TVK Arunraj on Vijay : ”கலெக்டருக்கே phone போட்டோம்விஜய் ஏன் கரூர் போகல தெரியுமா”தவெக அருண்ராஜ் பகீர்
கரூரில் உயிரிழப்புகள் ஏற்பட்டதும் விஜய் அங்கே உடனே சென்று மக்களை சந்திக்க நினைத்ததாகவும் ஆனால் மாநில அரசிடம் இருந்து எந்த ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை என்று பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார் அருண்ராஜ்.
கரூரில் தவெக பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தவெகவினர் போலீசாரின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகவும் விஜய் தாமதமாக வந்ததால் தான் கட்டுக்கடங்காத கூட்டம் வந்ததாகவும் அரசுத் தரப்பில் புகார் வைக்கப்பட்டுள்ளது. மற்றொரு பக்கம் சதி செய்து நெரிசலை ஏற்படுத்தியதாக தவெகவினர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
கரூர் விவகாரத்தில் தவெக தலைவர் விஜய்யை நோக்கி கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. உயிரிழப்புகள் ஏற்பட்ட பிறகு முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள், எதிர்க்கட்சியினர் என அடுத்தடுத்து கரூருக்கு படையெடுத்த நிலையில் விஜய் மட்டும் அந்த பக்கமே தலைகாட்டாமல் சென்றது ஏன் என்ற கேள்வி வந்தது. உயிரிழப்புகள் பற்றிய செய்தி வந்து கொண்டிருக்கும் போதே விஜய் சென்னை திரும்பினார். திருச்சி ஏர்போர்ட்டில் வைத்து செய்தியாளர்கள் கேள்வி கேட்கும் போதும் வாய் திறக்காமல் தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். விஜய் வரவில்லையென்றாலும் அடுத்தகட்ட தலைவர்களால் கூட கரூருக்கு வர முடியாதா என்று கேள்வி எழுப்பினர்.
இந்தநிலையில் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக விஜய் காத்திருந்ததாக தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். NDTV-க்கு அளித்த பேட்டியில் பேசிய அவர், ‘நான் ஏர்போர்ட்டுக்கு சென்று கொண்டிருக்கும் போது உயிரிழப்பு பற்றி செய்தி கிடைத்தது. முதலில் நாங்கள் அதை நம்பவில்லை. ஆனால் உயிரிழப்புகள் அதிகமானதும் எங்கள் கட்சித் தலைவர் கரூருக்கு செல்ல விரும்பினார். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களது துக்கத்தில் பங்கெடுக்க நினைத்தார். ஆனால் அரசு அதிகாரிகளிடம் இருந்து எங்களுக்கு எந்த ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை. நாங்கள் அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தோம். யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. நாங்கள் மீண்டும் அந்த இடத்தில் இக்கட்டான சூழல் உருவாவதை விரும்பவில்லை. அதனால் விஜய் கனத்த இதயத்துடன் சென்னை திரும்பினார். அடுத்ததாக இரண்டாம் கட்ட தலைவர்களும் கரூர் சென்று சிகிச்சை பெற்றவர்களை மருத்துவமனையில் சந்திக்க நினைத்தோம். நானே கலெக்டரை செல்போனில் தொடர்பு கொண்டேன். ஆனால் அங்கிருந்து எந்த பதிலும் வரவில்லை. தவெகவில் இரண்டாம் கட்ட தலைவர்கள் இல்லை என சொல்வது உண்மையில்லை. மாவட்ட செயலாளர்களையெல்லாம் திமுகவினர் மிரட்டிக் கொண்டு இருக்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.





















