தருமபுரியில் கனமழையால் வீசிய சூறைக்காற்று... குலையுடன் சாய்ந்த வாழை மரங்கள்.. விவசாயிகள் வேதனை
தருமபுரியில் பெய்த கனமழையின் போது சூறைக் காற்று வீசியதால், அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள், பாதியில் உடைந்து சாய்ந்து சேதம்.
தருமபுரி மாவட்டம் விவசாயம் நிறைந்த மாவட்டம் தக்காளி, வெண்டை, அவரை, கத்திரி உள்ளிட்ட காய்கறிகளும், வாழை, தென்னை உள்ளிட்டவற்றை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனது. இதனால் தருமபுரி மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக சரிந்து விவசாய பயிர்களுக்கு தேவையான தண்ணீர் இல்லாமல், வறட்சி ஏற்பட்டது. இந்நிலையில் தருமபுரி அடுத்த மூக்கனூர், அக்கமன அள்ளி, கடத்தூர், புட்டிரெட்டிப்பட்டி, தாளநத்தம், தென்கரைக்கோட்டை, துரிஞ்சிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2000க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை நடவு செய்து விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது வெயிலின் தாக்கம் 100 மேல் வெயில் வாட்டி வரும் நிலையில் கிணற்றில் தண்ணீர் இல்லாமல் சொட்டு நீர் பாசனம் முறையில் வாழை மரங்கள் தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்தனர்.
இந்நிலையில் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பருவமழை பொய்த்து போனதால், வாழை மரங்கள் குழை தள்ளும் நிலையில் தண்ணீரின்றி காய தொடங்கியது. தருமபுரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் வாழை பல ஏக்கர் வாழை மரங்கள் காய்ந்து கருகி, குழையுடன் கீழே விழுந்துள்ளது. ஆனால் ஒரு சில விவசாயிகள் சொட்டுநீர் பாசனத்தின் மூலமும், ஒரு சிலர் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி வந்து விவசாயம் செய்து, வாழையை பாதுகாத்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு சில தினங்களாக இரவு நேரங்ளில் கோடை மழை பலத்த சூறைக் காற்றுடன் பெய்தது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்கள் பாதியில் உடைந்து சாய்ந்து விழுந்தது.
இந்நிலையில் பாப்பிரெட்டிப்பட்டி, தருமபுரி, கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த வாழை மரங்கள் பாதியில் உடைந்து, சாய்ந்து விழுந்துள்ளது. இதனால் ஏக்கருக்கு சுமார் 4 இலட்சம் செலவு செய்து பாதுகாத்து வந்த வாழை மரங்கள் அனைத்தும், குழை தள்ளி அறுவடைக்கு தயாராக இருந்தது. கோடை மழை பொழிவின் போது வீசிய சூறைக் காற்றால், வாழை மரங்கள் முழுவதும் பாதியில் உடைந்து, சாய்ந்து விழுந்துள்ளது. இதனால் வாழை விவசாயிகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் மழையால் தங்களது ஒரு வருட உழைப்பு, பணம், வாழ்வாதரம் பாதிக்கபட்டுள்ளது பல இலட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் வருவாய் துறையினர் மூலம் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்