ஒகேனக்கல்லில் பயணிகளை கவர பறவைகள் பூங்கா, 7D திரையரங்கு - இன்னும் ஓரிரு நாட்களே
ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் சுற்றுலாத் துறை சார்பில் 18 கோடி மதிப்பில் பல்வேறு கட்டுமான பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் பயணிகளை கவரும் வகையில் பறவைகள் பூங்கா, 7D திரையரங்கு என சுற்றுலா பயணிகள் பொழுது கழிக்க பல்வேறு வசதிகள் ஓரிரு நாட்களில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தலம் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சுற்றுலா தலத்திற்கு வருபவர்கள் காவிரி ஆற்றில் தண்ணீர் அருவிகளாக கொட்டுவதை கண்டு ரசித்தும், ஆயில் மசாஜ் செய்து, மெயினருவி, சினி அருவிகளில் குளித்துவிட்டு செல்கின்றனர். மேலும் பரிசல்களில் சென்று ஐந்தறிவின் அழகை கண்டு ரசித்து வருகின்றனர். மேலும் மீன் உணவு சமைத்து உண்டு, இந்த பகுதியில் பொழுதைக் கழிக்கின்றனர். ஆனால் போதிய வசதிகள் இல்லாமல் இருந்தது. அதன் பிறகு வண்ண மீன் அருங்காட்சியகம், முதலைகள் மறுவாழ்வு மையம் உருவாக்கப்பட்டது. ஆனாலும் இது குழந்தைகளையும், பெரியவர்களையும் கவரும் வகையில் இல்லை. இதனால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் சுற்றுலாப் பயணிகளின் கண் கவரும் வகையிலும், கூடுதலாக நேரங்களை செலவழிக்கு வகையில் பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்த வேண்டும் என நீண்ட நாட்களாக சுற்றுலா பயணிகள் பொதுமக்களும், கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் தருமபுரி மாவட்ட நிர்வாகம் சுற்றுலா துறையின் இணைந்து பல்வேறு வசதிகளை மேம்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தஞ்சாவூர், ஏலகிரி மலையில் உள்ள ரெயின்போ நிறுவனம் மூலம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் பறவைகள் பூங்கா, 7D திரையரங்கு உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தும் பணிகள் கடந்த ஆறு மாதத்தில் முன்பு தொடங்கியது. தற்பொழுது பணிகள் முடிவு வரும் தருவாய் உள்ளது. அதில் 40 வகையான 600க்கும் மேற்பட்ட பறவைகள், ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இணையாக 7D திரையரங்கு, மீன்கள், பெரிய வெள்ளை எலி, ஆசியாவின் மிகப்பெரிய கோழி என குழந்தைகள் மற்றும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் சுற்றுலா பயணிகள் பறவைகள் பூங்காவிற்குள் நுழைந்தவுடன் அனைத்து பறவைகளும் அவர்கள் மீது வந்து அமர்ந்த சூழல் இருந்து வருகிறது.
இதனால் பறவைகள் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூடுதலாக நேரம் செலவழிக்க வாய்ப்புகள் உள்ளது. இந்த பணிகள் முழுவதுமாக முடிவுபெறும் நிலையில் இருந்து வருகிறது. இது ஓரிரு நாட்களில் செயல்பாட்டிற்கு வரவுள்ளது. இந்த பறவைகள் பூங்கா பயன்பாட்டுக்கு வந்தால், ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் ஒரு நாள் முழுக்க பொழுதை கழிக்கும் வசதிகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் சுற்றுலாத் துறை சார்பில் 18 கோடி மதிப்பில் பல்வேறு கட்டுமான பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.