தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்காக வயல் உழும் பணிகளில் விவசாயிகள் வெகு மும்முரம்
தஞ்சை மாவட்டம் ராராமுத்திரைகோட்டை பகுதியில் குறுவை சாகுபடி பணிக்காக வயலை உழும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் ராராமுத்திரைகோட்டை பகுதியில் குறுவை சாகுபடி பணிக்காக வயலை உழும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை விரைவில் திறக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எதிர்பார்த்த விவசாயிகளுக்கு ஏமாற்றம் கொடுத்த மழை
தஞ்சாவூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. மேலும் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆடு, மாடுகளை வளர்த்து பால் விற்பனை, இறைச்சிக்காக விற்பனை மற்றும் இயற்கை உர உற்பத்தி மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர். இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் பாசனத்துக்காக மேட்டூர் அணை ஜூன் மாதம் 12ம் தேதி திறக்கப்படுவது வழக்கம். ஆறுகளில் போதிய தண்ணீர் வரவில்லை. மழையை நம்பி இருந்த விவசாயிகளுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.
தாமதமாக குறுவை சாகுபடி பணிகள் தொடக்கம்
பம்பு செட் வைத்துள்ள விவசாயிகள் மட்டுமே குறுவை சாகுபடி பணிகளை தொடங்கிவிட்டனர். போதிய தண்ணீர் வராததாலும், மழை பெய்யாததாலும் குறுவை சாகுபடி விவசாயிகள் தங்கள் சாகுபடி பணியை தாமதமாக தொடங்கியுள்ளனர். சாகுபடி பணிகள் தாமதமாக தொடங்கப்பட்டதால் சிலர் குறுகிய கால நெல்லை சாகுபடி செய்துள்ளனர். சிலர் அதுவும் தொடங்காமல் விட்டுள்ளனர். சில விவசாயிகள் 180 நாட்கள் நெல்லை சாகுபடி செய்ய பாய்நாற்றங்கல் விட்டுள்ளனர்.
பாய் நாற்றங்கால நடவு பணியும் மும்முரம்
தற்போது பாய் நாற்றங்கால் நடவுக்கு தயாராகி வருவதால் நிலத்தை தயார் செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக டிராக்டர்கள் மூலம் வயலில் எரு அடிப்பதும், வயலை உழுது தயார் செய்வது போன்ற பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். தஞ்சாவூரை எடுத்து ராராமுத்திரைகோட்டை, கோவிலூர், மாரியம்மன் கோவில், சாலியமங்கலம் உள்ளிட்ட பம்புசெட் வைத்திருக்கும் விவசாயிகள் நெல் சாகுபடிக்காக நடவு பணிகளை மேற்கொள்வதற்காக வயல்களை டிராக்டர் மூலம் உழவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், கடந்த ஆண்டு மே மாதத்திலேயே மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடியை விவசாயிகள் முன்னதாகவே தொடங்கினர். தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த ஆண்டு குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை விரைவில் திறக்க வேண்டும். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்டா மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்தது.
மேட்டூர் அணையை திறக்க நடவடிக்கை எடுக்கணும்
இதை பயன்படுத்தி தற்போது விவசாயிகள் குறுவை சாகுபடிக்காக நிலத்தை உழும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு வயலை தயார்படுத்துவதால் மேட்டூரில் இருந்து எப்போது தண்ணீர் திறக்கப்பட்டாலும் குறுவை சாகுபடியை உடனே மேற்கொள்ள வசதியாக இருக்கும். இதனால் வயலை உழும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். வயல்களில் இருந்த களைகள் அப்புறப்படுத்தப்பட்டு டிராக்டரை கொண்டு உழவுப்பணி நடந்து வருகிறது.
குறுவை சாகுபடிக்காக தற்போது வயலை உழுது சீராக்கி கொண்டால் நாற்று விட்டு நடும் பணிகள் விரைவாக தொடங்கி விடலாம். மேலும் தற்போது வயலை உழுவதால் வயல் சமமாகி மேடு பள்ளமின்றி இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.