Vistara Airline : கடைசியாய் ஒருமுறை..விண்ணில் பறக்கும் விஸ்தாரா!பிரியா விடை கொடுத்த பயணிகள்!
’Sky Is Just The Beginning’கடைசியாய் ஒருமுறை..விண்ணில் பறக்கம் விஸ்தாரா! பிரியா விடை கொடுத்த பயணிகள்!
இந்திய விமான சேவைகளில் மிக முக்கியமானது விஸ்தாரா. இப்படிப்பட்ட நிறுவனம் தான் இன்றுடன் தன்னுடைய இறக்கைகளை விரிப்பதை நிறுத்திக்கொள்ள இருக்கிறது. சாலைகளில் பயணித்த இந்தியர்களை வானத்தில் பறக்க வைக்க வேண்டும் என்ற பெரும் கனவுடன் ஒரு இந்தியர் இருந்தார். அவர் வேறு யாரும் இல்லை இந்தியாவின் உட்கட்டமைப்புகள் அனைத்திற்கும் தந்தையான ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபோய் டாடாதான். இவர் தான் முதல் முதலில் விமான சேவையை அறிமுகபடுத்தினார். விமானப் பயணம் என்றால் என்னவென்ற தெரியாமல் இருந்த இந்திய மக்களிடம் குறிப்பாக பணக்காரர்களிடம் இந்த சேவை மிக விரைவில் சென்றடைந்தது. தனி நபரின் முயற்சியால் உருவாக்கப்பட்ட விமான சேவையை அப்போது நடந்த இரண்டாம் உலகப் போரால், இந்திய அரசு தேசிய மயமாக்கியது. அதாவது 1953 ஆம் ஆண்டு விமான சேவையை தேசிய மயமாக்கிய இந்திய அரசு 1960 ஆம் ஆண்டு “ஏர் இந்தியா”என்ற பெயரையும் வைத்தது. தான் ஆசை ஆசையாய் உருவாக்கிய விமான சேவை நிறுவனம் தேசிய மயமாக்கப்பட்டதால் டாடா குழுமம் புதிய விமான சேவையை செய்வதற்கு முடிவு எடுத்தது. இப்படி உருவானதுதான் விஸ்தாரா ஏர்லைன்ஸ். சிங்கப்பூர் ஏர்லைன்ஸுடன் டாடா சன்ஸ் கைகோர்த்து இந்த விமான சேவை தொடங்கப்பட்டது. ஏர் இந்தியாவை விட விஸ்தாரா தரமான சேவையை வழங்கியதால், ரொம்ப சீக்கிரமாகவே மக்கள் மத்தியில் இந்த ஏர்லைன்ஸ் பெயர் பெற்றுவிட்டது. சாமானிய மக்களுக்கு ஏற்றார் போல ஓரளவுக்கு நியாயமான விலையில் சேவை வழங்கியதாலும், மக்கள் விஸ்தாராவை விரும்பினர்.எனவே, டிக்கெட் முன்பதிவு அதிகரிக்க தொடங்கியது. மற்ற ஏர்லைன்கள் போயிங் ரக விமானங்களை பயன்படுத்தியபோது, விஸ்தாரா தனது சேவைக்கு 'ஏர் பஸ்' ரக விமானத்தையே அதிக அளவு பயன்படுத்தியது. எனவே, மற்ற விமானங்களை விட விஸ்தாரா விமானங்கள் மிகவும் சவுகரியமாக இருந்தது. இருக்கைகள் போதுமான இட வசதியுடன் இருந்தன. தொடக்கத்தில் டெல்லி-மும்பை என்று மட்டும் இருந்த சேவை பின் நாட்களில் இந்தியாவின் அனைத்து நகரங்களுக்கும் விரிவாக்கப்பட்டது. இதனிடையே தான் ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விமான சேவையை மேலும் விரிவாக்க விரும்பிய டாடா குழுமம் இத்துடன் விஸ்தாராவையும் இணைக்க விரும்பியது. இதற்கான நடவடிக்கைகளை தீவிர மாக்கிய டாடா குழுமம் கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி விஸ்தார டிக்கெட் புக்கிங்கை நிறுத்தியது. இச்சூழல் தான் விஸ்தாரா நிறுவனம் தங்களது சேவையை இன்றுடன் நிறுத்துவதாக அறிவித்திருக்கிறது.