Pongal Special Train : சென்னை, நெல்லை செல்லும் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! முன்பதிவு இன்று தொடக்கம்!
தென் மாவட்டங்கள் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அம்மாவட்டங்களுக்கு பல்வேறு சிறிப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் ரயில் போக்குவரத்து என்பது மிக முக்கிய போக்குவரத்து சேவையாக இருந்து வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 13,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம். குறிப்பாக, தென் மாவட்டங்கள் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அம்மாவட்டங்களுக்கு பல்வேறு சிறிப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வரும் 15ஆம் தேதி வியாழக்கிழமை தைப் பொங்கல் திருநாள், 16ஆம் தேதி வெள்ளி மாட்டுப் பொங்கல், 17ஆம் தேதி உழவர் திருநாள் எனக் திருவிழாக்களை தொடர்ந்து இதையொட்டி பலரும் வெளியூர் பயணங்களை மேற்கொள்வர். எனவே பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்பு ரயில்கள் தொடர்பான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டு வருகிறது.
சென்னை - தூத்துக்குடி
06151 எண் கொண்ட சென்னை சென்ட்ரல் – தூத்துக்குடி சிறப்பு ரயில் வரும் 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகின்றன. சென்னையில் இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடியில் மறுநாள் நண்பகல் 12.15 மணிக்கு சென்றடைகிறது.
06152 எண் கொண்ட தூத்துக்குடி – சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகின்றன. இந்த ரயில் தூத்துக்குடியில் மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு சென்னையில் மறுநாள் காலை 9.45 மணிக்கு வந்தடைகிறது. இந்த இரண்டு ரயில்களிலும் 2 ஏசி டூ டயர் பெட்டிகள், 5 ஏசி திரீ டயர் பெட்டிகள், 11 ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டிகள், 4 பொது செகண்ட் கிளாஸ் பெட்டிகள், 2 செகண்ட் கிளாஸ் பெட்டிகள் இடம்பெற்றிருக்கும்.
நெல்லை - தாம்பரம்
06166 எண் கொண்ட திருநெல்வேலி – தாம்பரம் சிறப்பு ரயில் வரும் 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகின்றன. இது திருநெல்வேலியில் நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்பட்டு அதேநாள் பிற்பகல் 1.30 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது.
06165 எண் கொண்ட தாம்பரம் – திருநெல்வேலி சிறப்பு ரயில் வரும் 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகின்றன. இது தாம்பரத்தில் மாலை 4.40 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 8 மணிக்கு திருநெல்வேலி வந்தடைகிறது.
நெல்லை - செங்கல்பட்டு
06154 எண் கொண்ட திருநெல்வேலி – செங்கல்பட்டு சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் வரும் 14ஆம் தேதி இயக்கப்படுகிறது. இது திருநெல்வேலியில் அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு அதேநாள் பிற்பகல் 1.15 மணிக்கு சென்றடைகிறது.06153 எண் கொண்ட செங்கல்பட்டு – திருநெல்வேலி சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் வரும் 14ஆம் தேதி இயக்கப்படுகிறது. இது செங்கல்பட்டில் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்தநாள் அதிகாலை 2 மணிக்கு திருநெல்வேலி வந்தடைகிறது.
நெல்லை - தாம்பரம்
06058 எண் கொண்ட திருநெல்வேலி – தாம்பரம் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் வரும் 13, 20 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகின்றன. இது திருநெல்வேலியில் நள்ளிரவு 3.45 மணிக்கு புறப்பட்டு அதேநாள் பிற்பகல் 2 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது.
06057 எண் கொண்ட தாம்பரம் – திருநெல்வேலி சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் வரும் 13, 20 தேதிகளில் இயக்கப்படுகின்றன. இது பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 2 மணிக்கு திருநெல்வேலி வந்தடைகிறது.
மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து ரயில்களுக்கான முன்பதிவு இன்று (ஜனவரி 8, 2026) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. IRCTC இணையதளத்திலும், ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்களிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம்,





















