பொங்கும் பொங்கலுக்கு தேவையான வெல்லம்: பாரம்பரிய முறைபடி தயாரிக்கும் விவசாயிகள் அரசுக்கு விடுத்துள்ள வேண்டுகோள்
தமிழர்களின் பாரம்பரிய திருவிழா பொங்கல் திருநாள். கிராமங்களில் கொண்டாட்டம், உறவினர்களுடன் கூடி பொங்கலிட்டு சூரிய பகவானை வணங்கி தங்களின் நன்றியை விவசாயிகள் தெரிவிக்கும் அற்புதமான நாள்.
தஞ்சாவூர்: தமிழர்களின் பாரம்பரிய திருவிழா பொங்கல் திருநாள். கிராமங்களில் கொண்டாட்டம், உறவினர்களுடன் கூடி பொங்கலிட்டு சூரிய பகவானை வணங்கி தங்களின் நன்றியை விவசாயிகள் தெரிவிக்கும் அற்புதமான நாள் பொங்கல் பண்டிகை என்றால் மிகையில்லை.
இந்த நாளில் பொங்கல் செய்ய தேவையானது வெல்லம். தமிழர்களின் பாரம்பரிய முறையில் தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை மற்றும் சுற்று பகுதிகளில் வெல்லம் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழர் திருநாளான பொங்கல் திருவிழா நாடு முழுவதும் வரும் ஜனவரி மாதம் 15ம் தேதி தை முதல் தேதியில் கொண்டாடப்பட உள்ளது. விவசாயத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லில் சர்க்கரை பொங்கல் செய்து சூரிய பகவானுக்கு பொங்கலிட்டு படைப்பது வழக்கம். குடும்பம், குடும்பமாக, உற்றார் உறவினர்கள் கூடி நின்று சூரிய பகவானுக்கு நன்றி தெரிவித்து பொங்கலிட்டு தங்கள் நன்றியை தெரிவிப்பர்.
பொங்கல் திருநாளின்போது சர்க்கரை பொங்கல் செய்ய ஆதிகாலம் முதல் தற்போது வரை பொதுமக்கள் அச்சு வெல்லத்தையே பயன்படுத்தி வருகின்றனர். இந்த அச்சு வெல்லம் தயாரிப்பதில் தஞ்சாவூர் மாவட்டம் முக்கிய இடத்தினை வகிக்கிறது. ஆரம்பத்தில் கரும்பு ஆலைகள் இல்லாத போது, விவசாயிகள் கரும்பினை பயிரிட்டு அதனை தங்களுடைய இல்லங்களிலேயே சாறு பிழிந்து, பெரிய கொப்பரையில் பாகு காய்ச்சி சரியான பக்குவத்தில் அச்சில் ஊற்றி அச்சுவெல்லத்தை தயாரிக்கின்றனர்.
காலப்போக்கில் சர்க்கரை ஆலைகளின் வரவால், கரும்பு உற்பத்தி அதிகரித்தாலும், குறிப்பிட்ட பொங்கல் பண்டிகைக்கு தேவைப்படும் இந்த வெல்லம் தயாரிப்பு முறை மட்டும் பாரம்பரியமாக மாறவில்லை. தஞ்சாவூர் மாவட்டத்தில் அய்யம்பேட்டை பகுதியில் இலுப்பகோரை, மாகாளிபுரம், உள்ளிக்கடை, புதுத்தெரு, கிருஷ்ணாபுரம், கணபதி அக்ரஹாரம், இளங்கார்குடி, மணலூர், தேவன்குடி, வீரமாங்குடி, சோமேஸ்வரபுரம், செம்மங்குடி, பட்டுக்குடி உள்ளிட்ட 20க்கும் அதிகமான கிராமங்களில் வீடுகளில் குடிசைத் தொழிலாக அச்சுவெல்லம் தயாரிக்கப்படுகிறது.
இங்கு தயாரிக்கப்படும் அச்சுவெல்லம் பெரும்பாலும் புகழ்பெற்ற மொத்த விற்பனை நடைபெறும் திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டி வெல்லமண்டியில் தான் விலை நிர்ணயிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. ஆண்டு முழுவதும் வெல்லம் தயாரிப்பு இருந்தாலும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் அதிகமாக வெல்லம் தயாரிக்கப்படும். இங்கு தயாரிக்கப்படும் வெல்லம் தமிழகம் முழுவதும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இதுகுறித்து அச்சுவெல்லம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் தரப்பில் கூறுகையில், பாபநாசம் பகுதியில் மட்டும் கடந்த காலங்களில் சுமார் 50 ஏக்கருக்கு மேல் வெல்லம் காய்ச்சுவதற்காக கரும்பு சாகுபடி செய்திருந்தோம். ஆனால் நெற்பயிர் சாகுபடி அதிகரிப்பாலும், போதுமான ஆட்கள் பற்றாகுறையினாலும், கர்நாடகா போன்ற வெளிமாநிலத்தில் இருந்து வெல்லம் இறக்குமதி செய்வதால், போதுமான விலை கிடைக்காததால், கரும்பு சாகுபடி குறைந்து விட்டது. வெல்லம் காய்ச்சும் பணியில் சேலம், உடுமலை, ஈரோடு, எடப்பாடி, கரூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து குடும்பத்தோடு தொழிலாளர்கள் இங்கு வந்து தங்கி அதற்கான பணிகளில் ஈடுபடுவார்கள்.
கரும்பு விவசாயிகள் அனைவரும் தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பிலும், ரேசன் கடைகளிலும் சர்க்கரைக்கு பதில் வெல்லத்தை வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். அதனை எங்களிடம் நேரடியாக அரசே இடைத்தரகர்கள் இன்றி கொள்முதல் செய்ய வேண்டும். இதனால் எங்களுக்கு நல்ல விலை கிடைக்கும். மக்களுக்கும் தரமான வெல்லம் நேரடியாக சென்று சேரும். சர்க்கரைக்கு பதில் வெல்லத்தை வழங்குவது நம் பாரம்பரிய முறைப்படி மக்கள் பொங்கல் செய்ய பயன்படும். வியாபாரிகளிடம் இருந்து வெல்லத்தை கொள்முதல் செய்வதால், விலை அதிகமாவதுடன், உற்பத்தியாளர்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காமல் போய் விடுகிறது. கஷ்டப்பட்டு உற்பத்தி செய்யும் வெல்லத்தை, கஷ்டமில்லாமல் வியாபாரிகள் அதிக லாபம் வைத்து விற்பனை செய்து விடுகின்றனர்.
எனவே இதை கருத்தில் கொண்டு, தமிழகத்திலுள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் வெல்லம் வழங்க வேண்டும். மேலும், ரேஷன் கடைகளுக்கு தேவையான வெல்லத்தை எங்களிடமிருந்து கொள்முதல் செய்தால் இங்குள்ள விவசாயிகளும், உற்பத்தியாளர்களும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தனர். இன்னும் பொங்கலுக்கு அரசு என்ன வழங்க போகிறது என்று தெரியாத நிலை. பொங்கல் தொகுப்பு குறித்து அறிவிக்க வேண்டும் என்று பல கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இன்னும் சரியாக 2 வாரங்களே உள்ள நிலையில் தமிழக அரசு விரைந்து முடிவு எடுத்து வெல்லம் உற்பத்தியாளர்கள் மற்றும் கரும்பு விவசாயிகள் நலனை காக்க வேண்டும்.