மணிலாவில் மகத்தான மகசூல் பெறுவது எப்படி? - விவசாயிகளுக்கு வேளாண்துறை யோசனை
மணிலா அல்லது நிலக்கடலை என அழைக்கப்படும் பயிரானது மிக முக்கியமான எண்ணெய் வித்து பயிராகும். இது கண்டு பூ பூக்கும். காணாமல் காய் காய்க்கும் அதிசய பயிராகும்.
தஞ்சாவூர்: மணிலாவில் மகத்தான மகசூல் பெறலாம் என்று விவசாயிகளுக்கு வேளாண் துறை யோசனை அளித்துள்ளது.
எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் 3ம் இடம்
உலக அளவில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆனால் மணிலா என்கிற நிலக்கடலை உற்பத்தியில் முதலிடத்தில் இருந்தாலும், பெருகிவரும் மக்கள் தொகைக்கு தேவையான எண்ணெய் வித்து பயிர்களை சாகுபடி செய்வது அத்தியாவசியமாகிறது. எனவே மணிலாவுக்கு தேவையான திருந்திய சாகுபடி முறைகளை கையாண்டு உற்பத்தியை உயர்த்த விவசாயிகள் முன் வர வேண்டும் என வேளாண் துறை ஆ ோசனை அளித்துள்ளது.
கண்டு பூ பூக்கும் காணாமல் காய் காய்க்கும்
மணிலா அல்லது நிலக்கடலை என அழைக்கப்படும் பயிரானது மிக முக்கியமான எண்ணெய் வித்து பயிராகும். இது கண்டு பூ பூக்கும். காணாமல் காய் காய்க்கும் அதிசய பயிராகும். சமையல் எண்ணெய் உற்பத்தியிலும் மணிலா முக்கிய இடத்தை வகிக்கிறது. சரியான பட்டமான கார்த்திகை, மார்கழி பட்டத்தில் விதைப்பது சிறந்தது ஆகும். அதிக மகசூல் தரக்கூடிய தரமான விதைகளை விதைக்க வேண்டும். விதை நேர்த்தி செய்து விதைப்பது, சரியான விதை அளவு மற்றும் பயிர் எண்ணிக்கையை ஒரு சதுர மீட்டருக்கு 33 செடிகளுக்கு குறையாமல் பராமரிப்பது, மக்கிய தொழுவுரம் இடுவது மற்றும் மண் பரிசோதனை அடிப்படையில் உரம் இடுவது, உயிர் உரங்கள் மற்றும் உயிர் கட்டுப்பாட்டு காரணிகளை உபயோகிப்பது, நுண்ணூட்ட சத்துக்கள் இடுவது, ஜிப்சத்தை இட்டு மண் அணைப்பது, ஊட்டச்சத்தை இலை வழியாக தெளிப்பது, களைக்கொல்லி இடுவது மற்றும் களை நிர்வாகம் சரியான நேரத்தில் மேற்கொள்வது, சரியான முறையில் நீர் நிர்வாகம் மேற்கொள்வது, பூச்சி மற்றும் நோய் நிர்வாகத்தை கடைபிடித்தல் போன்ற வழிமுறைகளை கவனமாக கையாண்டால் வேளாண்மை எல்லாம் வல்லமையாலே விளையும் என்ற பழமொழிக்கு ஏற்ப விளைச்சலை அள்ளித் தரும்.
நல்ல விதைகளை தேர்ந்தெடுப்பது அவசியம்
நல்ல மகசூலுக்கு அடித்தளம் தரமான நல்லவிதைகளை தேர்ந்தெடுப்பதுதான். இதற்கு ஜேஎல் 24, வெஸ்டன் 44, ஜிஜேஜி 32, கதரிலெப்பாக்ஸி 1812, கோ 4, கோ 6, விஆர்ஐ 7, 8 மற்றும் கே 6 ரகங்கள் சிறப்பானதாகும். நிலக்கடலையின் கொடிய நோயான வேர் மற்றும் தண்டு அழுகல் நோய் வராமல் இருக்கவும், வேர் முடிச்சுகள் அதிகரிக்கவும் விதை நேர்த்தி செய்வது அவசியமாகிறது.
