அதிக மழையால் சேதமடைந்த பயிர்கள்- இழப்பை சந்திக்கும் தூத்துக்குடி விவசாயிகள்
தூத்துக்குடி மாவட்டம் அயன் ராசாப்பட்டி முதல் வைப்பார் கிராமம் வரை பாயும் வைப்பாற்றில் முத்தலாபுரம் பாலத்தின் கீழ் தடுப்பணை அமைக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை
பெய்யாத மழை- இழப்பை சந்தித்த விவசாயிகள்- தொடர்ந்து பெய்த அதிக மழை சேதமடைந்த பயிர்கள்- இழப்பை சந்திக்கும் விவசாயிகள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 1.70 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் புரட்டாசி ராபி பருவத்தில் பயிர் வகைகள், எண்ணை வித்துகள், நறுமண செடிகள், பணப்பயிர்கள் போன்றவற்றை விவசாயிகள் பயிரிட்டனர். பருவமழை தாமதமானதால் மண்ணில் ஈரத்தன்மை இல்லாததால் விதைப்பு செய்யப்பட்ட விதைகள் அனைத்தும் கெட்டுவிட்டது. இந்நிலையில் ஐப்பசி 15ஆம் தேதிக்குப் பின்னர் மழை துவங்கியது. இதனால் இரண்டாவது முறையாக உழவு மேற்கொண்டு விவசாயிகள் விதைப்பில் ஈடுபட்டனர். ஆனால் அதனை தொடர்ந்து பெய்த அதிக கனமழையால் ஈரத்தன்மை அதிகரித்து முளைத்த பயிர்கள் அனைத்தும் அழுகிவிட்டன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நிலங்களில் சாய்ந்து கிடக்கும் பயிர்களை அகற்றுவதற்கு செலவழிக்க வழியில்லாமல் அப்படியே விட்டுள்ளனர்.
இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் வரதராஜன் கூறும் போது, ”கடந்த 2020 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை தாமதமாக பெய்ததால் உளுந்து, பாசிப்பயிர்கள் நெத்துக்கள் செடியிலேயே முளைத்தன. அறுவடைக்கு தயாராக இருந்த சோளம், கம்பு ஆகியவை கால்நடை திவனத்துக்கூட உபயோகப்படுத்த கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அந்த ஆண்டு மகசூல் முற்றிலும் பாதிக்கப்பட்டது.அதே நிலைதான் தற்போது ஏற்பட்டுள்ளதாக கூறும் அவர், வெள்ளைச்சோளத்தை பொருத்தவரை தென் மாவட்டங்களில் அதன் மகசூல் அதிகம். வெள்ளைச் சோளம் கால்நடை தீவனமாக நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம் பகுதியில் உள்ள பண்ணைகளுக்கு கொண்டு செல்லப்படும். தற்போது தை மாதம் தொடங்க உள்ள நிலையில் மழைப்பொழிவு நீடிக்கிறது. தை மாதம் மழை தவிட்டுக்கு கூட உதவாது என பழமொழி உண்டு. இன்று வரை பெய்த மழையால் வெள்ளைச்சோளம், கம்பு என அனைத்து பயிர்களும் சேதம் அடைந்து மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடனை கிடனை வாங்கி மகசூல் எடுக்க முடியாமல் நஷ்டத்தை சந்தித்துள்ளதால் அடுத்த ஆண்டு விவசாயம் செய்வதை கேள்விக்குறியாகி உள்ளது. எனவே சேதம் அடைந்த பயிர்களுக்கு 5 ஏக்கர் என்ற வரன் மொழியை தளர்த்தி பயிரிட்ட அனைத்து நிலங்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு நிவாரணமாக 25000 உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கும் இவர் நடப்பாண்டு பயிர் காப்பீட்டு இழப்பீடு தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார்.
மேலும், தூத்துக்குடி மாவட்டம் அயன் ராசாப்பட்டி முதல் வைப்பார் கிராமம் வரை பாயும் வைப்பாற்றில் 11 இடங்களில் தடுப்பணைகள் உள்ளது. இதில் முத்தலாபுரம் பாலத்தின் கீழ் தடுப்பணை அமைக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும் விவசாய கிணறுகளின் நீர்மட்டம் அதிகரிக்கும், குடிநீர் தேவையும் பூர்த்தியாகும் இது குறித்து ஏற்கனவே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னர் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே முத்தலாபுரம் பாலத்தின் கீழ்பகுதியில் தடுப்பணை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.