Whatsapp at Delhi HC: ’அப்டேட் செய்யச்சொல்லி கட்டாயப்படுத்த மாட்டோம்!’ - வாட்சப் நிறுவனம் அறிவிப்பு
’நாங்களே முன்வந்துதான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம். அதுவரை பயனாளர்களை அப்டேட் செய்யச்சொல்லிக் கட்டாயப்படுத்தமாட்டோம்’
வாட்சப்பின் புதிய தனிப்பயனர் பாலிசியை (New Privacy policy) பயனாளிகளை அப்டேட் செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்த மாட்டோம் அப்படி அப்டேட் செய்யாத பயனாளர்களின் வாட்சப் பயன்பாடு முடக்கப்படாது எனவும் அந்த நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தரவுகள் பாதுகாப்பு மசோதாவை அரசு நிறைவேற்றும் வரை இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என வாட்சப் வாக்குறுதி அளித்துள்ளது. ’நாங்களே முன்வந்துதான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம். அதுவரை பயனாளர்களை அப்டேட் செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்தமாட்டோம்’ என வாட்சப்புக்காக ஆஜரான வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே தெரிவித்தார்.
’நாங்கள் பயனாளர்களின் வாட்சப் செயல்பாடுகளை நிறுத்தமாட்டோம். அதே சமயம் அவர்களுக்கு அவ்வப்போது அதுகுறித்த நினைவூட்டலை அனுப்பிக்கொண்டே இருப்போம்’ என வழக்கு தொடர்பான அறிக்கையில் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
Salve: We replied to Ministry of IT's reply saying that we will continue to display the update from time to time. The update which triggered the inquiry of CCI is for the present, we have voluntarily agreed to put on hold.
— Live Law (@LiveLawIndia) July 9, 2021
வாட்சப் அப்ளிகேஷனின் புதிய அப்டேட் குறித்து விளக்கம் கேட்டு கடந்த மாதம் மத்திய அரசு நிறுவனமான இந்திய வர்த்தகப் போட்டி ஆணையம்(CCI or Competition commission of India) நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதனை சேலஞ்ஜ் செய்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது வாட்சப் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஃபேஸ்புக். நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளது வாட்சப்.
வாட்சப்பின் இந்தப் புதிய பாலிசி கடந்த பிப்ரவரி மாதத்திலேயே நடைமுறைக்கு வருவதாக இருந்தது. பெரும்பாலான பயனாளர்கள் பலர் இந்தப் புதிய பாலிசியைக் கட்டாயத்தின் பேரில் அப்டேட் செய்திருந்தார்கள். வாட்சப் நிறுவனமும் பெரும்பாலானவர்கள் அப்டேட் செய்துவிட்டதாக அறிவித்திருந்தது. ஆனால் தங்களுடைய பிரைவசி இதனால் பாதிக்கப்படுவதாக பல பயனாளர்களிடமிருந்து தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதனால் அப்டேட் செய்வது 15 மே வரை தாமதப்படுத்தப்பட்டது பிறகு அந்த காலக்கெடுவும் மேலும் ஒருவாரம் நீட்டிக்கப்பட்டது. அப்டேட் செய்யாதவர்களின் கணக்குகள் டெலீட் செய்யப்படாது எனவும் அந்த நிறுவனம் அறிவித்திருந்தது.
மேலும் பயனாளர்களின் பிரைவசிதான் தங்களது முதன்மைக் குறிக்கோள் எனவும் இந்த அப்டேட் செய்வதால் பயனாளர்கள் தகவல்கள் அனுப்புவதில் எந்தவித பிரைவசியும் மீறப்படவில்லை எனவும், இந்த அப்டேட் மூலம் பயனாளர்கள் ஏதேனும் வணிகம் தொடங்க விரும்பினால் அதற்கான கூடுதல் தகவல் மட்டும் பெறப்படும் எனவும் வாட்சப் தெரிவித்திருந்தது. இதையடுத்து கடந்த மாதம் மத்திய அரசு வாட்சப் நிறுவனம் அப்டேட்டை மக்களிடம் திணிப்பதாகக் கூறியிருந்தது. ஏனெனில் ஐரோப்பா போன்ற பிற பிரதேசங்களில் இதுபோன்று பயனாளர்களை வாட்சப் கட்டாயப்படுத்துவதில்லை என்றும் இது இந்தியாவிடம் காட்டப்படும் பாரபட்சம் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில்தான் வாட்சப் நிறுவனம் தாமாக முன்வந்து அப்டேட் குறித்த தனது புதிய நிலைப்பாட்டை விலக்கியுள்ளது. மேலும் ஏற்கெனவே அப்டேட் செய்த பெரும்பாலானவர்களின் கணக்குகளின் நிலை என்ன என்பது குறித்து இந்த விளக்கத்தில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: ஜெயலலிதாவுடன் எனது வாழ்க்கை : வி.கே சசிகலாவின் நேர்காணல்.