Saattai Duraimurugan Kallakurichi : சாட்டை மீது தாக்குதல்! கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!நடந்தது என்ன?
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூற வந்த நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் மீது அங்கிருந்தவர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சியினர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
அந்தவகையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியும், பிரபல யூடியூபருமான சாட்டை துரைமுருகன் கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் வீடுகளில் சென்று ஆறுதல் கூறுவதற்காக சென்றிருந்தார். அவர் காரில் இருந்து இறங்கி பேசிக் கொண்டிருக்கும் போது அங்கிருந்த சிலர் சாட்டை துரைமுருகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவம் தொடர்பாக அவர் அண்மையில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்தும், அந்தப் பகுதியில் நடக்கும் கள்ளச்சாராய வியாபாரம் குறித்தும் சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி இருந்ததாக கூறி வாக்குவாதம் செய்தனர்.
வாக்குவாதம் முற்றியதில் ஒருவர் சாட்டை துரைமுருகனை திடீரென தாக்கினர். பின்னர் சாட்டை துரைமுருகனும் பதிலுக்கு தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நிலைமை சரியில்லாததை தெரிந்து கொண்டு அங்கிருந்த நாம் தமிழர் நிர்வாகிகள் சாட்டை துரைமுருகனை காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.