(Source: ECI/ABP News/ABP Majha)
Tamil Thalaivas vs Haryana Steelers: மீண்டும் வீணான தமிழ் தலைவாஸ் அணியின் முயற்சி; ஹரியானா அணி வெற்றி
Tamil Thalaivas vs Haryana Steelers: தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிராக ஹரியானா அணி 13 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா முழுவதும் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வரும் ப்ரோ கபடி லீக் 10வது சீசனில் இன்று அதாவது டிசம்பர் 25ஆம் தேதி டெல்லி தபாங் அணியும் பெங்கால் வாரியர்ஸ் அணியும் ஒரு போட்டியிலும் தமிழ் தலைவாஸ் அணியும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியும் மற்றொரு போட்டியில் மோதிக்கொண்டது. இதில் முதல் போட்டியில் தபங் டெல்லி அணி 38 புள்ளிகளும் பெங்கால் வாரியஸ் அணி 27 புள்ளிகளும் எடுத்தது. இதனால் டெல்லி தபங் அணி 11 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையடுத்து தமிழ் தலைவாஸ் அணிக்கும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் தொடக்கத்தில் இரு அணிகளும் சரி சமமாக மோதி வந்தது. மைதானத்தில் கூடியிருந்த தமிழ் தலைவாஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் குதித்தனர். முதல் பாதியின் முதல் 10 நிமிடங்கள் முடியும்போது தமிழ் தலைவாஸ் அணி 6 புள்ளிகளும் எடுத்து இருந்தது. முதல் பாதியின் அடுத்த 10 நிமிடங்களில் ஹரியானா அணி தமிழ் தலைவாஸ் அணியை ஆல் - அவுட் செய்தது. இதனால் ஹரியானா அணியின் புள்ளிகள் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
போட்டியின் முதல் பாதி ஆட்டம் முடியும்போது தமிழ் தலைவாஸ் அணி 12 புள்ளிகளும் ஹரியானா அணி 18 புள்ளிகளும் எடுத்தது. அதன் பின்னர் ஹடியானா அணி மளமளவென புள்ளிகள் சேர்த்தது. குறிப்பாக ரெய்டு பாய்ண்டுகள் மற்றும் டிஃபெண்டிங் பாய்ண்ட்டுகள் மட்டும் இல்லாமல் போனஸ் பாய்ண்டுகளையும் அள்ளியது. இது தமிழ் தலைவாஸ் அணிக்கு பாதகமாக அமைந்தது.
குறிப்பாக தமிழ் தலைவாஸ் அணி தரப்பில் ரெய்டர்களின் முயற்சிகள் அனைத்திற்கும் பலன் கிடைக்கவில்லை. ஹரியானா தரப்பில் ரெய்டர்களும் டிஃபெண்டரக்ளும் சிறப்பாக செயல்பட்டனர். ஹரியானாவில் ஓவ்வொரு முறையும் கடைசி மூன்று வீரர்கள் இருக்கும்போது தமிழ் தலைவாஸ் தரப்பில் யார் களமிறங்கினாலும் அவர்களை மடக்கி சூப்பர் டேக்கிளில் புள்ளிகளை அள்ளினர். இது ஹரியானா அணிக்கு சாதகமாக அமைந்தது.
இறுதியில் ஹரியானா அணி 42 புள்ளிகளும் தமிழ் தலைவாஸ் அணி 29 புள்ளிகளும் எடுத்தது. இதனால் ஹரியானா அணி 13 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தமிழ் தலைவாஸ் அணி தொடர்ந்து மூன்று போட்டிகளில் தனது சொந்த மண்ணில் வெற்றி வாய்ப்பினை இழந்துள்ளது அணிக்கு மட்டும் இல்லாமல் தமிழ் தலைவாஸ் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் தலைவாஸ் அணி இந்த போட்டியில் 12 ரெய்டு பாய்ண்டுகளையும் 16 டேக்கிள் பாய்ண்டுகளையும் எடுத்துள்ளது. ஹரியானா அணி 18 ரெய்டு பாய்ண்டுகளையும் 20 டேக்கிள் பாய்ண்டுகளையும் 2 ஆல் அவுட் பாய்ண்டுகளையும், ஒரு சூப்பர் ரெய்டு பாய்ண்டையும் எடுத்தது.