(Source: Poll of Polls)
Rowdy Kakkathoppu Balaji Profile | டீனேஜில் தடம் மாறிய சிறுவன்..வட சென்னை DON-ஆன கதை!
டாக்டர் ஆக வேண்டும், இன்ஜின்யர் ஆக வேண்டும் என்று கனவுகளோடு வாழ்ந்தவர்களுக்கு மத்தியில் நான் ஒரு ரவுடி ஆக வேண்டும் என்று சிறுவயதில் விநோத ஆசை வைத்து, வட சென்னையில் பிரபல ரவுடியாக உருவெடுத்து போலீசாருக்கு குடைச்சல் கொடுத்து வந்த காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை சென்ட்ரல் ஏழு கிணறு அருகில் உள்ள ஒரு சின்ன சேரிப் பகுதிதான் இந்த காக்கா தோப்பு. இந்தப் பகுதியை சேர்ந்தவர் என்பதால் பாலாஜியின் பெயருக்கு முன்னால் காக்காதோப்பு ஒட்டிக் கொண்டது. 90களில் பாலாஜியின் சித்தப்பா துரை வியாசர்பாடி பகுதியில் பெரிய ரவுடியாக இருந்துள்ளார். சித்தப்பாவை பார்த்து வளர்ந்த பாலாஜி, மற்றவர்கள் சித்தப்பாவை பார்த்து பயந்த மாதிரியே தன்னை பார்த்தும் பயப்பட வேண்டும் என்ற விபரீத குறிக்கோளை வைத்துள்ளார்.
ஆரம்பத்தில் புறா விற்பதை தொழிலாக வைத்திருந்த பாலாஜி தனது பள்ளிப்படிப்பையும் 9-ஆம் வகுப்போடு நிறுத்திவிட்டு ரவுடிசம் பக்கம் திரும்பினார். சென்னை மூலக்கொத்தளம் பகுதியைச் சேர்ந்த மிக முக்கிய ரவுடியான புஷ்பாவை தனது நண்பர்களுடன் சேர்ந்து கொடூரமாக கொலை செய்தது தான் காக்கா தோப்பு பாலாஜியின் முதல் சம்பவம்.
காக்கா தோப்பு பாலாஜியின் வாழ்க்கையில் பிரபலமான கொலையாக பார்க்கப்பட்டது பில்லா சுரேஷ் கொலை, காக்கா தோப்பு பாலாஜியின் opponent-ஆக இருந்த பில்லா சுரேஷை அவரது வீட்டின் roof-ஐ உடைத்து உள்ளே இறங்கி சுரேஷின் மனைவியின் கண்முன்னே மிக கொடுரமாக கொலை செய்தார் பாலாஜி, இதோடு நிற்காமல் அடுத்த அரைமணி நேரத்தில் ரவுடி விஜி என்பவரையும் கொலை செய்தார். இந்த இரட்டை கொலை சம்பவம் தான் வடசென்னையில் இன்று வரைக்கும் பலர் பேர் பேசும் கொலையாக பார்க்கப்படுகிறது. அன்று வடசென்னையில் உருவானது தான் காக்காதோப்பு பாலாஜியின் சாம்ராஜ்யம்.
வடசென்னையில் முக்கிய ரவுடியாக வலம்வந்த நாகேந்திரனுக்காக பல முக்கிய அசைன்மெண்ட்டுகளை காக்கா தோப்பு பாலாஜி முடித்து கொடுத்துள்ளார். இந்த நாகேந்திரன் தான் தற்போது பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கியுள்ளார். அதனால் இவருக்கும் அந்த கொலையில் சம்பந்தம் இருக்குமோ என்ற பேச்சும் அடிபட்டது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது டிடிவி தினகரனுக்கு ஆதரவாக ரவுடிகளை இறக்கி பிரச்சாரம் செய்து அடாவடி செய்த காக்காதோப்பு பாலாஜி சர்ச்சையில் சிக்கினார். அந்த விவகாரத்தில் வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பாலாஜியை போலீசார் GUN பாயிண்ட்டில் கைது செய்தனர். ஆனால் சிறையில் இருக்கும் போதும் பாலாஜி அடங்குவதேயில்லை என சொல்கின்றனர். பல முக்கிய சம்பவங்களுக்கு ஸ்கெட்ச் போடுவது, உள்ளே இருந்துக்கொண்டே பல டாஸ்க்குகளை கூலிப்படைகளை வைத்து முடித்துள்ளார். மற்றொரு பக்கம் செம்மரக் கடத்தலிலும் பாலாஜிக்கு கனெக்சன் இருந்ததாக புகார் இருந்தது.
இந்த நிலையில் தான் 2020-ஆம் ஆண்டு தேனாம்பேட்டையில் ரவுடி சிடி ரவிக்கும், காக்கதோப்பு பாலாஜிக்கும் ஸ்கெட்ச் போட்டனர் பாலாஜியின் எதிரிகள், இதில் நூழிலையில் உயிர் தப்பிய பாலாஜி பெரும்பாலும் தலைமறைவாகவே இருந்து வந்துள்ளார். பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில் வெடிகுண்டுகளை வீசி கொல்ல முயற்சித்த சம்பவம் ஒட்டுமொத்த சென்னையையும் உலுக்கியது. 2021ல் ஆயுத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்த பாலாஜி தலைமறைவாக இருந்துள்ளார்.
காக்கத்தொப்பு பாலாஜி மீது 25 கொலை வழக்குகள் உட்பட 59 வழக்குகள் நிலுவையில் இருந்தது, அதனால் சென்னை காவல் ஆணையராக அருண் பதவியேற்றதில் இருந்தே அவரது ரேடாரில் காக்காதோப்பு அருண் இருந்துள்ளார். போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகேயுள்ள பிஎஸ் என் எல் குடியிருப்பு பகுதியில் பதுங்கியிருந்த காக்கா தோப்பு பாலாஜியை பிடிக்க போலீசார் சென்றனர். ஆனால் அவர்களை பார்த்ததும் போலீசாரை பாலாஜி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் என்கவுண்டர் செய்தனர்.