செங்கல்பட்டு : 11 கோடி கிலோ நெல் கொள்முதல்.. விவசாயிகளை சென்றடைந்த ரூ.187 கோடி
இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 15 ஆயிரத்து 910 விவசாயிகளுக்கு 187 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பிரதான தொழிலாக நெல் சாகுபடி இருந்து வருகிறது. திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ,செய்யூர், மதுராந்தகம், சித்தாமூர் ஆகிய பகுதிகளில் அதிக அளவு நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில் 92 இடங்களில் நேரடி நெல் சாகுபடி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
187 கோடி
இதுவரை செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் இந்த ஆண்டில் மட்டும் ஒரு லட்சத்தி 11 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. சுமார் 15,900 விவசாயிகளுக்கு , இதுவரை 187 கோடி ரூபாய் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தொடர்புகொண்டு கேட்டபோது, இந்த வருடம் 2 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி மாவட்டம் முழுவதும் நடைபெற்றுள்ளது என விவசாயத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு, சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் மெட்ரிக் டன் வரலாம் என கணிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.
16 கோடி கிலோ இலக்கு
இதுவரை மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்து 11 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இலக்கு 160000 மெட்ரிக் டன் நெல் என்றாலும், அதற்கும் மேலாக நெல் விவசாயிகளிடம் இருந்து வந்தாலும் அதைப் பெற்றுக்கொள்ள முன் ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சேமிப்புக் கிடங்குகள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் மூன்று இடங்களில் சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளது . அண்டவாகக்கம் , சிலாவட்டம், கீரப்பாக்கம், ஆகிய மூன்று சேமிப்புக் இடங்களிலும் சுமார் 6 கோடி கிலோ நெல் மூட்டைகளை சேமிக்க முடியும். இதனைத் தொடர்ந்து அரசு நேரடி நெல் கொள்முதல், நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்முட்டைகள் தானியக் கிடங்குகளில் சேமிக்கப்பட்டு வருகிறது.
மாவட்டம் விட்டு மாவட்டம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் ரயில் வழியாக தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு 60 லட்சம் கிலோ நெல் மூட்டைகள் அனுப்பப்பட்டுள்ளது. இதுபோக 1 கோடி கிலோ எடை கொண்ட நெல் மூட்டைகள் சாலை வழியாக திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. பிற மாவட்டங்களுக்கு செல்லும் நெல் மூட்டைகளை, அந்த மாவட்ட அதிகாரிகள் பெற்றுக்கொண்டு, அவற்றை அப்பகுதியில் செயல்படும், அரவை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். செங்கல்பட்டு மாவட்டத்தில் மாதமொன்றுக்கு 25 ஆயிரம் டன் நெல் மூட்டைகளை மாவட்டத்திலிருக்கும் அரவை ஆலைகளில் அரைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் உடனடியாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இருக்கும் அனைத்து நெல்லையும், உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது