(Source: Poll of Polls)
Senthil Balaji vs Supreme Court : ’’நான் அமைச்சர் ஆகணும்’’நீதிபதி vs செந்தில் பாலாஜி காரசார விவாதம்
’’நான் மீண்டும் அமைச்சராக வேண்டும்’’ என உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு முறையிட்ட நிலையில், அமைச்சர் பதவி
வேண்டுமென்றால் இப்போதே சொல்லுங்கள்..உங்கள் பிணை குறித்து மறுபரிசீலனை செய்யலாம் என செக் வைத்துள்ளது உச்சநீதிமன்றம்.
செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவது குறித்த மேல்முறையீட்டு வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரனைக்கு வம்த நிலையில், நீதிபதிக்கும் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞருக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
2011 முதல் 2015ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிகாலத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி. போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2023 ஜூன் 13ஆம் தேதி நள்ளிரவு அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து தனது அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். இதனையடுத்து ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு கடந்த 2024 செப்டம்பர் 26 ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிணை வழங்கியது.
ஆனால் பிணை வழங்கிய அடுத்த நாளே முதல்வர் ஸ்டாலின் செந்தில் பாலாஜியை மீண்டும் அமைச்சராக்கினார். அவர் வகித்து வந்த அதே மின்சாரத்துறையையும் வழங்கினார் ஸ்டாலின். இதனையடுத்து பினையில் வெளிவந்த அடுத்த நாளே செந்தில் பாலாஜி அமைச்சரானது சர்ச்சைக்குள்ளாகி இதுதொடர்பான மனுக்கள் நீதிமன்றத்தில் குவிய, அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஓஹா அமைச்சர் பதவியா? பினையா? என செந்தில் பாலாஜிக்கு செக் வைக்க வேறு வழியின்றி அமைச்சர் பதவியை மீண்டும் ராஜினாமா செய்தார் பாலாஜி.
இந்நிலையில் மீண்டும் செந்தில் பாலாஜி அமைச்சராவது குறித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் விசாரனைக்கு வந்தது. செந்தில் பாலாஜிக்காக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதாடினார்.
அப்போது முறையிட்ட கபில் சிபல், குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் அமைச்சராக தொடரக்கூடாது என அரசியலமைப்பில் இல்லை. முன்னதாக செந்தில் பாலாஜி அமைச்சராவதற்கு இந்த நீதிமன்றம் மறுப்பு தெரிவிக்கவில்லை என தெரிவித்தது. இந்த வழக்கு அப்படி ஒரு முன்னுதாரனமாக ஆகிவிடக்கூடாது என வாதாடினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ஆம் செந்தில் பாலாஜி அமைச்சர் ஆவது குறித்து எந்த ஆட்சேபனையும் இல்லை ஆனால் அவர் அமைச்சர் ஆன பின்பு சாட்சியங்களை அழிக்க நினைத்தால் அவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினாலோ உடனடியாக உங்கள் பினை ரத்து செய்யப்படும் என தான் முன்னதாக நீதிபதி ஓஹா தெரிவித்தார் என தெளிவுப்படுத்தினார்.
அதற்கு பதிலளித்த கபில் சிபல், சரி..அப்போ நீதிமன்றத்திற்கு எந்த ஆட்சேபனையும் இல்லையென்றால் செந்தில் பாலாஜி அமைச்சர் ஆகலாம் இல்லையா..ஒருவேளை நீங்கள் சொல்லும்படி அவர் அமைச்சரான பிறகு சாட்சியங்களை மிரட்டினாலோ அழிக்க முற்பட்டாலோ அவரது பிணையை ரத்து செய்து கொள்ளலாம் என தெரிவித்தார்.
உடனடியாக குறுக்கிட்ட மற்றொரு நீதிபதி, முன்னதாக இந்த வழக்கை விசாரித்த ஓய்வுபெற்ற நீதிபதி ஓஹா, செந்தில் பாலாஜி பினையில் இருந்து வெளிவந்த அடுத்த நாளே அமைச்சரானதற்காக தான் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தார். ஒருவேளை நீங்கள் விடுதலை பெறும் முன்னர் அமைச்சராக விரும்பினால் அதுதொடர்பான தனி மனுவை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறு கூறினார்.
அதற்கு எதிர்க்கருத்து தெரிவித்த கபில் சிபல், எத்தனையோ அமைச்சர்கள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதில் எத்தனை பேர் ராஜினாமா செய்தார்கள் முதலில் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும் என வாதாடினார்.
பிறகு பேசிய நீதிபதி, மீண்டும் சொல்கிறோம் செந்தில் பாலாஜி அமைச்சராவது பற்றி எந்த ஒரு ஆட்சேபனையும் நீதிமன்றத்திற்கு இல்லை. ஏற்கனவே சாட்சியங்களை மிரட்டியதாக உங்கள் தரப்பு மீது குற்றச்சாட்டு உள்ளது. எனவே மீண்டும் அமைச்சர் ஆன பின், உங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு அது நிரூபிக்கப்பட்டால் உடனடியாக உங்கள் பினை குறித்து மறு பரிசீலனை செய்யப்படும். அதாவது பினை ரத்து செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்படலாம் என தெரிவித்தார் நீதிபதி.
இதனையடுத்து செந்தில் பாலாஜி தரப்பு தங்களது மனுவை திரும்பபெறவே நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.





















