MK Stalin MASTER PLAN : திமுக எம்.பிக்கள் கூட்டம்..முதல்வரின் அதிரடி முடிவு!ஆட்டம் ஆரம்பம்
நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவி இந்த முறை காங்கிரஸுக்கு சென்ற நிலையில், நாடாளுமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுகவிற்கு கொடுக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு உள்ளிட்ட புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. மத்தியில் மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமையவிருந்தாலும் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை.
இந்நிலையில், புதிதாக வெற்றி பெற்றுள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 6.30 மணிக்கு திமுக தலைமை அலுவலகமாக அறிவாலயத்தில் நடைபெறுகிறது.
கடந்த முறையை காட்டிலும் இண்டியா கூட்டணி கட்சி சார்பில் அதிக அளவில் நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ளதால், இம்முறை நாடாளுமன்றத்தில் அவ்வளவு எளிதாக எந்த ஒரு மசோதாவையும் பாஜக அரசால்- நிறைவேற்றிவிட முடியாது என்ற நிலை உள்ளது. எனவே, நாடாளுமன்றத்தில்
திமுக உறுப்பினர்கள் எப்படி செயல்பட வேண்டும், என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்த அறிவுறுத்தல்களை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நாளை கூட்டப்பட்டிருக்கிறது.
அதே நேரத்தில் புதிதாக நாடாளுமன்ற திமுக குழு தலைவரையும் நாளை நடைபெறும் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கவுள்ளனர். தற்போதைய குழ் தலைவராக திமுகவின் பொருளாளராக உள்ள டி.ஆர்பாலு செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள எம்.பிக்கள் கூட்டத்திலும் டி.ஆர்.பாலுவே திமுக நாடாளுமன்ற குழு தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறார்.
அதே மாதிரி மக்களையின் திமுக உறுப்பினர்கள் குழுவின் துணைத் தலைவராக தூத்துக்குடி எம்.பியும் திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறார். நீலகிரி எம்.பியான ஆ.ராசா திமுக மக்களை உறுப்பினர் குழுவின் கொறடாவாக நாளைய கூட்டத்தில் தேர்வு செய்யப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், கொறடா பொறுப்பை பெற இந்த முறை அரக்கோணம் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே நேரத்தில் எதிர்க்கட்சி தலைவரை இண்டியா கூட்டணி கட்சிகள் இன்னும் தேர்வு செய்யாத நிலையில், காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தியே எதிர்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி இல்லாதப்பட்சத்தில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே தேர்ந்தெடுக்கப்படுவார் என கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் 40க்கு 40 தொகுதிகளை வென்றுள்ள திமுகவிற்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி கொடுக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும், அப்படி கொடுக்கப்பட்டால், எதிர்க்கட்சி துணைத் தலைவராக டி.ஆர்.பாலுவே இருப்பார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளது.