நிலக்கடலையில் புழுக்களை கட்டுப்படுத்தலாம் அது எப்படி? - விவசாயிகளுக்கு அதிகாரிகள் அளிக்கும் டிப்ஸ்
நிலக்கடலையில் புழுவை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து தர்மபுரி மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் ஆலோசனை.
தர்மபுரி மாவட்டம் பெரும்பாலும் விவசாய பிரதான தொழிலாளர்களை கொண்டுள்ளது. இங்கு போதிய அளவில் நீர்ப்பாசன திட்டங்கள் இல்லாததால், மேட்டுப் பயிரான பல்வேறு வகையான பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். அதில் குறிப்பாக அவரை, துவரை, உளுந்து, கொள்ளு, கடலை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
இதில் ஒரு சில பருப்பு வகை பயிர்களில் புழுக்கள் தாக்குதல் அதிகமாக இருந்து வருகிறது. இந்த புழுக்களை கட்டுப்படுத்த தர்மபுரி வேளாண்மை இணை இயக்குனர் பொறுப்பு குணசேகரன் வழிமுறைகளை தெரிவித்துள்ளார்.
ப்ரோன் தினியா புழுக்கள் நிலக்கடலையை பாதிக்கும்
தர்மபுரி மாவட்டத்தில் வளர்ச்சி பருவத்தில் உள்ள நிலக்கடலை பயிரில் தற்போது ப்ரோன் தினியா புழுவின் தாக்குதல் அதிகளவில் தென்படுகிறது. இந்த புழுக்களின் பாதிப்பு நிலக் கடலை பயிர் மட்டுமல்லாமல், வளர்ச்சி நிலையில் உள்ள உளுந்து, தக்கை பூண்டு போன்ற பசுந்தால் உரப் பயிர்களிலும் காணப்படுகிறது. இந்த புழுக்கள், நீளமாக பருத்து பழுப்பு நிறத்திலான புள்ளிகளுடன் காணப்படும். தொடக்க நிலையில் புழுக்கள் கூட்டமாக,இலைகளை சுரண்டி தின்னும்.
புழுவின் தாக்குதலால் இலைகளின் நரம்பு பாதிக்கும்
இந்த புழுவின் தாக்குதல் அதிகமாகும் போது இலைகளில் நரம்பு மட்டுமே இருக்கும். வளர்ந்த புழுக்கள், பகலில் செடிகளில் அருகே மண்ணுள் வாழும், இரவில் வெளியே வந்து இலைகளை உட்கொண்டு சேதம் விளைவிக்கும்.
ரோட்டினியா புழுவின் தாக்குதலை ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையினை கடைபிடித்து, கட்டுப்படுத்த வேண்டும். இதனால் விவசாயிகள் நிலக் கடலை பயிரிடுவதற்கு முன்னதாக, கோடை உழவு செய்து மண்ணில் உள்ள கூண்டு புழுக்களை அழிக்கலாம்.
வயலின் ஓரங்களில் ஆமணக்குச் செடிகள் நடலாம்
மேலும் ஆமணக்கு செடிகள் வயிலின் ஓரத்தில் வளர்த்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். ஏக்கர் ஒன்றுக்கு ஐந்து விளக்கு பொறிகள் வைத்து தாய் அந்துப் பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கலாம். ஏக்கர் ஒன்றுக்கு இரண்டு இன கவர்ச்சி பொறிகள் அமைத்து ஆண் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து முட்டை குவியல்களையும் இளம் புழுக்களையும் சேகரித்து அழிக்கலாம்.
பறவைகளின் இருக்கைகள் அமைக்கலாம்
ஏக்கர் ஒன்றுக்கு பத்து இடங்களில் பறவை இருக்கைகள் அமைக்கலாம். இளம் புழுக்களை கட்டுப்படுத்த ஏக்கருக்கு பினோசாடு 45 எஸ் சி என்பது 80 மில்லி, இமாமெக்டின் பென்சோயேட் 100 மி.லி இவற்றில் ஏதேனும் ஒரு பூச்சி மருந்தை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு அரிசி தவிடு 5 கிலோ, வெல்லம் அரை கிலோ, தையோடிகார்ப் 200 கிராம் இவற்றுடன் 3 லிட்டர் நீர் சேர்த்து கலவையை நச்சு கவர்ச்சி உணவுருண்டைகளாக செய்து, வயலிலும், வரப்பிலும் வைத்து வளர்ந்த புழுக்களை கவர்ந்து கட்டுப்படுத்தலாம். இது தவிர ஏக்கருக்கு 200 கிராம் மையோ டகார்ப் 75 சதவீத டபள்யூ சி பி அல்லது 200 மில்லி லிட்டர் நோவாலுரான் பத்து இ.சி இவற்றில் ஏதேனும் ஒன்றை 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்தும் வளந்து புழுக்களை கட்டுப்படுத்தலாம்.
இதனை விவசாயிகள் தவறாமல் செய்தால் புழுவை கண்டிப்பாக கட்டுப்படுத்தலான் என வேளாண் துறை அதிதாரி(பொ) குணசேகரன் தெரிவித்தார்