’பெண்ணை தனியாக அனுப்பமுடியாது’ : கைவிட்டதா இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்? ஏன்?
உலக காது கேளாதோர் தடகளப் போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களின் பட்டியலில் இவரது பெயர் இடம்பெறவில்லை
டோக்கியோ 2020 போட்டி நிறைவடைந்துள்ளது. இந்திய விளையாட்டு வீரர்களின் செயல்பாட்டை ஒட்டுமொத்த தேசமே பாராட்டி வருகிறது. இந்த சூழலில், தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கணை ஷமீஹா பர்வின் நிதிப்பற்றாக்குறை காரணமாகவும், பெண்கள் பிரிவில் வேறு யாரும் தேர்ச்சிப் பெறவில்லை என்பதற்காகவும் நான்காவது உலக காது கேளாதோர் தடகளப் போட்டிக்கு தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி போலந்து நாட்டில் நான்காவது உலக காது கேளாதோர் தடகளப் போட்டி நடைபெறுகிறது.
தடகள வீராங்கனையான ஷமீஹா பர்வின் கன்னியாகுமரரி மாவட்டம் கடையாலுமூடு பகுதியைச் சேர்ந்தவர் (18). ஆறு வயதில் கொடூரமான காய்ச்சலுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை காரணமாக காது கேளாத மற்றும் வாய் பேசாத முடியாத சூழல் உருவாகியது. இருப்பினும், விளையாட்டுகள் மீது அதீத ஆர்வம் கொண்டிருந்தார். மோசமான பொருளாதார சூழ்நிலைக்கு மத்தியிலும், அனைத்து வசதிகளையும் அவரின் பெற்றோர் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றனர்.
மாவட்டம் அளவிலும், மாநில அளவிலும் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினர். அதைத்தொடர்ந்து தேசிய அளவில் காது கேளாதோருக்கான ஜூனியர் தடகள போடிகளில் பல்வேறு வெற்றிகளை கடந்துள்ளார். இந்நிலையில், காது கேளாதோருக்கான ஜூனியர் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளவும் தகுதி பெற்றார். ஆனால், கொரோனா நோய்த்தொற்று காரணமாக இந்த போட்டி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், வரும் 26-ம் தேதி போலந்து நாட்டில் நடக்க உள்ள நான்காவது உலக காது கேளாதோர் தடகளப் போட்டியில் கலந்து கொல்வதற்கு தேர்வு செய்யப்பட்டார். இவருடன் சேர்த்து , தமிழகத்தைச் சேர்ந்த 5 மாணவர்கள் டெல்லியில் நடைபெற்ற தகுதிச் சுற்றில் கலந்து கொண்டனர். கடந்த மாதம் 21-ம் தேதி டெல்லியில் நடந்த தகுதித் தேர்வில் நீளம் தாண்டுதல் போட்டியில் தனது சிறப்பான செயல்திறனை வெளிபடுத்தியுள்ளார்.
ஆனாலும், உலக காது கேளாதோர் தடகளப் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களின் பட்டியலில் இவரது பெயர் இடம்பெறவில்லை. இது, ஷமீஹா பர்வினையும், அவரது பெற்றோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதுகுறித்து, ஷமீஹா பர்வினின் அம்மா சலாமத் கூருகையில், "டெல்லியிலிருந்து போட்டிக்குத் தேர்வான மாணவி ஒருவர் தகுதி இழந்ததால், என் மகளையும் போட்டிக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்தியாவிலிருந்து, பெண்கள் பிரிவில் இவர் ஒருவர் மட்டுமே தகுதி பெற்றுள்ளார். ஒரு பெண்ணை மட்டும் அழைத்துச் செல்வது சிரமம் என இந்திய விளையாட்டுக் கழகம் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
உலக அரங்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற தனது கனவுக்கு ஷமீஹா பர்வின் எத்தனை கொடுமையான நிராகரிப்புகள், சவால்கள், அவமானங்களை சந்திக்க வேண்டியுள்ளன என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.