S 400 Missile: ”அவன் குறுக்க போயிடாதீங்க சார்” ரஷ்யா அனுப்பிவைத்த எமன்.. S-400 சாவுமணி அம்சங்கள்!
இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் அனுப்பிய மிசைல்கள் அனைத்தையும் வானிலேயே பஸ்பம் செய்து, இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ள நிலையில்.. இந்த தாக்குதலில் ஒரு மிசைலை கூட தரையில் இறங்க விடாமல் தடுத்து இந்தியாவின் தடுப்பு சுவராக திகழ்ந்துள்ளது ரஷ்யாவின் S 400 என்னும் போர் கருவி. அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி இந்தியா இதை வாங்கியது ஏன்? அப்படி இதன் ஸ்பெஷாலிட்டி என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்..
ஆப்ரேஷன் சிந்தூருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் ராணுவம் நேற்று மாலை இந்தியாவின் மீது சர மாரியான மிஸைல் தாக்குதலை தொடங்கியது. நூற்றுக்கணக்கான மிஸைல் மற்றும் டிரோன்கள் இந்தியாவின் மீது வீசப்பட்டன, ஆனால் வானில் அந்த இலக்குகள் நகர்ந்து கொண்டிருந்த போதே இந்தியாவின் ANTI AIR DEFENSE system மூலமாக அவை தகர்க்கப்பட்டன. அதற்கு இந்திய ராணுவத்திற்கு ரஷ்யாவின் S-400 என்ற போர் கருவி பக்கபலமாக இருந்துள்ளது.
மேலும் இஸ்ரேலின் ஹார்பி ட்ரொன்கள் மூலமாக பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு ரேடர்களை இந்தியா சிதைத்துள்ளது. லாகூரில் அமைக்கபட்டிருந்த ரேடார் சிஸ்டம் முழுவதுமாக அழிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் சுதர்சன சக்ரா என அழைக்கப்படும் S-400 ANTI MISSILE DEFENSE சிஸ்டம் ரஷ்யாவால் உருவாக்கப்பட்டது ஆகும். இதன் சிறப்பம்சம் என்னவென்றால், 600 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து, நம்மை நோக்கி மிஸைல் வர தொடங்கும் போதே, இதனால் அதை அடையாளம் காண முடியும். இதில் 4 விதமான INTERCEPTORS உள்ளன, அதன்படி 120 கி.மீ, 200, 250, 380 கிமீ ரேஞ்ச் வரை பாய்ந்து, இடைமறித்து இலக்குகளை சிதறடிக்கும் வல்லமை கொண்டது. இதன் மூலம் பல கிலோ மீட்டர் வான் எல்லையை அசால்ட்டாக பாதுகாக்க முடியும். மேலும் இதோடைய முக்கியமான ஸ்பெஷாலிட்டி, ஒரே நேரத்தில் 300 இலக்குகளை கண்டறிந்து அழிக்கக்கூடிய சக்தி படைத்தது இது.
அதன் காரணமாக ஒரே நேரத்தில் போர் விமானங்கள், க்ரூஸ் ஏவுகணைகள், பாலிஸ்டிக் ஏவுகணைகள், டிரோன் போன்ற பல அபாயங்கள் நம்மை நோக்கி வந்தாலும், அவை அனைத்தையும் நம்மால் சமாளிக்க முடியும். இந்த S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பில் மூன்று பிரிவுகள் உள்ளன, அதன்படி ஏவுகணை லாஞ்சர், மிகவும் சக்தி வாய்ந்த ரேடார் மற்றும் கட்டுப்பாட்டு அறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படும். இதன் மூலம் ஒரே நேரத்தில் 36 ஏவுகணைகளையும், தொடர்ந்து 72 ஏவுகணைகளையும் அடுத்தடுத்து சுட்டு வீழ்த்த முடியும்.
சூப்பர் சோனிக் to ஹைப்பர் சோனிக் வேகத்தில் ஏவுகணைகளை ஏவும் திறன் கொண்டுள்ளது. ஸ்டெல்த் மோடில் அதாவது எதிரிகளின் ரேடாரில் சிக்காமல் தாக்குதல் நடத்துவதில் முன்னணியில் உள்ள, அமெரிக்காவின், F-35 போர் விமானத்தை கூட தவிடுப்பொடியாக்கும் சக்தி இதற்கு உள்ளது. இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தத்தில், 5 S-400 ஏவுகணை சிஸ்டம் நமது ராணுவத்திற்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 3 சிஸ்டம் தற்போது இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள இரண்டும் அடுத்த ஆண்டு ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கைவசம் உள்ள மூன்று அமைப்புகளும் இந்திய விமானப்படையால் கையாளப்படுகிறது. அவை தற்போது பாகிஸ்தான் மற்றும் சீனா எல்லையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
முறுக்கிக் கொண்ட அமெரிக்கா நீண்ட தூர இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டிருப்பதால், S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை மிகவும் ஆபத்தானதாக நேட்டோ அமைப்பு கருதுகிறது. இதன் காரணமாக 2018ம் ஆண்டு ரஷ்யாவுடன் மேற்கொள்ளப்பட்ட, S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தைத்தை கைவிடுமாறு, அமெரிக்கா எச்சரித்தது. உக்ரைன் உடனான போரை குறிப்பிட்டு, ரஷ்யா உடனான ராணுவ தளச்வாட ஒப்பந்தத்தை கைவிடாவிட்டால், இந்தியாவிற்கு பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்படும் எனவும் அழுத்தம் தரப்பட்டன. அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் நேரடியாகவே இந்தியாவிற்கு வருகை தந்து, ரஷ்யா உடனான ஒப்பந்தத்தால் இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவே பாதிக்கும் என வலியுறுத்தினார்.
அதேநேரம், S-400 அண்டை எதிரிகளான சீனா மற்றும் பாகிஸ்தானிடமிருந்து வரும் சாத்தியமான அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஒரு முக்கிய திறன் இடைவெளியை நிரப்புகிறது என இந்தியா விளக்கமளித்தது. ரஷ்யாவுடனான தனது நீண்டகால பாதுகாப்பு உறவையும், அதன் வான் பாதுகாப்பு வலையமைப்பில் S-400 வகிக்கும் முக்கிய பங்கையும் வலியுறுத்தி அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை மறுத்தது. தங்கள் நாட்டு பாதுகாப்பை உறுதி செய்வதற்கான எந்த நடவடிக்கையையும் இந்தியா எடுக்கும் என்றும், அதில் வெளிநாட்டு அழுத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றும் மத்திய அரசு திட்டவட்டமாக குறிப்பிட்டது. அதன் விளைவாகவே இன்று, S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை எல்லையில் பாகிஸ்தானுக்கு சிம்ம சொப்பனமாக நிலை நிறுத்தியுள்ளது.





















