ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: வினேஷ்,அன்ஷூ,திவ்யா தங்கப் பதக்கம் வென்று அசத்தல்
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் கஜகிஸ்தான் நாட்டில் நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரில் நேற்று இந்திய வீராங்கனைகள் மூன்று தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் கஜகிஸ்தான் நாட்டில் நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரில் நேற்று இந்திய வீராங்கனைகள் மூன்று தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். மேலும் இந்தத் தொடரில் இந்திய மகளிர் அணி மொத்தமாக 4 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தமாக 7 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.
53 கிலோ எடைப் பிரிவில் பிரபல மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்கப்பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் மங்கோலியா வீராங்கனை கன்பாட்டாரை எளிதில் வீழ்த்தி வினேஷ் அசத்தினார்.
Another gold for India as #TOPSAthlete #Anshu wins the women’s 57 kg event at the Asian Wrestling Championships after beating Baatsetseg Altantsetseg of Mongolia. She had won a #Tokyo2020 quota last week. pic.twitter.com/ojEb9GLcKW
— SAIMedia (@Media_SAI) April 16, 2021
அதேபோல் 57 கிலோ எடைப் பிரிவில் 19 வயதான அன்ஷூ மாலிக் தங்கப்பதக்கம் வென்றார். இந்தத் தொடரில் இறுதிப் போட்டிக்கு நுழைந்ததன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க தகுதிப் பெற்று அசத்தினார். இறுதிப் போட்டியில் இவர் மங்கோலியாவின் அல்டென்செக்கை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார்.
72 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் திவ்யா காக்ரன் தொடரின் தொடக்க முதலே சிறப்பாக விளையாடி வந்தார். லீக் சுற்றில் கஜகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நடப்பு ஆசிய சாம்பியனை வீழ்த்தி அசத்தினார். தொடர்ந்து அதிரடியாக செயற்பட்ட திவ்யா இறுதிப் போட்டியில் கொரியாவை சேர்ந்த சுஜின் பார்க்கை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
இதன்மூலம் சரிதா மோருக்கு பிறகு ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டு முறை பதக்கம் வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். 2020ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் 68 கிலோ எடைப் பிரிவில் திவ்யா தங்கப் பதக்கம் வென்று அசத்தியிருந்தார்.
ஏற்கெனவே 59 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சரிதா மோர் தங்கப் பதக்கம் வென்று இருந்தார். அத்துடன் சீமா பிஸ்லா (50 கிலோ), பூஜா(76 கிலோ) வெண்கல பதக்கம் வென்றனர். மற்றொரு இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் 65 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். மொத்தம் இந்திய அணி மகளிர் பிரிவில் 7 பதக்கங்கள் வென்று அசத்தியது.
இந்தப் போட்டியில் காயம் காரணமாக இந்தியாவின் சோனம் மாலிக் 62 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்கவில்லை. இவர் ஏற்கெனவே நடைபெற்ற ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் இறுதிப் போட்டி வரை முன்னேறி ஒலிம்பிக் தொடருக்கு தகுதிப் பெற்றார். அந்தத் தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக இவர் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கவில்லை.