திருக்கருகாவூர் பகுதியில் பருத்தி சாகுபடி பணியில் விவசாயிகள் ஆர்வம்
தஞ்சை மாவட்டம் திருக்கருகாவூர் பகுதி விவசாயிகள் பருத்தி சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருக்கருகாவூர் பகுதியில் பருத்தி சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பருத்தி சாகுபடி செய்ய விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகமும் நெல் சாகுபடிதான் முக்கியமானதாகும். ஒரு சில பகுதிகளில் கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. நெல் அறுவடை முடிந்த பின்னர் உளுந்து, பயறு போன்றவற்றையும் விவசாயிகள் சாகுபடி செய்வது வழக்கம். பம்ப் செட் வசதியுள்ள சில பகுதிகளில் விவசாயிகள் கோடை நெல் சாகுபடியும் மேற்கொண்டு வருகின்றனர்.
கரும்பு, நிலக்கடலை, உளுந்து, சோளம், பருத்தி என்று பயிரிடப்பட்டாலும் அதிக பரப்பளவில் நெல் சாகுபடியைதான் விவசாயிகள் மேற்கொள்கின்றனர். நெல் அதிகம் விளையும் தஞ்சை மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி அறுவடைப்பணிகள் முடிவடைந்துள்ளது. பல பகுதிகளில் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
சம்பா, தாளடி, குறுவை என 3 போகங்களாக நெல் பயிரிடப்பட்டு வரும் நிலையில் மழைக்காலங்களில் சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டு விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள். இந்த நிலையில் டெல்டா பகுதியில் பருத்தி சாகுபடி மீதான ஆர்வம் விவசாயிகள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா திருக்கருகாவூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கோடை பயிராக பருத்தி அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கோடையில் நெல், உளுந்து பயிருக்கு மாற்றாக பருத்தி சாகுபடி செய்ய கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பருத்தி சாகுபடியில் அதிக லாபம் கிடைப்பதால் விவசாயிகள் கோடையில் பருத்தியை சாகுபடி செய்து பயனடைந்து வருகின்றனர். நடப்பு ஆண்டு பருத்தி சாகுபடி கடந்த ஆண்டை விட பாபநாசம் தாலுகாவில் அதிக அளவில் செய்யப்பட்டுள்ளது.
திருக்கருகாவூர் மற்றும் கரம்பத்தூர், நாகலூர், நிறைமதி, மேல செம்மங்குடி, தேவராயன் பேட்டை, வளத்தாமங்களம், புலிமங்களம், பண்டாரவாடை, ராஜகிரி, பொன்மான்மேய்ந்தநல்லூர், கோபுராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பருத்தி விதைக்கப்பட்டு 2 வாரங்கள் ஆகிறது. தற்போது பருத்தி செடிகளுக்கு இடையே மண்டியுள்ள களைகளை அகற்றி மருந்து வைக்கும் பருவம் ஆகும்.
இதனால் பருத்தி செடிகளுக்கு தொழிலாளர்களை கொண்டு களைகளை அகற்றும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். விற்பனை வாய்ப்பும் உள்ளதால் விவசாயிகள் பருத்தி சாகுபடியை அதிகளவில் மேற்கொண்டு வருகின்றனர். பல மாவட்ட வியாபாரிகள் ஏலத்தில் பருத்தியை எடுத்து வருகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது. மேலும் சரியான முறையில் சாகுபடி பணிகளை மேற்கொண்டால் அதிகளவு வருமானம் கிடைப்பதால் விவசாயிகள் மத்தியில் பருத்தி சாகுபடி செய்ய அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.