(Source: ECI/ABP News/ABP Majha)
PSLV C58: பெண்கள் மேற்பார்வையில் உருவான முதல் செயற்கைகோள்! ஜன.1ல் விண்ணில் பாயப்போகும் பி.எஸ்.எல்.வி. சி58!
புத்தாண்டின் முதல் நாளான இன்று ஜனவரி 1ம் தேதி இஸ்ரோ பி.எஸ்.எல்.வி சி 58 ராக்கெட்டை விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
பி.எஸ்.எல்.வி. சி. 58:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பி.எஸ்.எல்.வி சி 58 என்ற ராக்கெட்டை புத்தாண்டு அன்று அதாவது ஜனவரி 1 ஆம் தேதி விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டில் எக்ஸ்போசாட் என்ற செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இது வரும் 1 ஆம் தேதி காலை 9.10 மணிக்கு ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பூமியில் இருந்து சுமார் 500 முதல் 700 கிலோமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட உள்ளது.
T-3️⃣ days: The Mobile Service Tower has been retracted! PSLV-C58 is now standing tall on the First Launch Pad!! 🚀 #ISRO pic.twitter.com/ZJBTcVRaqM
— ISRO Spaceflight (@ISROSpaceflight) December 29, 2023
எதை ஆய்வு செய்யும்?
இந்த செயற்கைகோள், எக்ஸ்ரே மூலங்களின் தற்காலிக நிலை, நிறமாலை போன்ற அறிவியல் ஆய்வுகளையும், விண்வெளியில் உள்ள தூசு, கருந்துளை வாயுக்களின் மேகக்கூட்டமான ' நெபுலா’ ஆகியவற்றை பற்றி விரிவாக ஆராய ஏதுவாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த லால்பகதூர் சாஸ்திரி இன்ஸ்டிட்டுயூட் ஆப் டெக்னாலஜி மாணவிகள் ‘வேசாட்’ என்ற செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளனர். இது, விண்வெளி மற்றும் பூமியின் மேற்பரப்பில் உள்ள புறஊதா கதிர்கள் மற்றும் கேரளாவில் வெப்பநிலை மற்றும் காலநிலை மாற்ற நிகழ்வுகளில் அவற்றின் தாக்கத்தை ஆராயும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மேற்பார்வையில் வடிவமைக்கப்பட்ட செயற்கைகோள்:
நாட்டில் பெண்கள் மேற்பார்வையில் முழுமையாக வடிவமைக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள் என்ற பெருமை இந்த வெசாட் செயற்கைக்கோளுக்கே சேரும். இத்துடன் 10 வெளிநாட்டுச் செயற்கைக்கோள்களும் இந்த பி.எஸ்.எல்.வி சி 58 ராக்கெட் சுமந்து செல்கிறது. மொத்தம் 12 செயற்கைக்கோள்களை சுமந்து வரும் 1 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான கவுண்டவுன் நாளை அதாவது டிசம்பர் 31 ஆம் தேதி தொடங்கும்.
ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என 10,000 பேர் அமர்ந்து பார்வையிடும் வகையில் பார்வையாளர்கள் மாடம் அமைக்கப்பட்டு உள்ளது. நேரில் செல்ல விரும்பும் பார்வையாளர்கள் https://lvg.shar.gov.in என்ற இணையதள முகவரியில் பெயர்களை முன்பதிவு செய்து, அதற்கான அனுமதி சீட்டை பெற்றுக் கொள்ள வேண்டும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர் முன்னேற்றம்:
இஸ்ரோ தொடர்ச்சியாக பல சாதனைகளை செய்து வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் நிலவின் தென் துருவத்தை ஆராயும் வகையில் சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்தி உலக நாடுகளை உற்று நோக்கச் செய்தது. அதற்கு அடுத்தப்படியாக சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 விண்கலம் இஸ்ரோ தரப்பில் ஏவப்பட்டது.
மேலும் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் நோக்கில் ககன்யான் திட்டத்திற்கான சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது. இப்படி அடுத்தடுத்து இஸ்ரோ தொட்டதெல்லாம் சாதனையாகி வருகிறது. அதன் வரிசையில், வரும் 1 ஆம் தேதி இஸ்ரோ பி.எஸ்.எ.வி சி 58 ராக்கெட்டை விண்ணில் செலுத்த உள்ளது. அடுத்த ஆண்டும் இதேபோல் மனித இனத்திற்கு உதவிடும் வகையில் பல்வேறு செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.