Ganguly on Twitter: ட்விட்டரில் திடீரென வைரலான கங்குலி புகைப்படம் - ஏன் தெரியுமா...?
முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் ஜாம்பவான் ஜெப்ரி பாய்காட்டுன் இணைந்து கிரிக்கெட் போட்டியை பார்த்த சவ்ரவ் கங்குலியின் புகைப்படம் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது. இந்த போட்டியை காண்பதற்காக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும், முன்னாள் இந்திய கேப்டனுமாகி சவ்ரவ் கங்குலி லார்ட்ஸ் சென்றுள்ளார். அவர் மைதானத்தில் உள்ள நிர்வாகிகளின் இருக்கையில் அமர்ந்து போட்டியை கண்டு வருகிறார்.
மைதானத்தில் கங்குலியுடன் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவானும், கங்குலியின் மிகப்பெரிய ரசிகருமான சர் ஜெப்ரி பாய்காட்டும் உடன் உள்ளார். அவரும் கங்குலியுடன் இணைந்து இந்த போட்டியை ரசித்து வருகிறார். சவ்ரவ் கங்குலிக்கு “தாதா” என்றும், “பெங்கால் டைகர்” என்றும் “பிரின்ஸ் ஆப் கல்கத்தா” என்றும் பல செல்லப் பெயர்கள் உண்டு.
இந்த செல்லப் பெயர்களில் கங்குலிக்கு பிரின்ஸ் ஆப் கல்கத்தா என்று கங்குலிக்கு செல்லப் பெயர் சூட்டியவர் சர்ஜெப்ரி பாய்காட். இன்று நடைபெற்று வரும் போட்டியின்போது கங்குலியும், பாய்காட்டும் அருகருகே நின்று பேசிய புகைப்படம் தற்போது டுவிட்டர் பக்கத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பல்வேறு நினைவுகளுடன் இந்த படங்களை பகிர்ந்து வருகின்றனர். 80 வயதான ஜெப்ரி பாய்காட் இங்கிலாந்து அணிக்காக 108 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 8 ஆயிரத்து 114 ரன்களை குவித்துள்ளார். அவற்றில் 22 சதங்களும், ஒரு இரட்டை சதமும், 42 அரைசதமும் அடங்கும். மேலும், 36 ஒருநாள் போட்டிகளில் ஆடி ஒரு சதத்துடன் 1082 ரன்களை குவித்துள்ளார்.
லார்ட்ஸ் மைதானத்திற்கும் சவ்ரவ் கங்குலிக்கும் மிகவும் நெருக்கமான தருணங்கள் ஏராளமான உண்டு. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 1996ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முகமது அசாருதீன் தலைமையிலான இந்திய அணியில் அறிமுக வீரராக சவ்ரவ் கங்குலி களமிறங்கினார்.
அந்த போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 344 ரன்களை குவிக்க அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் விக்ரம் ரத்தோர், நயன்மோங்கியா அடுத்தடுத்து ஆட்டமிழக்க அறிமுக வீரர் கங்குலி தனது முதல் டெஸ்ட் போட்டியிலே 131 ரன்களை குவித்து அசத்தினார். இந்த போட்டியில் கங்குலியின் சதத்தால் இந்திய அணி போட்டியை டிரா செய்தது.
இதுமட்டுமின்றி, இந்தியாவில் டீ சட்டையை கழற்றி சுழட்டிய பிளின்டாபிற்கு பதிலடி தரும் விதமாக நாட்வெஸ்ட் தொடரை வென்ற கங்குலி லார்ட்ஸ் கேலரியில் நின்று இந்திய அணியின் டீ சர்ட்டை கழற்றி சுழற்றியது இந்திய ரசிகர்களுக்கு என்றும் மறக்கமுடியாத நினைவு ஆகும். இதனால், எப்போது லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி ஆடினாலும் கங்குலி என்ற பெயர் தானாகவே இந்திய ரசிகர்களின் நினைவுக்கு வந்து விடும்.