Rahul Gandhi vs Mamata banerjee | ராகுல் சொன்ன வார்த்தை! பதிலடி கொடுக்கும் மம்தா! மீண்டும் மோதல்
பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, ஆளுங்கட்சியை நோக்கி சந்தேகத்தை எழுப்பிய நிலையில், மீண்டும் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே மோதல் முற்றியுள்ளது.
மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கு விசாரணைஒ சிபிஐ கைகளுக்கு சென்றுள்ள நிலையில், இந்த குற்றத்தில் மேலும் சில நபர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், அந்த உண்மையை மறைப்பதற்கான வேலைகள் நடந்து வருவதாகவும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு எதிராக குரல்கள் எழுந்து வருகின்றன. உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க செய்வோம் என மம்தா பானர்ஜியும் உறுதி கொடுத்தார்.
இந்த விவகாரம் பற்றி கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி, பாதிக்கப்பட்டவருக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக குற்றம் சாட்டப்பட்டவரைக் காப்பாற்றும் முயற்சி, மருத்துவமனை மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின்மீது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது என்று சொன்னது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. கூட்டணியில் இருக்கக் கூடிய ராகுல்காந்தியே இப்படி ஒரு சந்தேகத்தை கிளப்பலாமா என மம்தா தரப்பினர் கொந்தளித்தனர்.
இந்தநிலையில் கர்நாடக காங்கிரஸ் விவகாரத்தை வைத்து ராகுல்காந்தியை டார்கெட் செய்து வருகின்றனர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர். கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு வீட்டு மனைகள் வழங்கிய விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளதாக கர்நாடக காங்கிரஸுக்கு சிக்கல் வந்துள்ளது. இந்த விவகாரத்தை வைத்து விமர்சித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி குணால் கோஷ், ’உங்களது முதல்வரை ராஜினாமா செய்ய சொல்வீர்களா ராகுல். இது ஒரு பெரிய ஊழல் குற்றச்சாட்டு. மேற்கு வங்க சம்பவம் பற்றிய உண்மை எதுவும் தெரியாமல், மம்தா எடுத்த நடவடிக்கைகள் பற்றி தெரியாமல் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கிறீர்கள். தற்போது நீங்கள் உங்கள் முதலமைச்சர் மீது நடவடிக்கை எடுப்பீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களவை தேர்தலுக்கு முன்பிருந்தே காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே வார்த்தை போர் நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக சுமூகமான சூழல் உருவாகி வந்த நேரத்தில், தற்போது இரு தரப்பினரும் மோதிக் கொள்ள ஆரம்பித்துள்ளது இந்தியா கூட்டணியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.