Jagan Mohan Reddy | ஜெகன் மோகனுக்கு டார்கெட்! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்! ஓப்பனா பேசிய திருமா
ஆந்திரபிரதேசத்தில் சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணிக்கு சென்ற நிலையில், ஜெகன் மோகன் ரெட்டியை இந்தியா கூட்டணி பக்கம் கொண்டு வருவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. டெல்லியில் நடந்த போராட்டம் அதற்கான முதல் படியாக எதிர்க்கட்சிகளுக்கு கைகொடுத்துள்ளது.
மக்களவை தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெறாத பாஜக, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் அமர்ந்துள்ளது. மக்களவை தேர்தல் மட்டுமல்லாமல் ஆந்திர தேர்தலில் சாதித்து ஆட்சியை பிடித்தது தெலுங்கு தேசம்.
ஆனால் தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்த நாள் முதல் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் படுகொலை செய்யப்பட்டு வருவதாகவும், அவர்களது வீடுகள், அலுவலகங்களில் தாக்குதல் நடத்தப்படுவதாகவும் ஜெகன் மோகன் ரெட்டி குற்றம்சாட்டி வருகிறார். இந்த ஆட்சிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் டெல்லி ஜந்தர் மந்தரில் தர்ணா போராட்டம் நடத்தினார்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவாக திரண்டனர் இந்தியா கூட்டணியினர். சமாஜ்வாதி கட்சி சார்பில் அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்கரே தரப்பு சிவசேனாவில் சஞ்சய் ராவத், விசிக சார்பில் திருமாவளவன் ஆகியோர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவாக வந்தனர். மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் சார்பிலும் ஜெகன் மோகனுக்கு ஆதரவுக் குரல் வந்துள்ளது. ஜெகன் மோகன் ரெட்டி இந்தியா கூட்டணியில் இணைய வேண்டும் என நேரடியாக அழைப்பு விடுத்தார் விசிக தலைவர் திருமாவளவன்.
சந்திரபாபு நாயுடு தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள நிலையில், ஜெகன் மோகன் ரெட்டி இந்தியா கூட்டணி பக்கம் வந்தால் மாநில அளவிலும் வலுவடைவதற்கு உதவியாக இருக்கும் என கணக்கு போட்டுள்ளனர். ஆனால் இந்த விவகாரத்தில் ஆந்திர காங்கிரஸ் ஜெகன் மோகனுக்கு எதிரான விமர்சனத்தை முன்வைத்துள்ளது கவனம் பெற்றுள்ளது. ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், விவசாயிகளையும் கண்டுகொள்ளாமல் ஜெகன் மோகன் தனிப்பட்ட காரணங்களுக்காக தர்ணாவில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ys சர்மிளா விமர்சித்துள்ளார். எதிர்க்கட்சிகள் ஜெகன் மோகன் ரெட்டியை கூட்டணிக்கு அழைக்கும் நேரத்தில் காங்கிரஸை சேர்ந்த தலைவர் ஒருவர் அவரை விமர்சனம் செய்துள்ளது விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.
கடந்த காலங்களில் ஆளும் பாஜக அரசு மீது ஜெகன் மோகன் ரெட்டி பெரிதாக விமர்சனங்களை முன்வைக்காதது அவர் பாஜகவின் பி டீமா என ஆந்திர அரசியலில் விமர்சிக்கப்பட்டது. தற்போது அவர் பாஜகவுக்கும், தெலுங்கு தேசத்திற்கும் எதிராக அழுத்தமான குரலை கொடுத்து வருவதால் இந்தியா கூட்டணிக்கு வருவதற்கான சரியான நேரம் என கணக்கிட்டுள்ளனர். அடுத்தகட்டமாக தலைவர்களை நேரடியாக அனுப்பி ஜெகன் மோகன் ரெட்டியுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிடப்பட்டு வருகிறது.