Vijay Vs DMK | ”திமுக அரசின் அலட்சியம்”பொங்கி எழுந்த விஜய்!கள்ளச்சாரய விவகாரம்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய விவகாரத்தில் திமுக அரசின் செயல்பாட்டை, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடுமையாக சாடியுள்ளார். கள்ளச்சாராய மரணங்களை தடுக்க திமுக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கள்ளச்சாராயத்தின் கடந்தகால நிகழ்வுகளை சுட்டிக்காட்டி விஜய் பொங்கி எழுந்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்குவதாக, கடந்த பிப்ரவரி மாதம் விஜய் அறிவித்தார். இதற்கான அதிகாரப்பூர்வ சமூக வலைதள கணக்குகளும் தொடங்கப்பட்டன. ஆனால், அவற்றில் வெளியான அறிக்கைகளில் பெரும்பாலும் பிறந்தநாள் மற்றும் பண்டிகளை தொடர்பான வாழ்த்துச் செய்திகளாகவே இருந்தனர். இந்நிலையில், முதன்முறையாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஒரு கண்டன அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதிலும், அரசு நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாகவே, கள்ளச்சாராய மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக வெளிப்படையாக சுட்டிக் காட்டி திமுகவை அட்டாக் செய்துள்ளார்.
இதுதொடர்பான ட்விட்டர் பதிவில், “கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது. இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான போதும், விசிக மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகளுக்கு விஜய் வாழ்த்து தெரிவித்து இருந்தார். ஆனால், திமுக எம்.பிக்களுக்கு அவர் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், யாரை எதிர்த்து அரசியல் செய்கிறோம் என்பதை வ்ஜய் முடிவு செய்துவிட்டார். தமிழ்நாடு அரசியலில் தங்களின் எதிரி திமுக தான் என விஜய் வெளிப்படுத்தி இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.