''ஹலோ.. யாராவது இருக்கீங்களா?'' - செவ்வாய் கிரகத்தில் ஆய்வைத் தொடரும் பெர்சவரன்ஸ் ரோவர்
செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜெசீரோ கிரேட்டர் என்ற மிகப்பெரிய பள்ளத்தாக்கை முதலில் ஆய்வு செய்யும் வகையில் ரோவர் திட்டமிடப்பட்டது.
அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் கடந்த ஆண்டு அனுப்பிய பெர்சவரன்ஸ் ரோவர் வெற்றிகரமாக தரை இறங்கியது.கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, பெர்சவரன்ஸ் என்ற ரோவர் ரோபோவை விண்ணில் ஃபுளோரிடாவின் கேப் கெனவரல் விமானப்படைத் தளத்திலிருந்து ஏவுகணை மூலம் விண்ணில் செலுத்தியது. ஒரு டன் எடை மற்றும் ஆறு சக்கரங்களுடன் வடிவமைக்கப்பட்ட இந்த ரோவரானது செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் உள்ளதா? அல்லது அங்கு உயிரினங்கள் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் இருக்கின்றதா என்ற அடிப்படையில் சோதனை மேற்கொள்ள உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி வியாழக்கிழமை இரவு செவ்வாயில் தரையிறங்கியது.இறங்கியவுடன் அங்கிருந்து இரண்டு புகைப்படங்களையும் அனுப்பியது.
இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜெசீரோ கிரேட்டர் என்ற மிகப்பெரிய பள்ளத்தாக்கை முதலில் ஆய்வு செய்யும் வகையில் ரோவர் திட்டமிடப்பட்டது. இந்த பள்ளத்தாக்கு கிட்டத்தட்ட 40 கிலோ மீட்டர் அகலமும், 500 மீட்டர் ஆழமும் இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.மேலும் இந்த பள்ளத்தாக்கில் நீரோட்டம் இருந்திருக்கலாம் அல்லது மிகப்பெரிய ஏரியாக கூட இருந்திருக்கலாம் என நாசா கருதுவதால், பள்ளத்தாக்கை ஆய்விற்கு உட்படுத்தும் முடிவில் இறங்கியுள்ளது. இதற்காக வடிவமைக்கப்பட்ட ரோவர் தற்போது தனது முதற்கட்ட ஆரய்ச்சியை தொடங்கியுள்ளது. இந்த ஆராய்ச்சி முடிவில் பழங்கால செவ்வாயில் உயிரினங்கள் இருந்தனவா என்ற பல நாள் கேள்விக்கு விடை கிடைத்துவிடும்.
பெர்சவரன்ஸ் ரோவர் தானாகவே சிந்தித்து தன்னை சரியான முறையில் வழி நடத்திசெல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ரோவர் ஆட்டோ நேவிகேஷன் மூலம் தன்னை செயல்படுத்திக்கொண்டாலும், அதற்கான கட்டளைகளை பூமியில் இருந்து முறையாக வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பள்ளத்தாக்கு மட்டுமல்லாது அங்கிருக்கும் பாறைகள், மணல் உள்ளிட்டவற்றின் மாதிரிகளை சேகரித்து ரோவர் நாசாவிற்கு அனுப்பும். 23 கேமராக்கள் இருப்பதால் , துல்லியமான கண்காணித்து புகைப்படங்களை எடுத்து அனுப்பும். ரோவர் கடினமான பாதைகளிலும் நிதானமாக பயணிக்கு வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க வல்லது. கடினமான பாதைகளால் சேதம் அடைந்து விடாத வகையில் பெர்சவரன்ஸ் ரோவர் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் தன்னுடன் கொண்டு சென்றுள்ள சிறிய வகை குட்டி ஹெலிக்காப்டரை பறக்க விட்டும் சோதனையை மேற்க்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தற்போது தனது ஆய்வை தொடங்கியுள்ள பெர்சவரன்ஸ் ரோவர் விரைவில் கூடுதல் புகைப்படங்களை எடுத்து நாசாவிற்கு அனுப்ப உள்ளது. மேலும் இதன் வடிவமைப்பு உபகரணங்கள் மிகவும் உதவியாக இருக்கும் என்பதால் இது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது .செவ்வாய் கிரகத்தில் மனித உயிர்கள் வாழ்வதற்கான சாத்திய கூறுகள் உள்ளதா என்பதை கண்டறிய பல நாடுகள் போட்டா போட்டியில் உள்ளன. கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சீனா ஆகிய நாடுகள் செவ்வாயை நோக்கி விண்கலங்களை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.