Budget 2024 Expectations: இந்த பட்ஜெட்டில் தேனி மக்களின் எதிர்பார்ப்பு, திட்டங்கள் என்னென்ன..?
கம்பம் அல்லது போடி நகரில் மத்திய அரசு சார்பில் தொழிற்பேட்டை நிறுவ வேண்டும் என பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தேனி மக்கள் மத்திய பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் திட்டங்கள்.
விவசாயம் சார்ந்த பகுதி தேனி மாவட்டம், தேனி மாவட்டத்தின் உயிர் நாடியாக கருதப்படும் தமிழக கேரள எல்லையை இணைக்கும் முக்கிய நகரமான கம்பம் பகுதியில் நெல் ஆராய்ச்சி நிலையம் அமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு. நெல் விளைச்சல் குறைவதை தடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்.
தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அடுத்தபடியாக தேனி மாவட்டத்தில் இருபோக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணை பாசனத்தில் மேற்கொள்ளப்படும் நெல் சாகுபடியில் பல பிரச்னைகள் உருவாகி வருகிறது. சமீபத்தில் நெல் மகசூல் கடுமையாக குறைந்துள்ளது. பயன்படுத்தப்படும் விதை நெல்லில் குறைபாடுகள் இருப்பதாக புகார்கள் எழுந்து வருகிறது. வீரிய ஒட்டு ரக நெல் விதைகளை அதிகமாக விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். அந்த ரகங்கள் விவசாயத்துறையின் ஆய்வுக்கு வருவதில்லை. எனவே எந்தவிதமான நெல் விதைகளை பயன்படுத்தலாம் என்பதில் விவசாயிகளுக்கு தொடர்ந்து குழப்பம் உள்ளது. மேலும் சாகுபடி செய்த ரகங்களையே தொடர்ந்து சாகுபடி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே அரசின் சார்பில் நெல் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் சார்பில் கோரிக்கை மற்றும் எதிர்பார்ப்பாக உள்ளது தீர்க்கப்படாத பிரச்சினை.
இதே போல், கம்பம் மற்றும் சுற்று வட்டாரங்களில் அதிகமாக விளைவிக்க கூடிய எக்கால சூழலுக்கும் ஏற்றவாறு விளையும் மருத்துவ குணமுள்ள கருப்பு பன்னீர் திராட்சை பழங்கள் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கவும் (குறிப்பு கருப்பு பன்னீர் திராட்சைக்கு மத்திய அரசு சார்பில் புவி சார் குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது) இதே போல் வாழைக்கும் ஆராய்ச்சி நிலையம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டால், இப்பகுதி மண்ணின் தன்மை, அவற்றில் உள்ள சத்துக்கள், நிலவும் சீதோஷ்ண நிலை, ஏற்ற ரகம், அதிக மகசூல், நோய் தாக்காத ரகம் ஆகியவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு ஆராய்ச்சி நடைபெறும். மேலும் வயல்களில் ஏற்படும் திடீர் பிரச்னைகளுக்கு ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் உடனடியாக ஆய்வு செய்து பரிந்துரை செய்வர். எனவே மேற்கண்ட இப்பகுதியில் அதிகம் விளையும் திராட்சை, நெல், வாழை உள்ளிட்ட பயிர்களுக்கு ஆராய்ச்சி நிலையம் அமைக்க அரசு முன்வர வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பொருளாதாரம்
கம்பம் மற்றும் போடி பகுதிகளில் தமிழக கேரள எல்லையை இணைக்கும் முக்கிய மூன்று மலைவழிச்சாலையாக இருப்பதால் கேரள மாநிலத்திற்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்கள் அனுப்ப முக்கிய பொருளாதார தேவையில் முன் நகரமாக கம்பம், போடி மாறி வருகிறது. குறிப்பாக ரெடிமேட் ஆடை தயாரிக்கும் கம்பெனிகள் ( கார்மெண்ட்ஸ்) மற்றும் கேரளாவில் அதிகம் விளையும். ஏலக்காயை பதப்படுத்தும் ட்ரையர் தயாரிக்கும் ஸ்டீல் ஒர்க்ஸ் என பல்வேறு முகத்தன்மையை கொண்ட கம்பம் நகரில் தமிழக அரசு சார்பில் விவசாயம், உள்ளிட்ட அனைத்து பொருட்களின் தரத்தை உயர்த்தவும் தொழில் முனைவோர் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் கம்பம் அல்லது போடி நகரில் மத்திய அரசு சார்பில் தொழிற்பேட்டை நிறுவ வேண்டும் என பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.