இந்த முறை 834 மண் அள்ளும் இயந்திரங்களைக் கொண்டு 4 ஆயிரத்து 773 கி. மீ. தூர் வாரப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த முறை தூர் வாரும் பணி மக்கள் பாராட்டும் வகையில் அமைந்ததுபோல, இந்த முறையும் செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டு மாவட்டத்தின் பல பகுதிகளில் நடந்து வருகிறது.
அந்த வகையில் தஞ்சை மாவட்டம் ஆலக்குடி ரயில்வே கேட் அருகில் ஓடும் பாசன வாய்க்கால் தலைப்பிலிருந்து தூர் வாரும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதில் தூர் வாரும் மண்ணை கரையிலேயே கொட்டுகின்றனர்.
இவ்வாறு கொட்டப்படும் மண்ணை அழுத்தி கரையை வலுப்படுத்தாமல் அள்ளும் மண்ணை அப்படி கொட்டுவதால் ஒரு மழை பெய்தால் கூட மண் கரைந்து மீண்டும் பாசன வாய்க்காலில்தான் கலக்கும். எனவே தூர்வாரும் மண்ணை கரையும் கொட்டும் போது பொக்லைன் இயந்திரத்தால் மண்ணை அழுத்தம் கொடுத்து கரையை பலப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், ஆலக்குடி ரயில்வே கேட் பகுதியில் ஓடும் பாசன வாய்க்காலால் ஏராளமான ஏக்கர் நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. இந்த வாய்க்கால் தூர்வாரும் பணி நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும் தூர்வாரும் போது எடுக்கப்படும் மண்ணை அப்படியே கரையில் கொட்டுகின்றனர். இதில் பெரிய அளவில் கற்களும் வந்து விழுகிறது. மண்ணை பொக்லைன் இயந்திரத்தால் அழுத்தி கரையை பலப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யாமல் அப்படியே கொட்டுவதால் மழை பெய்தால் மண் கரைந்து மீண்டும் வாய்க்காலில்தான் விழும்.
மேலும் இந்த பகுதி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. கரையில் கொட்டப்பட்டுள்ள மண்ணை கவனிக்காமல் அதில் சிக்கி விபத்துக்குள்ளாகும் நிலையும் உள்ளது. எனவே தூர்வாரும் கரையில் கொட்டும் மண்ணை அழுத்தி கரையை பலப்படுத்த வேண்டும் என்றனர்.