Mamata Banerjee | ”ஒரு வாரம் தான் டைம்..”மம்தா வைத்த கெடு
கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் வழக்கின் குற்றவாளிகளை ஞாயிற்றுக்கிழமைக்குள் கைது செய்ய வேண்டும் "போலீஸ்க்கு ஒரு வாரம் டைம்..இல்லை என்றால் விசாரணை சிபிஐயிடம் ஒப்படைக்கப்படும் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா அதிரடியாக அறிவித்துள்ளார்.
மேற்குவங்கத்தில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவருக்கு இந்த கொடூரம் நடந்துள்ளது. ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில்தான் கொல்லப்பட்ட பெண், படித்து வந்துள்ளார். இரண்டாம் ஆண்டு முதுகலை மருத்துவ மாணவரான அவர், வியாழன் இரவு தாமதமாக உணவு சாப்பிட்டுவிட்டு மூன்றாவது மாடியில் உள்ள செமினார் ஹாலில் படிக்கச் சென்றார். மறுநாள் காலை அவர் சுயநினைவின்றி காணப்பட்டார்.பயிற்சி பெண் மருத்துவரின் பிரேத பரிசோதனையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. பெண்ணின் அந்தரங்க உறுப்புகள், முகம், உதடுகள், கழுத்து, வயிறு, விரல்கள் மற்றும் கணுக்கால் ஆகிய இடங்களில் காயங்கள் இருந்ததிருக்கின்றன.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சஞ்சய் ராய். நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்குவங்கம் மட்டும் இன்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, மேற்குவங்கத்தை ஆளும் மம்தா தலைமையிலான திரிணாமுல் அரசுக்கு இது பெரும் நெருக்கடியாக மாறியுள்ளது. இந்த நிலையில், வழக்கை விசாரித்து முடிப்பதற்கு மாநில காவல்துறைக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நேரம் தந்துள்ளதாகவும் அதற்குள் விசாரணையை முடிக்கவில்லை என்றால் சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் என்றும் முதலமைச்சர் மம்தா தெரிவித்துள்ளார்.
கொல்லப்பட்ட பயிற்சி பெண் மருத்துவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, "இதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வேறு யாரேனும் இருந்தால், அனைவரையும் ஞாயிற்றுக்கிழமைக்குள் கைது செய்ய வேண்டும். இல்லை என்றால், வழக்கை சிபிஐயிடம் ஒப்படைப்போம்" என்றார்.