Haryana election result : சொதப்பிய காங்கிரஸ் ப்ளான்! தோல்விக்கான 5 காரணங்கள்! தட்டித் தூக்கிய BJP
ஹரியானாவில் கருத்துக்கணிப்புக்கு மாறாக தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்கு இடியை இறக்கும் வகையில் வந்துள்ளது. விவசாயிகள் போராட்டம், மல்யுத்த வீரர்கள் போராட்டத்தை காங்கிரஸ் டார்கெட் செய்தாலும் சில முக்கிய விஷயங்களில் காங்கிரஸ் கோட்டை விட்டுள்ளது.
90 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட ஹரியானாவில் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸை பின்னுக்கு தள்ளி பாஜக முன்னிலை வகித்து வருகிறது. ஆரம்பம் முதலே கள நிலவரம் காங்கிரஸுக்கு சாதகமாக இருப்பதாக பேசப்பட்டாலும், தேர்தல் முடிவுகள் தலைகீழாக மாறியுள்ளன. பாஜக மீது விவசாயிகளுக்கு இருக்கும் அதிருப்தியை ஓட்டாக மாற்றும் முயற்சியில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி ஈடுபட்டதும் காங்கிரஸுக்கு கை கொடுக்கவில்லை. நிலவரத்தை பொறுத்தவரை பாஜக 3வது முறையாக மீண்டும் ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியுள்ளது.
ஹரியானா காங்கிரஸில் இருந்த கோஷ்டி பூசலும், அதிகாரத்துக்கான மோதலும் தோல்விக்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் பதவியில் காங்கிரஸ் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா மற்றும் மூத்த தலைவர் குமாரி செல்ஜா இடையேயான அதிகார மோதல் வெளிப்படையாகவே தெரிந்தது. கட்சிக்குள் உட்கட்சி பூசல் இருக்கும் போதே அவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள் என்ன ஆகும் என்ற பிரச்சாரத்தை கையில் எடுத்தனர் பாஜகவினர்.
அதேபோல் ஹரியானாவில் காங்கிரஸின் வாக்குகளை ஆம் ஆத்மி மற்றும் மாநில கட்சிகள் பிரித்துள்ளதாக தெரிகிறது. சில தொகுதிகளில் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே பாஜக வெற்றி பெற்றுள்ளது.
முழுக்க முழுக்க jat சமூக வாக்குகளை குறிவைத்தே காங்கிரஸின் மொத்த தேர்தல் பிரச்சாரமும் அமைந்தது. அதனால் மற்ற சமுதாய வாக்குகளை பிடிப்பதில் காங்கிரஸ் தவறவிட்டது. ஹரியானா மக்கள் தொகையில் ஜாட் சமூகத்தினர் 26-28 சதவீதம் இருக்கின்றனர். அதே நேரத்தில் 17 பட்டியலின ரிசர்வ்ட் தொகுதிகள் இருக்கின்றன. அதனால் ஒரு கட்சி பெரும்பான்மை பெறுவதில் இந்த தொகுதிகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. ஆனால் காங்கிரஸின் தேர்தல் வியூகத்தில் ஜாட்டை விட மற்ற தொகுதிகளின் முக்கியத்துவத்தை கண்டுகொள்ளாமல் விட்டதாக தெரிகிறது. அந்த வாக்குகள் அனைத்தையும் பாஜக ஈஸியாக தங்கள் வசம் ஆக்கியதாக சொல்கின்றனர்.
பாஜக நிர்வாகிகளின் களப் பணிகள் காங்கிரஸை விட மிகவும் தீவிரமாக இருந்ததாக சொல்கின்றனர். நகரப் பகுதிகளில் பாஜககவினருக்கு ஏற்கனவே சாதகமான சூழல் இருந்த நிலையில், கிராமப்புறங்கள் வரை கட்சியின் செயல்பாடுகளை கொண்டு சேர்க்கு வேலையில் இறங்கியது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்காக 150 தன்னார்வலர்களை நியமித்து வேலை பார்த்துள்ளனர்.
மிக முக்கியமாக கள நிலவரம் தனக்கு இருப்பதாக நினைத்துக் கொண்டு காங்கிரஸ் மெத்தனமாக இருந்ததே ஹரியானா தேர்தல் தோல்விக்கான முக்கிய காரணமாக இருப்பதாக சொல்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.