(Source: ECI/ABP News/ABP Majha)
Cancer Dostarlimab : புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்தும் புதிய மருந்து.. அறிவியலின் திருப்புமுனை கண்டுபிடிப்பு!
Dostarlimab : புற்றுநோய் காரணமாக உலகில் அதிகப்படியான உயிரிழப்புகள் நிகழ்கின்றன. குறிப்பாக, 2020ஆம் ஆண்டு, 1 கோடி பேர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
உலகில் பல உயிர்கொல்லி நோய்கள் இருந்தாலும், புற்றுநோய் அனைவரையும் அச்சம் கொள்ள வைக்கும் அபாயகரமான நோயாக கருதப்படுகிறது. அறிவியல் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து என்பது எட்டாகனியாகவே இருந்துள்ளது. இந்நிலையில், அறிவியலின் திருப்புமுனை கண்டுபிடிப்பாக புற்று நோயை குணப்படுத்தும் புதிய மருந்து அமையவுள்ளது.
வரலாற்றில் முதல்முறையாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட சிறிய ஆய்வில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அந்நோயிலிருந்து முற்றிலுமாக குணமாகியிருப்பது தெரியவந்துள்ளது. அமெரிக்க மன்ஹாட்டன் நகரில் அமைந்துள்ள மேமோரியல் ஸ்லோன் கெட்டரிங் புற்றுநோய் மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் புற்றுநோய் நோயாளிகள் குணமாகியிருப்பது உலகம் முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது.
சிறிய அளவில் நடத்தப்பட்ட சோதனை என்றாலும் புற்றுநோயாலிருந்து மக்கள் குணமடைய முடியும் என்ற நம்பிக்கை அலையை உலகம் முழுவதும் இது ஏற்படுத்தியுள்ளது.
புற்றுநோய் காரணமாக உலகில் அதிகப்படியான உயிரிழப்புகள் நிகழ்கின்றன. குறிப்பாக, 2020ஆம் ஆண்டு, 1 கோடி பேர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளனர். அதாவது, ஆறில் ஒரு உயிரிழப்பு புற்றுநோயால் ஏற்படுகிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 2020ஆம் ஆண்டு, மார்பக புற்று நோயால் கிட்டத்தட்ட 23 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். நுரையீரல் புற்றுநோயால் 22 லட்சம் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.
பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோயால் 19 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். புரோஸ்டேட் புற்றுநோயின் காரணமாக 14 லட்சம் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது.
புற்று நோய் மருந்து சோதனை முடிவுகளின் முக்கிய அம்சங்கள்
- கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு, 18 புற்றுநோய் நோயாளிகளுக்கு தோஸ்டார்லிமாப் என்ற மருந்து அளிக்கப்பட்டுள்ளது. இறுதியில், அனைவரும் புற்றுநோயிலிருந்து முற்றிலுமாக குணமாகியுள்ளனர் என தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
- முன்னதாக, 18 நோயாளிகளுக்கும் கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை, அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சை முறைகள் அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க சோதனையில் பங்கேற்ற புற்றுநோய் நோயாளிகள் அடுத்த சிகிச்சை முறைக்கு உள்ளாக வேண்டும் என எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர். ஆனால், அவர்களுக்கு அடுத்தக்கட்ட சிகிச்சை முறை தேவை இல்லை.
- ஆய்வுகூடங்களில் தயாரிக்கப்பட்ட மூலக்கூறுகள் அடங்கிய தோஸ்டார்லிமாப் மருந்து மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களின் உடலில் பரிசோதனை செய்ததில் புற்றுநோயை கண்டுபிடிக்கவில்லை. எனவே, இது புற்று நோயை தீர்க்கும் மருந்தாக மாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இதுகுறித்து மேமோரியல் ஸ்லோன் கெட்டரிங் புற்றுநோய் மையத்தின் மருத்துவர் லூயிஸ் ஏ. டயஸ் கூறுகையில், "புற்றுநோய் வரலாற்றில் இதுமுறையாக நிகழந்துள்ளது" என்றார்.
- ஆறு மாதங்களில் மூன்று வாரங்களுக்கு ஒரு முறை தோஸ்டார்லிமாப் மருந்து அளிக்கப்பட்டுள்ளது. மருந்து கொடுக்கப்பட்ட அனைத்து நோயாளிகளும் ஒரே ஸ்டேஜில்தான் இருந்துள்ளனர். அவர்கள் யாருக்கும் வேறு இடத்தில் புற்றுநோய் பரவவும் இல்லை.