Under 17 World Champion: "ஏறு முன்னேறு இது கரையே இல்லா காட்டாறு" - வினேஷ் போகத் கிராமத்திலிருந்து மற்றொரு சாம்பியன்!
வினேஷ் போகத்தின் சொந்த கிராமாமன பலாலியை சேர்ந்த மல்யுத்த வீராங்கனை சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார்.
கற்றுக்கொடுக்க விரும்புகிறேன்:
கடந்த வாரம் பாரீஸில் இருந்து மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் நாடு திரும்பினார். அதன்படி ஹரியானாவில் உள்ள தனது சொந்த கிராமமான பலாலி சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் போது வினேஷ் போகத் எடை அதிகமாக இருப்பதாக கூறி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது நாடு முழுவதும்அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால், சொந்த ஊர் திரும்பிய போது வினேஷ் போகத்திற்கு வழங்கப்பட்ட வரவேற்பை பார்த்தை மிகவும் நெகிழ்ச்சி அடைந்த வினேஷ் போகத் இவ்வாறு கூறியிருந்தார்,"எனது கிராமத்தைச் சேர்ந்த சகோதரிகளுக்கு மல்யுத்தத்தில் என்ன கொஞ்சம் தெரிந்தாலும் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க விரும்புகிறேன், அதனால் அவர்கள் முன்னேறி என் இடத்தைப் பிடித்து நாட்டிற்கு பெருமை சேர்க்க முடியும்.
நீங்கள் அனைவரும் என் சகோதரிகளை ஆதரித்து அவர்களுக்கு உங்கள் ஆசீர்வாதங்களை வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்,ஒலிம்பிக் பதக்கம் பெறாதது ஒரு ஆழமான காயம், அது குணமடைய நேரம் எடுக்கும். ஆனால் எனது நாட்டினரிடமும், எனது கிராம மக்களிடமும் நான் கண்ட அன்பு, அது எனக்கு பலம் தரும். மக்கள் எனக்குக் கொடுத்த அன்பு 1,000 தங்கப் பதக்கங்களுக்கு மேல்"என்று கூறியிருந்தார்.
சாம்பியன் பட்டம் வென்ற நேஹா சங்வான்:
இந்நிலையில் தான் வினேஷ் போகத்தின் சொந்த கிராமாமன பலாலியை சேர்ந்த மல்யுத்த வீராங்கனை சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார். அதன்படி ஜோர்டனில் நடைபெற்ற 17 வயதிற்குட்பட்டோருக்கான மல்யுத்த போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் 16 வயதான வீராங்கனை நேஹா சங்வான் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தி இருக்கிறார்.
இது தொடர்பாக பேசிய அவர், "என்னைப்பொறுத்தவரை இது மிகப்பெரிய விஷயம். இந்த வெற்றியை நான் வினேஷ் அக்கா மற்றும் அனைத்து மல்யுத்த வீராங்கனைகளுக்கும் சமர்ப்பிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.