தூத்துக்குடி: பசுமை ஹைட்ரஜன் நிரப்பும் மையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி
காலை 8.40 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் புறப்படுகிறார்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பல்லடம், மதுரை ஆகிய இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர், மதுரையில் ஓய்வெடுக்கிறார். காலை 8.40 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் புறப்படுகிறார். அவர் 9.30 மணிக்கு தூத்துக்குடி வ.உ.சி துறைமுக வளாகத்தில் வந்து இறங்குகிறார். தொடர்ந்து அங்கு நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு பல்வேறு பணிகள் முடிக்கப்பட்ட திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் பேசுகிறார்.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.7 ஆயிரத்து 55 கோடியே 95 லட்சம் மதிப்பிலான வெளித்துறைமுகம், ரூ.265.15 கோடி மதிப்பில் வடக்கு சரக்கு தளம்-3 எந்திரமயமாக்கல், ரூ.124.32 கோடி மதிப்பில் 5 எம்.எல்.டி. கடல்நீர் குடிநீராக்கும் திட்டம், பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் மையம் உள்ளிட்டவற்றுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதே போன்று குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கும் அடிக்கல் நாட்டுகிறார். மேலும் 10 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைக்கப்பட்டு உள்ள 75 கலங்கரை விளக்கம், ரூ.1477 கோடி செலவில் முடிக்கப்பட்டு உள்ள வாஞ்சி மணியாச்சி-நாகர்கோவில் இரட்டை ரெயில் பாதை, நாடு முழுவதும் ரூ.4 ஆயிரத்து 586 கோடி செலவில் முடிக்கப்பட்டு உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இதனை முன்னிட்டு பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடியில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதில் 3 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். விழா நடைபெற உள்ள துறைமுக சுற்று வட்டார பகுதிகளில் லாரிகள் நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆங்காங்கே போலீசார் சோதனைச்சாவடிகள் அமைத்து வாகன தணிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. அனைத்து கடற்கரை கிராமங்களிலும், வெளியாட்கள் நடமாட்டம் உள்ளதா என்று காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு காவல்துறை தூத்துக்குடி கடல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். தீவுகளில் போலீசார் நிறுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு இருக்கின்றனர்.விழா நடைபெறும் இடம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு உள்ளன. மேலும் மாற்று ஏற்பாடாக விழா நடைபெறும் இடத்தில் இருந்து விமான நிலையத்துக்கு செல்வது போன்று போலீசார் ஒத்திகையும் பார்த்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் இந்திய விண்வெளி ஆய்வு மையம்(இஸ்ரோ) ஏவுதள வளாகத்தில் இருந்து அட்ச தீர்க்க ரேகைகளில் இருந்து ஒரு ரோகினி ராக்கெட் ஏவுவதற்கு திட்டமிடப்பட்டு இருப்பதாக இஸ்ரோ மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆகையால் மணப்பாடு கலங்கரை விளக்கத்துக்கும், பெரியதாழை தூண்டில் பாலத்துக்கும் இடையிலான கடற்கரையில் இருந்து 10 கடல் மைல் வரை உள்ள கடல் பகுதி ஆபத்தான பகுதியாக இஸ்ரோ அறிவித்து உள்ளது. எனவே இன்றும், நாளையும் காலை 9.30 மணி முதல் மதியம் 2 மணி வரை மீனவர்கள், பொதுமக்கள், சிறிய கப்பல்கள், மீன்பிடி படகுகள், கட்டுமரம் மூலம் மேற்படி குறிப்பிட்ட பகுதிக்குள் நுழைய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.