Goal keeper Sreejesh : திக்..திக்..6 நொடிகள்..இந்தியாவின் தடுப்புச்சுவர்..யார் இந்த ஸ்ரீஜேஷ்? Men's Hockey | Bronze Medal
41 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றுள்ளது. கடைசியாக இந்திய அணி 1980ஆம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றது. ஒட்டுமொத்த இந்தியாவும் ஹாக்கியையும், இந்திய ஹாக்கி அணி வீரர்களையும் கொண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில், தனது சிறந்த தடுப்பாட்டத்தால் அனைவரின் கவனத்தையும் பெற்றவர், இந்திய ஹாக்கி அணியின் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ்.
இந்தியா - ஜெர்மனி அணிகள் மோதிய போட்டியில், அந்த கடைசி நிமிட திக் திக் நொடிகளை போட்டியை பார்த்தவர்கள் மறக்க முடியாது. போட்டி முடிய 6 நொடிகள் இருந்தபோது ஜெர்மனிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த ஒரு சில நொடிகளில் ஸ்ரீஜேஷ் தடுத்த பெனால்டி, இந்தியாவின் 41 வருட கனவுக்கு போடப்பட்டிருந்த தடுப்பை விலக்கி இருக்கின்றது. கேரளாவில் கொண்டாடப்பட்டு வந்த ஸ்ரீஜேஷ், இப்போது இந்திய அளவில் கொண்டாப்பட்டு வருகிறார். போட்டி முடிந்தது முதல், ஸ்ரீஜேஷ்க்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது. இந்நிலையில்,
அவர் தனது ட்விட்டர் பதிவில், “இந்த பதக்கத்தை என்னுடைய அச்சாவுக்கு (அப்பா) சமர்ப்பிக்கின்றேன். நான் இங்கு இருப்பதற்கு அவர்தான் காரணம்” என உணர்ச்சிவசமாக பதிவு செய்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள வீடியோவில், கேரளாவில் இருக்கும் அவரது குடும்பத்தினர் இந்தியா பதக்கம் வென்றவுடன் கொண்டாடி மகிழ்வது போல இருந்தது. இந்த வீடியோ சமூகவலைதளத்தில் டிரெண்டானது. அதே போல, போட்டி முடிந்தவுடன் “நான் இப்போது சிரிக்கலாம்” என அவர் பதிவிட்டிருந்ததும் வைரலானது. 15 ஆண்டுகளாக இந்திய ஹாக்கி அணியின் அரணாக இருந்து வருபவர். ஒலிம்பிக் தொடரில் பதக்கம் வென்றதற்காக, இந்திய ஹாக்கி அணிக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி பதிவிட்டிருந்தார். அப்போது, கோல்கீப்பர் ஸ்ரீஜேஷிற்கு சிறப்பு வாழ்த்துகளை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
கேரள மாநிலம் கொச்சியில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது ஸ்ரீஜேஷின் சொந்த ஊர். உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், கூடைப்பந்து , ஈட்டி எறிதல், வட்டு எறிதல் என அனைத்து விளையாட்டுகளிலும் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். ஆனால், ஹாக்கி இவரை தேர்ந்தெடுத்தது. விருப்பமில்லாமல் ஹாக்கி விளையாட அரம்பித்த அவர், இன்று இந்திய அணியின் தவிர்க்க முடியாத கோல் கீப்பராக முன்னேறியுள்ளார். ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணி வீரராகவும் வரலாறு படைத்துள்ளார்