North Indian Farmers : விவசாயத்திலும் வட இந்தியர்கள்..வயலில் ஹிந்தி பாடல்கள்
மயிலாடுதுறையில் வடமாநில தொழிலாளர்கள் கபி கபி என ஹிந்தி பாடலை பாடிக் கொண்டே வயல் வெளியில் நாற்று நடுவது கவனத்தை ஈர்த்துள்ளது.
வயல்வெளியில் நாற்று நடும் போது களைப்பு தெரியாமல் இருக்க பெண்கள் நாட்டுப்புறப் பாடல்களை பாடுவது வழக்கம். நல்ல ராகத்துடன் கோரஷாக பெண்கள் பாடும் பாடல்களுக்கென தனி ரசிகர்களே இருக்கின்றனர். ஆனால் மயிலாடுதுறையில் ஒரு ட்விஸ்ட்டாக வட மாநில தொழிலாளர்கள் ஹிந்தி பாடல்களை பாடி வேலை செய்வதை பார்க்க முடிகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாகவே விவசாய பணிகளுக்கு தேவையான ஆட்கள் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.100 நாட்கள் வேலைக்கு ஆட்கள் சென்றுவிடுவதால் நாற்று நடும் பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதனால் வட மாநில தொழிலாளர்களை வைத்து நாற்று நடும் பணிகளில் இறங்கியுள்ளனர்.
மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி பகுதியில் ஒப்பந்த முறையில் ஏக்கருக்கு 4,500 ரூபாய் சம்பளத்தில் 12 தொழிலாளர்கள் நாற்றுபரித்து நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். களைப்பு தெரியாமல் இருக்க வடமாநில பாடல்களை பாடி உற்சாகத்துடனும் மிக நேர்த்தியாக திருந்திய நெல் சாகுபடி முறையில் நாற்றுபரித்து கைநடவு செய்து வருகின்றனர். குறைந்த சம்பளத்தில் வடமாநில தொழிலாளர்கள் பணி செய்வதால் லாபம் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
குறைந்த சம்பளத்துக்கு அதிக வேலை வாங்குவது தவறு என்று சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும் குறஒந்த சம்பளத்திற்கு வருவதால் வட மாநில தொழிலாளர்களுக்கே வேலைகளில் முன்னுரிமை அளிப்பதாக குற்றச்சாட்டு உள்ள நிலையில், விவசாயத்திலும் வட மாநில தொழிலாளர்களை பணியமர்த்துவதுக்கு எதிர்ப்பும் எழுந்துள்ளது.