ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி; மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
3 மாதத்திற்கு பிறகு இன்று ஒகேனக்கலில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்ததால், சுற்றுலா பகுதிகளும், பரிசல் ஓட்டிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகளின் நலன் கருதி ஒகேனக்கல்லில் மூன்று மாதங்களுக்கு பிறகு பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்ததால் சுற்றுலா பயணிகள் மற்றும் பரிசல் ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தலம் தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்றவை. இங்கு வருகின்ற சுற்றுலா பயணிகள் ஆயில் மசாஜ் செய்து, அருவிகளில் குளித்தும், பரிசலில் பயணம் செய்து, காவிரி ஆற்றில் ஐந்து அருவிகளின் அழகை கண்டு ரசித்தும், மீன் உணவு உண்டு பொழுதை கழித்து விட்டு செல்கின்றனர். இங்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கோடை காலம் தொடங்கி மார்ச், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய நான்கு மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும். இதனால் சுற்றுலாவை நம்பியுள்ள மசாஜ் தொழிலாளர்கள், பரிசல் ஓட்டிகள், சமையல் கலைஞர்கள், சிறு வியாபாரிகள் என 2000 குடும்பத்தினர் வருவாய் ஈட்டி வருகின்றனர்.
இந்நிலையில் ஒகேனக்கல் சுற்றுலா தலத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, கடந்த சில மாதங்களுக்கு முன்பு 18 கோடி ரூபாய் மதிப்பில் சுற்றுலா துறை சார்பில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் நுழைவாயில், பரிசல் துறை, ஆயில் மசாஜ் செய்யும் இடம், மீன் உணவு சமைக்கும் இடம் என தனித்தனியாக நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. இதனால் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக தடை விதித்திருந்தது. இந்நிலையில் தற்பொழுது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் முழுமையாக அருவியை கண்டு ரசிப்பது, குளிப்பது போன்ற அனுபவிக்க முடியாமல், மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் கடுமையான வறட்சி, பருவமழை இல்லாததால், காவிரி ஆற்றில் தண்ணீர் குறைவாக வருகிறது. அதே போல் பரிசல் இயக்க அனுமதி இல்லாததால், சுற்றுலா பயணிகளின் வருகை குறைய தொடங்கியது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பரிசல் ஓட்டிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம், கோடை காலம் மட்டும் பரிசல் இயக்க தற்காலிகமாக அனுமதி வழங்கி உள்ளது. இதனால் கடந்த 3 மாதத்திற்கு பிறகு இன்று ஒகேனக்கலில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்ததால், சுற்றுலா பகுதிகளும், பரிசல் ஓட்டிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இன்று ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் சென்று அருவிகளின் அழகை கண்டு ரசித்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.