கார்பெண்டாசிம் ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் அல்லது மான்கோசெப் ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் தேவை. சிறிய அளவிலான விதைப்பருப்பு ஏக்கருக்கு 55 கிலோ, பெரிய அளவிலான விதை பருப்புகள் ஏக்கருக்கு 60 - 70 கிலோ இருக்க வேண்டும். 30க்கு10 சென்டிமீட்டர் என்ற இடைவெளியில் விதைத்தால் ஒரு சதுர மீட்டருக்கு 33 செடிகள் பராமரித்து கூடுதல் மகசூல் பெற முடியும். மணிலா சாகுபடியின் வெற்றியை இயற்கை உரங்களை இடுவதை பொறுத்து உள்ளது. ஏக்கருக்கு அஞ்சு டன் தொழுரத்தை இடுவதன் மூலம் மண்ணின் ஈரப்பதம் காக்கப்படுவதுடன் மண் பொலபொலப்பு தன்மையை கொடுக்கும்.
மண் ஆய்வு செய்து உரமிடுவது நல்லது
மண் ஆய்வு செய்து உரமிடுவது சிறந்தது. பொது பரிந்துரையாக யூரியா ஏக்கருக்கு 22 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 125 கிலோ, பொட்டாஷ் 50 கிலோ இடலாம். ரைசோபியம் ஏக்கருக்கு 4 பொட்டலம் (800 கிராம்) வீதம் 20 கிலோ மணலுடன் கலந்து அல்லது குப்பை எருவுடன் கலந்து தூவ வேண்டும்: அடியுரமாக ஏக்கருக்கு 80 கிலோ வீதம் விதைத்த 40 - 45 வது நாளில் 80 கிலோ விதம் ஜிப்சம் இட்டு செடியை சுற்றி மண் அணைக்க வேண்டும். கடலையில் களைகளை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம். மணிலா விதைத்த மூன்றாம் நாள் பெண்டிமெதலின் களைக்கொல்லியை ஏக்கருக்கு 1.3 லிட்டர் வீதம் மணலுடன் கலந்து அல்லது கைத்தெளிப்பான் மூலம் களைகளை கட்டுப்படுத்தலாம்.
மணிலா பயிரின் வளர்ச்சி
மணிலா பயிரின் வளர்ச்சியை ஐந்து பருவங்களாக பிரித்துக் கொள்ளலாம் முளைக்கும் பருவம் 1- 10 நாள், வளர்ச்சி பருவம் 11-25 நாள், பூக்கும் பருவம் 25-45 நாள், கம்பி இறங்கி காய் பிடித்தல் 46- 80 நாள், முதிர்ச்சி பருவம் 81 105 நாள். இப்பருவங்களில் ஈரத்தன்மைக்கு ஏற்ப நீர் பாய்ச்ச வேண்டும்.
விளக்குப்பொறி வைத்து பூச்சி நடமாட்டத்தை கண்காணித்தல், பொறிப் பயராக துவரை, உளுந்து, சூரியகாந்தி போன்றவற்றை சாகுபடி செய்தல், ஏக்கருக்கு 5 இன கவர்ச்சி பொறிவைத்து ஆண் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம், உண்ணும் புழுக்களை கட்டுப்படுத்த டைகுளோர்வாஸ் ஏக்கருக்கு 300 மில்லி வீதம் கலந்து கட்டுப்படுத்தலாம்.
இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்தும் முறை
இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்த கார்பெண்டசிம் 200 கிராம் அல்லது மேங்கோசெப் 400 கிராம் என்ற அளவிலும், துருநோய் கட்டுப்படுத்த மேங்கோசெப் 400 கிராம் அல்லது நனையும் கந்தகம் ஒரு கிலோ வீதம் தெளித்து கட்டுப்படுத்தலாம். மணிலா ரகத்தின் வயதிற்கு ஏற்பவும் பருப்பின் நிறத்தைக் கொண்டும் அறுவடை செய்ய வேண்டும்.