பெயரை மாற்றியவுடன் புதிய நிறுவனங்களை வாங்கும் `பேஸ்புக்’.. Meta வாங்கிய App எது தெரியுமா?
தங்கள் நிறுவனத்தின் பெயரை `மெட்டா’ என மாற்றி அறிவித்துள்ள பேஸ்புக் நிறூவனம், தற்போது Within நிறுவனத்தை வாங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
தங்கள் நிறுவனத்தின் பெயரை `மெட்டா’ என மாற்றி அறிவித்துள்ள பேஸ்புக் நிறூவனம், தற்போது Within நிறுவனத்தை வாங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியைச் சேர்ந்த Within நிறுவனம், உடற்பயிற்சிக்காக Supernatural என்ற செயலியை உருவாக்கியுள்ளது. விர்ச்சுவல் ரியாலிட்டியைப் பயன்படுத்தி, அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் கார்டியோ உடற்பயிற்சிகளை Supernatural செயலியின் மூலம் செய்யலாம்.
விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தின் பயன்பாட்டைப் பெருக்குவதற்காக பேஸ்புக் நிறுவனம் கடுமையாக முயற்சித்து வருவதோடு மெட்டாவெர்ஸ் என்றழைக்கப்படும் மெய்நிகர் உலகை உருவாக்க வேண்டும் என்ற திட்டத்தோடு உழைத்து வருகிறது பேஸ்புக் நிறுவனம். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வீட்டில் இருந்தபடியே உடற்பயிற்சி மேற்கொள்வதற்காக மக்கள் பலரும் Supernatural செயலியைப் பயன்படுத்துவதால் இதனை வாங்வது பேஸ்புக் நிறுவனத்திற்குப் பெரும் லாபத்தைத் தரும் எனக் கூறப்படுகிறது.
`மெட்டா நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இதன்மூலம் எங்கள் செயலியை விரிவடையச் செய்வதுடன் பயனாளர்களுக்கு மேலும் இசையைத் தர முடியும்; உடற்பயிற்சி செய்வதற்காக இன்னும் புதிய வழிமுறைகள், மேலும் சிறப்பம்சங்கள், மேலும் புதிய சமூக அனுபவங்கள் என விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் புதுமையாகப் பல்வேறு சிறப்பம்சங்களைத் தர முடியும். ஒவ்வொரு நாளும் புதிய உடற்பயிற்சிகளையும் நாங்கள் வெளியிட முடியும்’ என Within நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி க்றிஸ் மிலிக், உடல் ஆரோக்கியத்துறைக்கான தலைவர் லியென் பெடாண்ட் ஆகியோர் தங்கள் சமூக வலைத்தளக் கணக்குகளில் தெரிவித்துள்ளனர்.
மேலும், Within நிறுவனம் மெட்டா நிறுவனத்தோடு இணைந்தாலும், அதில் பணியாற்றும் பயிற்சியாளர்கள், நடன அமைப்பாளர்கள், மேலாளர்கள் ஆகியோர் தொடர்ந்து பணியாற்றுவர் எனக் கூறப்பட்டுள்ளது. Supernatural செயலி மெட்டா நிறுவனத்தின் ரியாலிட்டி பரிசோதனைப் பிரிவில் இருந்து செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
`விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தின் மூலம் செயல்படும் ஃபிட்னெஸ் தொடர்பான செயலிகளுக்காக பிரத்யேகமாக ஹார்ட்வேர் உபகரணங்களை எதிர்காலத்தில் தயாரிப்பதற்கான வழிகளை நாம் அனைவரும் இணைந்து உருவாக்க முயற்சி செய்வோம். மேலும் விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் புதிய ஃபிட்னெஸ் அனுபவங்களை அறிமுகப்படுத்த விரும்பும் தொழில்நுட்ப நிபுணர்களை ஊக்குவிக்கவும் உள்ளோம்’ என்று `மெட்டா’ நிறுவனத்தின் துணைத் தலைவர்களுள் ஒருவரான ஜேசன் ரூபின் எழுதியுள்ளார். மேலும் அவர் `விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் பிட்னெஸ் செயலிகளுக்கு எதிர்காலம் இருக்கிறது’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட Within நிறுவனம் சுமார் 50 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டியுள்ளது. டெமாசெக் அண்ட் எமர்சன் கலெக்டிவ், அண்ட்ரெஸ்ஸன் ஹாரோவிட்ஸ், 21ஸ்ட் சென்சுரி ஃபாக்ஸ், ரெய்ன் வெஞ்சர்ஸ், WPP, மேக்ரோ வெஞ்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் Within நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளன. `மெட்டா’ நிறுவனம் Within நிறுவனத்தை வாங்கியதற்காகக் கொடுத்துள்ள நிதி குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.